Showing posts with label பித்அத். நரகம். Show all posts
Showing posts with label பித்அத். நரகம். Show all posts

Saturday, February 22, 2014

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமண பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் அது பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்க்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அதுவும் தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மக்களுக்காக சில துஆக்களைச் செய்துள்ளார்கள். நாம் அந்த நன்மக்கள் பட்டியலில் இருக்கிறோமா என்பது நமக்குத் தெரியாது.  இவ்வாறு திருமணப்பத்திரிகை அடிக்கக் கூடியவர் அந்தப் பட்டியிலில் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், இப்படிக் கூறினால், நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றம் சேரும். நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினால், அதற்கான பரிசு நரகமாகும்.

நல்ல முஸ்லிமாக வாழ்பவர்களின் நிலையே இது தான். ஆனால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமணப் பத்திரிகை அடிப்பவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாத்தை கடைப்பிடிப்பதில்லை. எந்த திருமணத்துக்காக பத்திரிகை அடிக்கிறார்களோ அந்த திருமணத்தையாவது நபிகள் நாயகம் காட்டிய வழியில் நட்த்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அல்லாஹ் மஹர் கொடுக்கச் சொன்னால், இவர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் நடத்திக் கொண்டு, நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத் என்று போட்டால், இவர்கள் நபிகள் நாயகத்தைக் கேலிப் பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் உடன் பிறப்புக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் ஷைத்தானின் தம்பிமார்களாக இருக்கும் வகையில் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறுவதும் நபிகள் நாயகத்தை மேலும் அவமரியாதை செய்யும் செயலாகும்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத்துக்கு உரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்திருக்க, பரக்கத்தின் வாசலை இழுத்து மூடும் வகையில் நடந்து கொண்டு நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறினால், அது நபிகள் நாயகத்தை இவர்கள் கேலிப்பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

திருடச்செல்லும் ஒருவன் பிஸ்மில்லாஹ் கூறி திருடுவது போல், பிஸ்மில்லாஹ் கூறி பன்றி இறைச்சி சாப்பிடுவது போல், அல்லாஹும்ம ஜன்னிப்னா என்ற துஆவை ஓதி விபச்சாரியுடன் செலவ்து போல் இவர்களின் முரண்பாடு அமைந்துள்ளது. திருமணத்தில் நபி வழியை மீறுவதுடன் நபிகள் நாயகத்தைக் கேலி செய்த குற்றத்துக்கும் இவர்கள ஆளாகிறார்கள்.