Showing posts with label பெண் உரிமைகள். Show all posts
Showing posts with label பெண் உரிமைகள். Show all posts

Tuesday, May 20, 2014

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

ஷம்சுல்லுஹா (ரஹ்மானி)


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு:

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! 

(அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
RASMINMISC.TK

Friday, September 20, 2013

கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்


கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் உள்ளன
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உமது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன என்ற கூறினார்கள் (புகாரி (1974)

மனைவியிடம் சிறந்தவரே மக்களில் சிறந்தவராவார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளர்களில் ஈமானில் முழுமையானவர் அவர்களில் அழகிய நற்குணமுடையவரே தன்னுடைய மனைவியிடத்தில் குணத்தால் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தன்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார். நான் என்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவனாவேன். நூல்: திர்மிதி (3830)

கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே., நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் (19190)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) உபதேசங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல் திர்மிதி (1083)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டாம். (ஏனெனில்) பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள் நூல்: புகாரி (5204)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என்னுடைய அறிவுரையை ஏற்,றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில் பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள்.மேலும் விலா எலும்பிலேயே அதன் மேல் பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலானதாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். நூல்: புகாரி (3331)

மனைவி தொழுகைப் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் மறுக்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிக்கு (தொழ)ச் செல்வதை தடுக்காதீர்கள். நூல்: புகாரி (900)
கணவன் மனைவிக்குச் செலவிடுதல்
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல் குர்ஆன் 4: 34 ‏)
மனைவியை வெறுப்பது கூடாது
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான் (அல் குர்ஆன் 4: 19 ‏)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி‎கொள்ளட்டும். நூல்: முஸ்லிம் 2915

மனைவியோடு பிணக்கு ஏற்பட்டால் நடந்து கொள்ள வேண்டிய முறை
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான் (அல் குர்ஆன் 4: 34 ‏)

மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப் பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 4 129
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவர். இருவரில் ஒருத்திக்கு எதிராக இன்னொரு மனைவியின் பக்கம் சாய்ந்து கொண்டால் மறுமையில் தனது இரண்டு புஜங்களில் ஒன்றை சாய்ந்தவனாக இழுத்துக் கொண்டு வருவான் நூல் அஹ்மது (7595)

நீண்டநாள் பயணத்திலிருந்து திரும்பும் போது இரவில் வீட்டிற்கு செல்லக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் ஒருவன் (நீண்ட நாள் பயணத்திலிருந்து வீடு திரும்பும் போது எந்தவித தகவலும் தெரிவிக்காமல்) தன்னுடைய குடும்பத்தினரை பயமுறுத்தும் வகையிலும் அவர்களுடைய குறைகளை கண்டறியும் நோக்கத்திலும் இரவு நேரங்களில் வீட்டுக் கதவுகளை தட்டுவதை தடைசெய்தார்கள் நூல் முஸ்லிம் (3559)

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
நல்ல மனைவி
நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன்) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் (1417)

கணவனின் கைகளில்தான் மனைவியின் சொர்க்கம் இருக்கிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில்) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக இருப்பார். நூல்: அஹ்மத் (18233)
அதாவது கணவனுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்ற பெண் அதன் காரணமாக சுவர்க்கம் செல்வாள். முறையாக நிறைவேற்றாத பெண் அதன் காரணமாக நரகம் புகுவாள்.

கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது) நூல்: திர்மிதி (1079)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள் நூல்: ஹாகிம் (7244)

மனைவியே கணவனுடைய வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல்: புகாரி(2554)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர். நூல்: புகாரி (5365)

கணவனுடைய உபகாரங்களுக்கு நன்றி மறக்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள் நூல்: புகாரி (29)

மலக்குமார்களின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தன்மனைவியைப் படுக்கைக்கு அழைத்து அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட அதன் விளைவாக அவர் இரவுப் பொழுதை கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். நூல்: புகாரி (3237)

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல் திர்மிதி (1083)

