சமீபத்தில் பிஜே அவர்களின் பேட்டி ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் குரல் கொடுக்கவில்லை?' என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலாக இந்த ஆக்கம் வெளிப்படுகிறது. இது சம்பந்தமாக பிஜே அவர்களின் பதில் இதோ,
சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?
சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.
தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.
ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.
பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனி மேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறை வாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும் படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.
சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.
சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.
இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.
ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.
நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.
இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.
அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.
நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.
சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.
சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.