Showing posts with label TNTJ நிலைப்பாடு. Show all posts
Showing posts with label TNTJ நிலைப்பாடு. Show all posts

Friday, March 20, 2015

திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்

திருமண நிலைப்பாடு
திருத்தங்களும் தீர்வுகளும்
"கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!''
"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!''
இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.
கால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா? பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன?
வரதட்சணைக் கொடுமை! வாட்டுகின்ற திருமணச் செலவு! இவை தான் இதற்குரிய பதில்.
இதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
இந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், "மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில்  நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.
மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
விருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள  சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,
மண்டப திருமணங்களில்  (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
சில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.
இது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.
மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருமண விருந்து
எளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819
விருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.
இதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.
விருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.
ஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.
விருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.
அதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.
ஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


-மார்ச் ஏகத்துவம் 2015

Thursday, January 31, 2013

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் வெளியிடலாமா ?TNTJ நிலைப்பாடு (வீடியோ)

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபத்தை வெளியிடலாமா ?




காட்சிகளை நீக்கி விஸ்வரூபத்தை வெளியிடலாமா ?-TNTJ from Adiraitntj on Vimeo.



விஸ்வரூபம் பிரச்சினை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் விளக்கம்:

சகோ.பஷீர் தொடர்பு கொண்டது உண்மை. அவரை நாம் பிரதிநிதியாக அனுப்பவில்லை. 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும்.

பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் வாசல் திறக்கப்பட்டாம் வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது.
...
23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் கூடாது. 23 அமைப்புகள் இவ்விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக்கொள்ளும்.

இவ்விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம்.