கணவனுடைய அனுமதியில்லாமல் செய்யக் கூடாதவை
ஒரு பெண் தன்னுடைய கணவன் ஊரில் இருக்கும் போது அவரது அனுமதியில்லாமல் (சுன்னத்தான) நோன்பு நோற்பது கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக் கூடாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அவனது பொருளை தர்மமாக) செலவு செய்தால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும் நூல்: புகாரி (5195)

கணவனுடைய அனுமதியில்லாமல் அவசியமான நல்லகாரியங்களுக்கு தேவையான அளவு செலவுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம்

(ஒரு முறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என்குழந்தைக்கும் போதுமான பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நூல்: புகாரி (5364)

கணவன் மற்றொரு மனைவியை தலாக் விடுமாறு கூறுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை) க் காலி செய்(துவிட்டு அதை தனதாக்கிக் கொள்) வதற்காக அவளை விவாகரத்துச் செய்துவிடுமாறு (தன் கணவணிடம்) கோர அனுமதியில்லை. அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும். நூல் புகாரி (5152

Wednesday, September 18, 2013

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கும் மத்ஹபுகள்

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கும் மத்ஹபுகள்

 அப்துந் நாஸிர்


இஸ்லாத்தின் அடிப்படைகள் திரு மறைக் குர்ஆனும் திரு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் தான். ஆனால் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் இந்த அடிப்படையை விட்டும் விலகிய காரணத்தினால் எண்ணற்ற பிரிவுகள் இம்மார்க்கத்தில் நுழைந்து அவைதான் இஸ்லாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்தப்பிரிவுகள் அனைத்தும் இம்மார்க்கத்திற்காக தியாகம் செய்த அறிஞர் பெருமக்களின் பெயரைப் பயன்படுத்தித் தான் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் இமாம்களில் எந்த ஒருவரும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறவேயில்லை. மாறாக திருமறைக் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையுமே பின்பற்றுமாறு கூறியுள்ளார்கள்.

இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த மத்ஹபு பிரிவுகளினால் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட நல்ல காரியங்கள் சுன்னத்தான நடைமுறைகள் கட்டளைகள் மூடிமறைக்கப் பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல் நபியவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமான காரியங்கள்தான் சரியானவை என்று கருதி நடைமுறைப்படுத்தவும் படுகிறது.

அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் பெண்களை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வரவிடாமல் தடைசெய்வது. பெண்கள் அல்லாஹ்வைத் தொழுவதற்காக பள்ளிவாசல்களுக்கு வருவதை தடை செய்வதில் மிக முக்கிய பங்காற்றுபவர்கள் தமிழக ஜமாத்துல் உலமாவினர்தான். இவர்கள் தங்களுக்கு சான்றாக திருமறை வசனங்களையோ ஹதீஸ்களையோ காட்டமாட்டார்கள், மாறாக தங்கள் பிரிவிற்கென்று உள்ள மத்ஹபு கிரந்தங்களைத் தான் ஆதாரமாக்கு கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணற்ற ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகை நடத்துவதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதோ அவற்றைத் தருகின்றோம்.

தொழுகையை நீட்டித் தொழவேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி)
நூல்: புகாரி (868, 707)

பிள்ளைக்குட்டிகளுடன் குடும்பம் சகிதம் கூட்டாகவல்லவா கூட்டுத் தொழுகைக்கு வந்திருக்கின்றனர் பெண்கள்? இந்த ஹதீஸை அவர்கள் பார்க்கவில்லையோ? அவர் இதை எப்படி இஸ்லாமிய வழிமுறை இல்லை என்று கூறலாம்.

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77 வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள் என்னருமை மகனே இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (763) திர்மிதி (283)

மக்ரிபில் நபி (ஸல்) அவர்கள் அன்று ஓதிய அத்தியாயத்தை இன்று இப்னு அப்பாஸ் (ரலி) ஓதக்கேட்டவுடன் பரவசம் அடையும் இந்த அம்மையார் பள்ளிக்கு வந்திருந்தால் தானே இவ்வளவு பசுமையாக நினைவு கூறமுடியும்.
குரல் கொடுக்கும் ஆண்களும் கைதட்டும் பெண்களும்

சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்குரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) நூல்: புகாரி (1203) திர்மிதி (337)

