Showing posts with label தொழுகையின் சட்டங்கள். Show all posts
Showing posts with label தொழுகையின் சட்டங்கள். Show all posts

Saturday, March 29, 2014

மழை தொழுகையின் சட்டங்கள்

மழை தொழுகையின் சட்டங்கள்

மழைத் தொழுகை:

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
  • சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்
  • மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்
  • திடலில் தொழ வேண்டும்
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்
  • அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.

தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல், பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1012, முஸ்லிம் 1489

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 1024

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1632

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160

இந்த ஹதீஸில் 'பெருநாள் தொழுகையைப் போல் தொழுவித்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகையைப் போல் என்று வர்ணிப்பது பெருநாள் தொழுகையில் கூறப்படும் கூடுதல் தக்பீர்களைத் தான். எனவே பெருநாள் தொழுகையில் கூறுவதைப் போல் முதல் ரக்அத்தில் 7 கூடுதல் தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5கூடுதல் தக்பீர்களும் சொல்ல வேண்டும்.

மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை 

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய,  செழிப்பான,  உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 988 

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1013  

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்;நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 992

இந்த கட்டுரை சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் எழுதிய 'நபிவழியில் தொழுகை சட்டங்கள்' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலை முழுமையாக படிக்க இங்கே செல்லவும்.