Showing posts with label மாணவ உலகம். Show all posts
Showing posts with label மாணவ உலகம். Show all posts

Thursday, March 26, 2015

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!
                                                                                             ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத்


அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம் தான்.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)

அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு.

பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை.

ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடு தான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.

மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:132)

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (657)

தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பது தான். 


நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர். 
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?
இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!

குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள்.  (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)


Wednesday, March 18, 2015

உலக ஆசை!

உலக ஆசை!

ஹீன் பின்த் ஜாஹிர் ஹுஸைன்

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் அதை எதற்காகப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கத்தை அது செயல்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிந்து நடக்கிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து விட்டு அழிந்து போகும் இந்த உலகமே பெரிது என வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பில் வாழ்கிறான்.

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை கிடையாது என நம்புவோரின் நிலை இதுவென்றால் மறுமை வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. உலக ஆசையில் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து வாழ்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால் இந்த உலகத்தை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை நாங்கள் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்''எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ளது'' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: திர்மிதி,இப்னுமாஜா

நாம் வெளியூருக்கு பயணம் செய்தால் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூரில் நமது வேலையை முடிப்போம். அதே போல் தான் இந்த உலகமும். இது நிரந்தரம் கிடையாது. நாம் அனைவரும் மறுமையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தான்.

இந்த உலகம் என்பது வெறும் வீணும் விளையாட்டுமே என்று அல்லாஹ்வும் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? அல்குர்ஆன். 6:32)

இவ்வுலகை விட மறுமை தான் சிறந்தது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது நாம் மறுமையைப் பெரிதாக நினைக்கிறோமா?

தங்கள் பிள்ளைகள் உலகக் கல்வியில் முன்னேற வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புகிறார்களே தவிர மார்க்கக் கல்வி கற்று ஆலிமாக ஆலிமாவாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. இத்தனைக்கும் மார்க்கக் கல்வி கற்க இலட்சக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை, சீட் கேட்டு அலையத் தேவை இல்லை. மிக இலகுவாக கிடைக்கும் மார்க்கக் கல்விக்கு இவர்கள் மதிப்பதில்லை. ஒரு வேளை பணிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலாகி விட்டால்  மதரஸாவில் சேர்க்க நினைக்கிறார்களே தவிர மார்க்கப் பிரச்சாரராக தங்கள் பிள்ளைகள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு. மறுமையில் வெற்றியைத் தேடித் தரும் மார்க்கக் கல்வியில் இவர்களின் நிலை இது.

அது போல் இவ்வுலகில் பணம் வீடு நகை என எல்லா வசதிகளுடனும் சொகுசுகளுடனும் வாழ விரும்புவோர் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பங்களை அடைய ஆசைப்படுவதில்லை.

அதே நேரத்தில் இந்த உலகத்தை ஆசைப்படக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவ்வுலகம் என்பது காஃபிருக்கு தான் சுவர்க்கமே தவிர முஸ்லிமைப் பொருத்த வரை ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.உலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து  மறுமையை மறந்து விடக் கூடாது.

நாம் மரணித்த பிறகு நம்மை பின் தொடரும் மூன்று காரியங்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்

'ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.

 அவைநிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084

நாம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமோ நம் மீது அதிகமான பாசம் செலுத்தும் குடும்பமோ மரணத்திற்குப் பிறகு நம்மைப் பின் தொடராது. மாறாக நாம் செய்யும் நல்லமல்களே நம்முடன் வரும். எனவே அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும்.

 நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் (அல்குர்ஆன். 98:7) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது கடலில் நம் விரலை முக்கியெடுத்தால் எந்த அளவிற்கு தண்ணீர் சொட்டுமோ அந்த அளவு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த அற்ப உலகத்தில் சிறிது செல்வம் நமக்குக் கிடைத்ததும் சிலருக்கு ஆணவமும் ஆடம்பரம் எனும் பெயரால் காசைக் கரியாக்கும் பழக்கமும் திமிரும் வந்து விடுகிறது. மற்றவர்களை மட்டமாக நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் உலக ஆசைக்கு அடிபணிந்து சினிமா, மது, சூது என சீரழிந்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் செய்யும் இந்த தவறுகளால் நிரந்தரமாக கிடைக்க இருக்கிற மறுமையின் இன்பங்களை இழக்க வேண்டி வரும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இனி வரும் காலங்களிலாவது மறுமைக்காக வாழும் நன்மக்களாக நாம் மாறுவோம். அதிக நன்மை புரிவோம்.

குறிப்பு : ஒவ்வொரு வாரமும்  பெண்கள் பயான்  நடைபெறும்போது  ஒரு மாணவி  பயான் செய்கிறார்  அதனை இங்கே தருகிறோம்