Friday, December 06, 2013

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு!

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 


(அல்குர்ஆன் 8:25)

செவியுறுவது போல் இவர்களும் செவியுறுவார்கள் என்று நம்புவது இணைவைத்தல் இல்லையா?

தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகமாகும். ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.

இவர்கள் ஒரு காலத்திலும் சொர்க்கத்தில் நுழைய முடியாது:

இணை வைத்தல்' என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

இணை வைத்தல் பற்றித் திருக்குர்ஆன் விடுக்கும் எச்சரிக்கையைப் பாருங்கள்!

மன்னிக்கப்படாத பாவம்!

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். 


(அல்குர்ஆன் 4:48)

அழிந்து போகும் நல்லறங்கள்!

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. 


(அல்குர்ஆன் 39:65, 66)

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.


(அல்குர்ஆன் 6:88)

சுவனம் செல்லத் தடை!

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'.


(அல்குர்ஆன் 5:72)

நரகமே கூலி!

'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497

தர்ஹா கட்டத் தடை!

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610

வேண்டாம் சமாதித் திருவிழா!

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி

மனிதர்களிலேயே சிறந்தவர்களான நபி(ஸல்) தன் சமாதியிலேயே விழா எடுப்பதை தடுத்திருக்கும் போது எங்கிருந்து வந்தது இந்த கந்தூரி விழாக்கள்?

மாற்று மதச் சமுதாயம் நடத்தும் தேர்த் திருவிழாவைக் காப்பியடித்து நடத்தப்படுவதே கந்தூரி விழா.

வேண்டாம் மாற்று மதக் கலாச்சாரம்!

(மற்றக்) கூட்டத்தார்களைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை).

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) 
நூல் : அபூதாவுத் (3512)


அங்கே தேர், இங்கே கூடு. அங்கே பஜனை, இங்கே ஃபாத்திஹா.  அங்கே துவாஜா ரோகணம், இங்கே கொடியேற்றம். அங்கேயும் உண்டியல், இங்கேயும் உண்டியல். அங்கும் ஆடல், பாடல் - இங்கும் அரை குரை ஆடையுடன் ஆடல்,பாடல்,கச்சேரி. அங்கு திருநீறு, விபூதி, பிரசாதம் - இங்கே சர்க்கரையும் காய்ந்த பூவும், சாம்பிராணி சாம்பலும் பிரசாதம். அங்கு பழணி ஆண்டவர், இங்கு முஹைதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர்.

என்று முழுக்க முழுக்க மற்ற மதத்தைக் காப்பியடித்து நடைபெறும் இந்த அவலத்தைக் காண அலங்காரம் செய்து கொண்டு வருகிறது மார்க்கம் அறியாத பெண்கள் கூட்டம்.இவர்களை ரசிக்கவும் இடிக்கவும் திரளுகிறது இளைஞர் கூட்டம்.

ரோஷம் உள்ள எந்த ஆணும் தனது வீட்டுப் பெண்களை இங்கு செல்ல அனுமதிக்க முடியுமா? நம் சமுதாயப் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கும் இது போன்ற விழாக்களை ஜமாத்தார்களும், மார்க்க அறிஞர்களும், இளைஞர்களும் கண்டும் காணாமல் இருக்காலாமா?

சபிக்கப்பட்ட கப்ர் வணங்கிகள்!

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

படைப்பினங்களில் மோசமானவர்கள்!

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

இணைவைத்தலைப் பற்றி இறைவனும் இறைத் தூதரும் கடுமையாக எச்சரித்திருக்க முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் இறந்து விட்டவர்களுக்கு நினைவிடத்தை ஏற்படுத்தி அங்கே மண்டியிடுவது, நெற்றியை தரையில் வைப்பது (சஜ்தா செய்வது), இறந்துவிட்டவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, கந்தூரி விழா எடுப்பது போன்ற காரியங்களை செய்வது இஸ்லாத்தின் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு மாற்றமானதாகும்.

இதைத் தடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.குறைந்த பட்சம் அதைக் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அல்லது இணைவைப்பைக் கண்டித்து நாங்கள் பிரச்சாரக் கூட்டம் நடத்தும் போது அதில் பெருமளவு கலந்து கொண்டு ஏகத்துவப் பிரச்சாரத் திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது? சில ஜமாத்தார்கள் இதைத் தாங்களும் தடுக்காமல் இருப்பதுடன் தர்ஹாவை வழிபடும் மக்களுடன் கைகோர்த்து கொண்டு தவ்ஹீத் ஜமாத்தினரை கூட்டம் போட விடாமல் தடுக்கின்றனர். சில ஜமாத்தார்கள் இந்தக் கந்தூரியை ஊக்குவிக்கின்றனர். இது பற்றிக் அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்!

தீமைக்கு உதவாதீர்!

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங் கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.


(அல்குர்ஆன் 5:2)

இதை உடனடியாகத் தடுத்து நிருத்துங்கள்! உங்கள் பகுதியில் நடைபெறும் ஜும்மா பயான்களிலும் பெண்கள் பயானிலும் கந்தூரிக்கு செல்வது, அதற்காக உதவி செய்வது இணைவைப்பிற்க்கு துணை போகும் காரியம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இல்லையேல் மறுமையில் குற்றவாளிகளாக நிற்பீர்கள்!

எங்கள் கடமை தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. 


(அல்குர்ஆன் 36:17)