ஒரே பள்ளியில் ஆண்களும் பெண்களும் தொழும் போது இமாமுக்கு கூட்டுத் தொழுகையில் தவறு ஏற்பட்டால் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கற்றுத் தருகிறார்களே! வீட்டில் தொழும் பெண்களுக்கா இந்தக் கட்டளைகள்?
பள்ளிக்கு வந்து விட்டு திரும்பும் பெண்கள் நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: புகாரி (837) (866) (875)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப் படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்படமாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (867, 372, 578, 872)

பள்ளியில் உறங்கி வழியும் பெண்கள்

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ”இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத்தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை” என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (864, 866, 569, 862)

இந்த ஹதீஸ் ஆண்களும் பெண்களும் பள்ளியில் தூங்கி வழிவதைக் காட்டுகிறது.

இமாமின் குறைகளைச் சுட்டிக்காட்டும் பெண்கள்

 எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபார கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாக குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிருத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தா செய்யும் போது அது என்னை விட்டு விலகி (எனது பித்தட்டு தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண் உங்கள் இமாமின் பித்தட்டை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா? என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்த சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரி (4302)

ஒரு பெண் சிறு வயது இமாமிடம் கண்ட குறையை எடுத்துச் சொல்கின்றாரே அவர் இந்த ஜமாத்திற்காக பள்ளிக்கு வந்ததால் தானே இந்தக் குறையைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

பள்ளிக்கு வரும் பெண்கள் நறுமணம் பூசக் கூடாது

உஙகளில் ஒருத்தி பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசக் கூடாது என்று எங்களுக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அ வர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)
நூல்: முஸ்லிம் (674)

பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து பள்ளிக்கு ஒரு பெண் தாரளமாக வரலாம் ஆனால் நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது என்று தானே விளங்க முடியும். அறவே வரக்கூடாது என்று விளங்க முடியுமா?

கிரகணத் தொழுகையும் பெண்களும்

எனக்கு மயக்கம் ஏற்படும் அளவிற்கு நானும் (கிரகணத் தொழுûயில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல்: புகாரி (1053)

பள்ளியில் தொழும் கிரகணத் தொழுகையில் பெண்களும் சேர்ந்து தொழுதிருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆக சாதாரணமான தொழுகையிலிருந்து விசேஷமான தொழுகை வரை பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கான வாய்ப்பை இந்த மார்க்கம் வழங்கியுள்ளது என்பதை தெளிவாக விளங்கலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் ஆவேசம்

”உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) (தன்னுடைய மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ் அவர்கள் ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு ” நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்’
அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்
நூல்: முஸ்லிம் (666)

மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவில் பள்ளிக்கு பெண்கள் வருவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னதும் இப்னு உமர்(ரலி) அவர்களின் மகனார் பெண்களை வரவிடமாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள் என்று பதில் சொல்கின்றார். உடனே அவர்ளை கடுமையாக வெறுக்கின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சொல்கிறேன் நீ வரவிடமாட்டேன் என்கிறாயா? என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஜாஹித்
நூல்: முஸ்லிம்(670)

இந்த பதிலைச் செவியுற்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனின் நெஞ்சில் ஓங்கி அறைந்தார்கள் என்று முஸ்லிமில் இன்னொரு இடத்தில் (671) இடம் பெற்றுள்ளது.

தான் மரணிக்கும் வரை இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனுடன் பேசவில்லை என்ற செய்தி அஹ்மது(4696) எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திய செயலுக்கு மாற்றமாக செயல்படுவேன் என்று சொன்ன தன் மகனுடன் தகப்பனார் இப்னு உமர் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை பேசவில்லை எனும் போது எந்த அளவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் உறுதியாக இருந்திருக்கின் றார்கள் என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது.

