Thursday, September 11, 2014

குர்பானி தொடர்பான கேள்விகளும் பதில்களும்

குர்பானி தொடர்பான கேள்விகளும் பதில்களும்

குர்பானி தோல்களை மத்ரஸா, பள்ளிவாசலுக்குக் கொடுக்கலாமா?

'ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி)
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது.

இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு சான்றாக கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

அல்லாஹ்வின் தூதரே! நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (19021)

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் இல்லை. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது. கடன் இருக்கும் போதோ அல்லது கடன் வாங்கியோ அவர் குர்பானி கொடுப்பது கூடாது.

கடனைத் தவிர அனைத்து பாவமும் ஷஹீதிற்கு மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3832)

வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமமப்படுத்த மாட்டான்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர, அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

அல்குர்ஆன் 2: 286

போனவருடம் குர்பானி கொடுத்தவர் வசதி இல்லாவிட்டாலும் நடப்பு வருடத்திலும் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டுமா?

சிலர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். போன வருடம் குர்பானி கொடுத்துவிட்டு இந்த வருடம் குர்பானி கொடுக்காமல் இருந்தால் மற்றவர்கள் நம்மை மட்டமாக நினைப்பார்கள் என்று எண்ணி கடன்பட்டு குர்பானி கொடுக்கிறார்கள். இவ்வாறு இஸ்லாம் நமக்குக் கட்டளையிடவில்லை. குர்பானியின் நோக்கமே இறையச்சம்தான். எனவே நடப்பு வருடத்தில் குர்பானி கொடுக்க வசதியிருந்தால் மட்டுமே அவர் மீது கடமையாகும்.

குர்பானி கொடுப்பவர்தான் அறுக்க வேண்டுமா?

குர்பானி கொடுப்பவரோஇ அல்லது வேறு நபரோ அறுக்கலாம். அறுக்கத் தெரியாவிட்டால் அல்லது வேறு காரணத்தால் அறுக்க முடியாமல் போனால் மற்றவர்களை வைத்து அறுக்கலாம்.

வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3975)

பின்னர் மினாவிலுள்ள பலியிலிடும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள்.

நூல் : முஸ்லிம் 2334

வீட்டில் தலைவர் மட்டும் தான் நகம், முடிகளை வெட்டாமல் இருக்க வேண்டுமா? அல்லது குடும்பத்தினர் அனைவரும் நகம், முடிகளை வெட்டாமல் இருக்க வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்க நாடியவரையே நகம், முடிகளை வெட்டாமல் இருக்கக் கட்டளையிட்டுள்ளார்கள். குடும்பத்தினர் அனைவரும் இதைப் பேணவேண்டுமென கட்டளையிடவில்லை.

நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாயீ (4285)

எந்த ஆடு குர்பானி கொடுக்கப்படத் தகுதியானது?

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை,தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி)
நூற்கள்: திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294), இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக குறை தெரியும் பிராணியைத் தடைசெய்துள்ளார்கள். உதாரணமாக குருடு, நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுப்பதில் குற்றமில்லை.

நபி (ஸல்) அவர்கள் 'கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3637)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதைத் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : நஸயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகைப் பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதைக் குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.

பாலுட்டும் பிராணி

குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும், பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு அன்சாரித் தோழர் இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (4143)

பிராணியின் வயது

'இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா (ரலி)
நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3963)

அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாத குட்டி) உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத்தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு 'ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3974)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானி கொடுத்தோம்.

அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸாயீ 4306

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் : ஆடு, மாடு இ ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும், மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

அடுத்து ஜத்அ என்பதையும் கொடுக்கலாம் என்றும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்அ என்பது முஸின்னாவுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறுமாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு அடுத்த நிலையில் உள்ள ஜத்அ வகையைக் கொடுக்கலாம்.

குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு இடையில் இறந்துவிட்டால் புதிதாக ஓர் ஆட்டை வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா? வசதியில்லாதவர் என்ன செய்ய வேண்டும்?

குர்பானி கொடுத்தால்தான் கடமை நீங்கும். கொடுப்பதற்கு முன்னர் இறந்துவிட்டால் வசதி இருந்தால் புதிதாக ஓர் ஆடு வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். வாங்குவதற்கு வசதியில்லாவிட்டால் மாட்டில் கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். அதற்கும் வசதியில்லாவிட்டால் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. அல்லாஹ் யாரையும் அவரின் சக்திக்கு மீறி சிரமப்படுத்த மாட்டான்.

இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ் ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீசுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 3358

பெண்கள் குர்பானிப் பிராணியை அறுக்கலாமா?

பெண்கள் குர்பானிப் பிராணியை அறுத்தார்கள் என்றோ அல்லது நபிகளார் பெண்கள் குர்பானி பிராணியை அறுங்கள் என்றோ நேரடியான செய்திகள் இல்லை. என்றாலும் பெண்கள் பிராணியை அறுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. பெண்கள் அறுத்த பிராணியை சாப்பிடலாம் என்று நபிகளார் அனுமதியும் வழங்கியுள்ளார்கள். எனவே குர்பானிப் பிராணியை பெண்கள் அறுப்பதில் குற்றம் ஏதும் இல்லை.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக் (ரலி),
நூல்: புகாரி 5504

கோழி, குதிரை போன்ற பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு, ஒட்டகத்தையே வழிகாட்டியுள்ளார்கள். கோழி, குதிரை போன்ற வேறு பிராணிகளை அவர்கள் கூறாததால் அவற்றைக் குர்பானி கொடுக்க முடியாது.

ஹஜ் செய்பவர் உள்ளூரில் குர்பானி கொடுக்க வேண்டுமா?

குர்பானி என்ற கடமை ஹஜ் கடமை மூலமாகவே உள்ளூரிலுள்ளவர்களுக்கு கடமையாகியுள்ளது. ஒருவர் ஹஜ் செய்து அங்கு குர்பானி கொடுத்துவிட்டால் அவர் குடும்பம் சார்பாக உள்ளூரில் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. நபிகளார் ஹஜ் செய்தபோது உள்ளூரில் குர்பானி கொடுக்கக் கட்டளையிடவில்லை.

மாடு, ஒட்டகத்தில் எத்தனை நபர்கள் கூட்டாகக் கொடுக்கலாம்?

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2325

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316), இப்னு மாஜா (3122)

ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்).

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : அபூதாவூத் (2425)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டுமா?

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூற்கள்: புகாரி 5565, முஸ்லிம் (3975)

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தம் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள்.

நன்மையைக் கருதி அதிகமாகக் குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானி பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

மிக நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத் துண்டுகளைச் சமைத்துச் சாப்பிட்டதாக உள்ளது.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2334)

குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

மேற்கண்ட ஹதீஸ்கள் பெருமையை நாடாமல், ஏழைகளின் தேவைகளைக் கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம் என்று கூறுகிறது. சிலர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்குப் போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாகக் கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்
நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

இது மட்டுமல்லாமல் குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.

குர்பானிப் பிராணியை அறுக்கும்போது என்ன கூற வேண்டும்?

பிராணியை அறுக்கும்போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி அபூதாவுத் பைஹகீ இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலவீனமான ஹதீஸ் இடம்பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கூறியதாக உள்ளது.

அறுக்கும்போது 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூற்கள்: புகாரி(5565), முஸ்லிம் (3635)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்ற வாசகம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3635)

பெருநாள் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான வேலை ஆரம்பித்துவிடும். ஒவ்வொருவரும் தங்களுடைய குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடி இருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும்.

குர்பானி இறைச்சியை மூன்று பங்காகத்தான் பிரிக்க வேண்டுமா?

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.

உறவினர்கள், ஏழைகள், யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

'அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் 22 : 36

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : புகாரி 1717

பிராணியை அறுத்துவிட்டு விரும்புபவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி முழுவதையும் கொடுத்து விட்டார்கள். மூன்றில் ஒரு பங்கை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. முஸ்லிமின் அறிவிப்பில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் சமைத்துச் சாப்பிட்டதாக இடம் பெறுகிறது. எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.

மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தை சேமித்து வைக்கக்கூடாது என்று மக்களுக்கு தடை விதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில்தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ
நூல் : புகாரி (5423)

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)

ஏழைகள் உண்ணுவதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்திருந்தது குர்பானிப் பிராணியின் மாமிசத்தை நாம் தர்மம் செய்வதின் அவசியத்தைக் காட்டுகிறது. மாமிசத்தைச் சேமித்து வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என மேலுள்ள இரண்டு ஹதீஸ்களும் கூறுகிறது.

குர்பானி இறைச்சியை காபிர்களுக்கு வழங்கலாமா?

குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.

'அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் 22 : 36

(22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் கஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.

எத்தனை நாட்கள் குர்பானி கொடுக்கலாம்?

ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

'தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)
நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)

 நன்றி : தீன்குலப்பெண்மணி

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.