Showing posts with label மாலேகான். Show all posts
Showing posts with label மாலேகான். Show all posts

Sunday, December 30, 2012

மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கைது


டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.

நன்றி : http://tamil.oneindia.in/news/2012/12/30/india-rss-member-nia-net-2006-malegaon-blast-167088.html