இப்னு உமர் (ரலி) எப்படி பின்பற்றினார்களோ அப்படித் தான் நாம் நபிகள் நாயகம் (அல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

ஜமாத்துல் உலமாவின் ஏமாற்று வேலை

முஸ்லிம் பெண்களில் சிலர் இரண்டாம் கலீஃபா அவர்களின் மனைவியிடத்தில் அனுமதி கோரினாராம். அதற்கு அம்மனைவியார் உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அதுசரிதான் என்றும், யூதப் பெண்கள் எப்படி வணக்கத் தலங்களில் அனுமதிக்கப்படவில்லையோ அது போல் முஸ்லிம் பெண்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்று பதில் கூறினாராம். இரண்டு காரணங்களால் இந்தக் கூற்று நிராகரிக்கப்படவேண்டும

முதலாவதாக,

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
என்ற அல்லாஹ்வின் கட்டளையில் உறுதியாக இருந்த உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அமல்படுத்திய நடைமுறையை எப்படி மாற்றத் துணிவார்கள்?

இரண்டாவதாக, உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று ஒரு அஸ்திவாரத்தைப் போட்டு, உமர் (ரலி) அவர்களை புகழ்வது போன்று ஒரு மாயையைத் தோற்றுவித்து, இச்செய்தியைக் கூறுவது உமர் (ரலி) அவர்களை மிகத் தரக்குறைவாகக் கேவலப்படுத்துகின்றது என்பதாலும், இது நிராகரிக்கப்பட வேண்டும்.

உமர் (ரலி) அவர்களை இது எப்படிக் கேவலப்படுத்துகிறது? அண்ணல் நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றி, யூதர்களின் நிழல் கூட தன்மீது படியாமலும், படராமலும் வாழ்க்கையை நடத்திச் சென்ற உமர் (ரலி) அவர்கள் பாழாய்ப் போன யூதர்களின் பாதையைப் பின்பற்றி தொழத் தடைவிதித்தார்கள் என்று மோசமான சிந்தனையை அல்லவா இது நம்மிடம் பதியவைக்கின்றது என்ற அடிப்படையில் இது நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். இந்த ஆதாரமற்ற செய்தியைக் கொண்டு மார்க்கமாகக் கூறுவது மார்க்கத்தில் விளையாடுவதாகும்.

இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் செய்திக்கு நேர்முரணாக ஆதாரப்பூôவமான செய்தியை புகாரியில் காண்கின்றோம்

உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் சுப்ஹு, இஷா தொழுகை களை பள்ளியில் ஜமாஅத்தாக தொழச் செல்வார்கள். அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதை தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, அதற்கு, அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (900)

உங்கள் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (873)

என்ற ஹதீஸின் அடிப்படையிலும் தன்னைத் தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் தடுக்க முடியாது, தடுக்கவும் மாட்டார்கள் என்று பள்ளிக்குச் சென்று வரும் உமர் (ரலி) அவர்கள் மனைவியின் கூற்று, ஜமாத்துல் உலமா எடுத்து வைக்கும் கூற்றுக்கு நேர் முரணான கருத்தாகும் என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் நாம் விளங்க வேண்டும். உமர்(ரலி) அவர்கள் தடுத்தார்கள் என்றே ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இத்தனை ஹதீஸ்களையும் ஓரங்கட்டிவிட்டு, உமர் (ரலி) அவர்களின் சொல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லுவதின் மூலம் உமர்(ரலி) அவர்கனை நபி (ஸல்) அவர்களை விட உயர்த்தியதாக ஆகாதா? இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி (ஸல்) அவர்கள் (இன்று) கண்டறிந்தால், பனூ இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 869)

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற கருத்தையல்லவா இந்த செய்தி தருகின்றது என்று கேட்கலாம்.

அதிகமான சேட்டை செய்யும் தன் தம்பியைப் பார்த்து அண்ணன், நம்முடைய தகப்பனார் உயிரோடு இருந்திருந்தால் உன்னைக் கொன்றிருப்பார் என்று சொல்லும் போது நாம் என்ன விளங்கிக் கொள்வோமோ அதைத் தான் நாம் இங்கு விளங்க வேண்டும். பெண்களிடம் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் காணும் போது அதைக் கண்டு பொறுக்காமல் இப்படியொரு கருத்தைத் தெரிவிக்கின்றார்கள். என்பதை நாம் தெளிவாகவே உணர முடிகின்றது.

 ஆலிம் பெருமக்கள் (?) சிந்திக்கத் துவங்கி பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பது போன்ற முத்துக்களைச் சிந்தவும் செய்வார்கள் என்ற காரணத்தால் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வாறு ஒரு நிரந்தரக் கட்டளையைப் பிறப்பிக்கச் செய்துள்ளான்.

