Showing posts with label கா(தல)முகர் தினம். Show all posts
Showing posts with label கா(தல)முகர் தினம். Show all posts

Saturday, February 11, 2012

கா(தல)முகர் தினம்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 6243

எப்படி வந்தது என்றே தெரியாமல் நம் நாட்டினுள் நுழைந்து கலாச்சாரத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கி, இளைஞர்களின் முன்னேற்றத்தை கேள்விக்குள்ளாக்கியதோடு மட்டுமின்றி இன்று ஊடகங்கள் மூலம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது காதலர் தினம். பருவ வயதை அடைந்த இளைஞர்கள், இளைஞிகளை மட்டுமல்லாது பேரன் பேத்தி எடுத்த தாத்தா பாட்டிக்களையும் காதலர் தின கொண்டாட்டங்களில் மூழ்க வைக்க வேண்டுமென சபதம் எடுத்து பெரும்பாலான தொலைக்காட்சிகள் பிப்ரவரி 14 அன்று காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி இந்திய சமூகத்தின் தொல்லைக்காட்சிகளாய் அவதாரம் எடுக்கின்றன. 

பரந்து விரிந்திருக்கும் இந்திய சந்தைகளை கபளீகரம் செய்ய மேற்கத்திய வல்லூறுகள் தங்களின் கழுகுப் பார்வைகளை நம் நாட்டின் மீது ஆழமாக பதித்திருக்கின்றன. சொந்த நாட்டில் விலை போகாத தங்களின் சரக்குகளை விற்றுத் தீர்க்கும் களமாக நம் நாட்டை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் பன்னாட்டு பணமுதலைகள் தினமும் ஒரு தினத்தை கொண்டாட்ட தினமாக மாற்றினாலும் ஆச்ச்சர்யபடுவதற்க்கில்லை. சீரழிந்த கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரத்தையும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இந்த நாட்டின் பண்பாட்டுத்தளத்தை பாழ்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட பணம் பறிக்கும் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டது தான் "காதலர் தினம்" என்ற கழிசடைகளின் தினம். இவர்களின் பணம் பறிக்கும் பித்தலாட்டங்களுக்கு நம் நாட்டின் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஒத்து ஊதுகின்றன. இணைய ஊடகங்கள் பலவும் தம்மை இத்தகைய அயோக்கியத்தனத்தில் தான் நிலைநிறுத்திக் கொள்கின்றன. தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று அழைத்துக் கொள்வோர் காதலர் தின கேளிக்கைகளை ஆதரிப்பதோடு மட்டுமின்றி எதிர்ப்பவர்களை பிற்போக்குவாதிகள் என்றும் அழைக்கின்றனர் என்பது கவலைக்குரிய செய்தியாகும். 

"விழியில் நுழைந்து , இதயம் கலந்து , உறவில் கலந்த உறவு" என கவிஞர்களால் உயர்த்தி பிடிக்கப்படும் காதல் இச்சமூகத்தில் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்று நாம் ஆய்வு செய்து பார்த்தோமேயானால் காதலில் விழுகின்ற பெரும்பாலான பெண்கள் தம் கற்பை மணமாகும் முன்னரே பறிகொடுத்து விட்டு "திருடனுக்கு தேள் கொட்டிய" கதையாக பலர் அமைதியாக இருந்து விடுகின்றனர் என்ற உண்மை விளங்கும். இவர்களில் பலர் சில காலம் கழித்து வேறொரு நபரை மணமுடித்து வாழ்க்கை நடத்தினாலும் தம் கணவனுக்கு செய்த துரோகத்தை எண்ணி எண்ணி தம்முடைய அமைதியை இழக்கின்றனர்.  கற்பை இழந்து விட்ட அவமானத்தில் சிலரோ தம் வாழ்வையே முடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் காதலன் வீடு முன்னர் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம், தர்ணா என்று ஊடகங்களுக்கு தீனி போடுகின்றனர். காதலால் ஏற்படும் அவலங்களால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. 

காதல் என்பது விரும்பிய பெண்ணை மனம் முடிக்க ஒரு சிறந்த வழி என்றே கழிசடை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாட பெரும் பட்டாளமே காத்திருப்பது இவர்களின் காமாலை கண்களுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் தெரியாதது போல நடிக்கின்றனர். இன்டர்நெட், சின்னத்திரை சீரியல்,  சினிமா போன்ற பல்வேறு ஊடகங்கள் பெண்களின் கற்பை எவ்வாறு லாவகமாக பெண்ணின் சம்மதத்துடன் பறிப்பது என்ற கலையை ஆண்களுக்கு கற்றுத்தருகிறது. செல்போன் , சாட் போன்றவற்றின் மூலம் ஆபாசமான பேச்சுக்களை பேசி பெண்களை தன்வயப்படுத்துகின்றனர்  காமுகர்கள். தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவைதான் இன்றைய காதலில் பிரதானமான அங்கங்களாக இருக்கின்றன. பின்னர் பெண்ணைக் காணவில்லை, வீட்டை விட்டு ஓடி விட்டாள் என பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையிடம் முறையிடுகின்றனர். சிலர் அவமானத்திற்கு அஞ்சி கூனிக்குறுகி தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 

உண்மையிலேயே ஒரு பெண்ணை மணமுடிக்க ஒருவர் விரும்பினால் அப்பெண்ணின் பொறுப்பாளரிடம் சென்று பேசி, அந்த பெண்ணையும் நேரில் பார்த்து பின்னர் அப்பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்திருக்குமானால் மணமுடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தான் இஸ்லாமிய வழிமுறை. 

"முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்." - (நூல்: நஸயீ 3183)

இத்தகைய வழிமுறைகளின் வழியாக மட்டுமே பெண்கள் தம் கற்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கும் இத்தகைய அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டும். மாறாக தம் பிள்ளைகளுடன் அமர்ந்து சினிமா , காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் பெற்றோர்கள் பிற்காலத்தில் தம்முடைய பிள்ளைகள் காதல் என்ற பெயரில் ஏற்படுத்தும் அவலங்களையும் சந்தித்து தான் ஆக வேண்டும். நோய் வரும் முன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். ஏனெனில் இன்றைய காதல் என்பது செல்போன், சாட் அல்லது சில சந்திப்புகளில் ஆரம்பித்து இரவு நேரங்களில் சென்னை மெரீனா பீச்சில், ஈ.சி.ஆர் சாலையில், திருச்சி முக்கொம்புவில் அல்லது இன்னபிற நகரங்களில் தனிமையாக சந்திக்க வாய்ப்பிருக்கும் பகுதிகளில் முடிகிறது. காதலின் முடிவு கற்பை இழத்தல் மட்டுமே. ஆகையால் பெண்களை போகப் பொருளாக்கும் காதலை ஒழிப்போம். கண்ணியமான நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்போம்.

பெற்றோர்களே! சமூக அக்கறையுள்ளவர்களாக நமது பிள்ளைகளை வளர்ப்போம். காதல் என்ற சாக்கடையில் விழாமல் அவர்களை கண்ணியமிக்கவர்களாக வார்த்தேடுப்போம். இளைஞர்களே, இளைஞிகளே  சமூக அக்கறையுள்ளவர்களாக நாம் வாழ்ந்து இந்த தேசத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்வோம். நம் நாட்டின் பண்பாட்டுத்தளத்தை , கலாச்சாரத்தை சீரழிக்கும் மேற்கத்திய இறக்குமதியான காதலர் தினத்தை புறக்கணிப்போம்.