Tuesday, January 24, 2012

நபிவழித் திருமணம் - சிரிக்க வைக்கும் கேள்விகளும் பதில்களும்

சமீபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிலால் நகர் பள்ளியில் நடத்தி வைத்த நபிவழித் திருமணத்தை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தியின் கருப்பொருள், நபிவழித் திருமணங்களுக்கு தடைபோடும் ஜமாஅத்தார்கள் மத்தியில், பிலால் நகர் ஜமாஅத்தினர் திருமண பதிவேடு தந்து, பள்ளியிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்ற சொன்னதை வைத்து, பிற ஜமாஅத்தார்கள் இவ்வாறு செய்வார்களா? என்று எழுதியிருந்தோம். இதை பார்த்தவுடன் பலருக்கு வயிற்றெரிச்சல் கிளம்பியது. 

இதை பார்த்தவுடன் ஒரு சகோதரர், நீங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். சகோதரா, நாங்கள் மட்டும் தான் நபிவழியில் திருமணம் செய்துள்ளோம் என்று நாங்கள் எங்கே குறிப்பிட்டுள்ளோம்? மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று கூறுவது நியாயமா? என்றும் கேட்டுள்ளார் அந்தச் சகோதரர், நாங்கள் எங்களது செய்தியில் அவ்வாறு மற்றவர்களை தூய்மையற்றவர்கள் என்று எங்குமே கூறவில்லையே! நீங்கள் கேட்கும் கேள்விகளை பார்த்தால்,  எங்கோ  பிரச்சினை இருப்பது போல் தோன்றுகிறது, இருந்தாலும் அதை கிளற விரும்பவில்லை. நபிவழித் திருமணம் என்று சொல்லுவதால், அது நபிவழித் திருமணங்களாக ஆகிவிடாது. லட்சம் லட்சமாக வரதட்சனை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை கூட, நமது ஆலிம்கள், 'திருமணம் எனது வழிமுறை' என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லித்தான் நடத்துகிறார்கள். அந்த ஆலிம்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீசை சொல்லி ஆரம்பிப்பதால், அது நபிவழித் திருமணமாகாது. 

நபிவழியில் யார் திருமணம் செய்தாலும் அது பாராட்டப்பட வேண்டியது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. நாம் இதுபோன்ற திருமணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு காரணம், மக்களை இவ்வாறு செய்யுங்கள் என்று தூண்டுவதற்காக தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், ஒன்றை அடித்துச் சொல்லுவோம், அதிரையில் அதிகமாக நபிவழித் திருமணங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் நடத்திவைத்துள்ளது. இதை தம்பட்டம் அடிப்பதற்காக நாங்கள் சொல்லவில்லை (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரையில் இதுவரை நடத்திய நபிவழித் திருமணங்கள் பற்றி அறிய). நீங்கள் மற்றவர்கள் அனைவரும் நபிவழித் திருமணத்தை ஒரு நாளுக்கு ஐந்து பத்து என்று நடத்துவதை போல் பேசுவதால், இதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் எற்படுகிறது.

அடுத்தாக, அதே சகோதரர் நீங்கள் இது போன்ற திருமணங்களை செய்து பெருமையடிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். உங்களின் திருமணத்தை நீங்களே தம்பட்டம் அடிப்பது பெருமை. உங்களின் திருமணம் பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு இருந்து, அதை மாற்றவர்கள் பெருமையாக சொன்னால், அது தம்பட்டம் ஆகாது. அதுதான், இந்த திருமணத்திற்கும், மணமகன் வந்து இங்கு தம்பட்டம் அடிக்கவில்லை. நபிவழித் திருமணங்களை ஜமாஅத்கள் அங்கரிக்க வேண்டும், வரதட்சனை திருமணங்களை தடைசெய்ய வேண்டும், மக்களும் எளிமையான நபிவழித் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும், திருமணங்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த சுன்னத்கள் அனைத்தும் பேணப்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தான் இந்த செய்தி பதியப்பட்டது. இது பெருமையாகாது என்பது குர்ஆன் ஹதீசை விளங்கியிருந்தால் நன்றாக புரியும்.