அல்லாஹ்வின் பெண் அடியார்களான (பெண்கள்) பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (900)

இவ்வளவு சான்றுகளைக் கண்ட பிறகும் நபியவர்களின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுவது நியாயமா என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் போன்ற துப்புரவற்ற காலகட்டங்களில் பள்ளிக்கு வரஇயலாது. இந்த நிலையை நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே பெண்களை பள்ளிக்கு வரவிடமால் தடுப்பதே சிறந்ததாகும் என சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட குளிப்புக்கடமையான நிலையில் பள்ளிக்கு வருவதற்கு மார்க்கத்தில் தடையுள்ளது. ஒருவன் குளிப்புக் கடமையான நிலையில் இருக்கிறானா? இல்லையா? என்பதையும் நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே ஆண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என இவர்கள் தடைவிதிப்பார்களா?

இப்படிப்பட்ட தேவையற்ற காரணங்களைக் கூறி பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடைவிதிப்பது நபி வழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.
பெண்களும் பெருநாட்களும் நபி (ஸல்) அவர்களுடைய காலகட்டத்தில் சாதரண நாட்களிலேயே பெண்கள் பள்ளிக்கு வந்து ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றி யிருக்கிறார்கள் என்பதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளைக் கண்டோம்.

சாதாரண நாளிலேயே பெண்கள் பள்ளியில் வந்து தொழலாம் எனும் போது பெருநாளில் தொழலாமா? என்ற கேள்வி அடிபட்டு போய்விடுகின்றது. பெண்களுக்கு என்று உள்ள உபாதையான காலகட்டங்களில் பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் தொழமுடியாது. இக்காலகட்டத்தில் மட்டும் பள்ளிக்கு வரமுடியாது அவ்வளவுதான். இது போன்ற காலகட்டங்களில் பெண்கள் பீடைகள் என்று கருதி வீட்டின் மூலையில் முடக்கி வைத்து முக்காடிட்டு அழச் செய்யாது இந்த மார்க்கம்.

அன்னை ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது மாதவிலக்காகி விடுகின்றார்கள். அப்போது அந்த நிலையை எண்ணி அன்னையார் அழும்போது,

நீ மாதவிலக்காகி விட்டாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதித்திருக்கும் உபாதையாகும் இது. ஹாஜிகள் செய்யும் எல்லா வணக்கங்களையும் செய்து கொள்க. ஆனால் நீ குளிக்கும் வரை தவாஃப் மட்டும் செய்யாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (294)

அண்ணலாரின் ஆறுதல் மிக்க இந்த வார்த்தைகள் இது பெண்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டிய சாபத்திற்குரிய காரியம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

இது போன்ற கால கட்டங்களில் பெண்கள் பெருநாளன்று கவலைப்பட்டு வீட்டில் முடங்கி விடக்கூடாது. அதே சமயத்தில் இந்த நிலையில் பள்ளிக்கும் வரஇயலாது என்பதாலோ என்னவோ அந்தத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் திடலுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயம் தொழும் போது தொழுமிடத்தை விட்டும் தள்ளியிருக்க வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் உள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாத விடாயுள்ளவர்கள் தொழும் இடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி (981)

ஆடையில்லாத பெண்ணுக்கு ஆடைவழங்குதல்

நாங்கள் இரு பெருநாட்களிலும் தொழுமிடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண்வந்து பனீ கலஃப் வம்சத்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரது சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக இந்தச் செய்தியை அறிவித்தார். (அவருடைய அறிவிப்பில் பெருநாள் தொடர்பாக இடம் பெற்ற செய்தி இதோ)
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை யளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 324)

அடுத்த பெண்ணுக்கு ஆடையில்லாவிட்டால் கூட ஆடையை கொடுத்து திடலுக்கு வரச் சொல்கிறார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இது பெருநாள் தொழுகை பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பெண்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கண்டோம். இவ்வளவு சான்றுகளைக் கண்ட பின்பும் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க முயன்றால்...அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழை யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர் களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.