அதேபோல், எளிமையான திருமணங்கள் நடக்கத்தான் செய்கிறது என்கிறார். எளிமையான திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணம் அல்ல, வரதட்சனை இல்லாத திருமணங்கள் அனைத்தும் நபிவழித் திருமணங்கள் அல்ல.

நபிவழித் திருமணங்கள் என்றால், அல்லிக்குத்து பைனகுமா போன்ற எந்த பித்அத்தும் இருக்க கூடாது, வரதட்சனை இருக்கக்கூடாது, பெண் வீட்டு விருந்து இருக்கக்கூடாது, திருமணத்தில் நபி (ஸல்) காட்டிய அனைத்து வழிமுறைகளும் பின்பற்றபட வேண்டும். இதை வைத்து, உங்களின் திருமணம் நபிவழித் திருமணமா? என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, நாம் நடத்திய திருமணம் நபிவழித் திருமணம் இல்லை என்பதற்கு இவர்கள் கண்டுபிடித்த விஷயம் மணமகன் தாடி வைக்கவில்லை என்பதாகும். நபிவழித் திருமணத்திற்கு தாடி வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மணமகன் தாடி வைக்கவில்லை என்றால், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தை செய்யவில்லை என்று தான் ஆகுமே தவிர, தாடி வைக்காத காரணத்தினால், இது நபிவழித் திருமணம் அல்ல என்று மார்க்கம் அறிந்தவர்கள் சொல்ல மாட்டார்கள், காரணம் தாடி திருமணத்திற்காக பிரத்யேகமாக சொல்லப்பட்ட சுன்னத் அல்ல. ஒருவர் தாடி வைத்துள்ளாரா? இல்லையா? என்பதை நேரில் பார்க்கும் போது தான் தெரியும், காரணம், சிலருக்கு தாடியே வளர்ந்து இருக்காது, சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். மணமகனை நேரில் பார்க்காதவர்கள், போட்டேவை பார்த்து தாடி வைக்கவில்லை என்கிறார்கள். இவர்களால் கண்டுபிடிக்க முடிந்த தவறு இது ஒன்று தான். இருந்தாலும் மணமகன் தாடி வைத்துள்ளார் என்பதை போட்டேவை Zoom செய்து பார்க்கும் எவரும் புரிந்துக்கொள்வார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள காழ்புணர்வு தான், அவர்கள் செய்யும் ஒரு நல்ல செயலை உங்களால் ஏற்க முடியாமல் போவதற்கு காரணம். இதற்கு முன் சில இணையதளங்களில், பல திருமணங்களை பற்றி பில்டப் கொடுத்து, அழகான திருமணம் என்றெல்லாம் தம்பட்டம் (உங்கள் பாணியில்) அடித்தார்கள், அப்போது எல்லாம் நீங்கள் வாய்திறக்கவில்லை என்பதை நடுநிலையாளர்கள் அவதானிக்காமல் இல்லை. இதே திருமணத்தை பற்றி வேறு ஒரு இணையத்தில் புகழும் கூட்டம், தவ்ஹீத் ஜமாஅத் செய்த காரணத்தினால், வயிற்றெரிச்சல் தாங்காமல், இவர்களிடம் எப்படியாவது தவறை கண்டுபிடிக்க வேண்டும் என்று துடிக்கிறது.

இறுதியாக, தனிநபர் தாக்குதல்களை அனுமதிக்க மாட்டோம் என்று நியாயம் பேசுபவர்கள், மணமகன் தாடி வைக்கவில்லை (அவர் வைத்து இருந்தும் கூட) என்ற தனிநபர் தாக்குதலை அனுமதித்தது ஏன்? தாடி என்பது ஐந்து அல்லது ஆறு நபர்கள் சேர்ந்து செய்யும் சுன்னத்தா? அல்லது உங்களின் நியாய தத்துவம் வேற்று கிரகத்தினருகானதா? (தாடி இருப்பதாக மறுப்பு தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை)

எனவே, நீங்கள் மற்றவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணத்தால், நபிவழியை எதிர்க்காதீர்கள் என்பதை அறிவுரையாக சொல்லி முடிக்கிறோம்.