Sunday, March 31, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6)


மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான் நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6)
இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம்' என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும்.



அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்' என்னும் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் செழிப்பும், பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்பட்டன.



அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்! அவர்களது செழிப்பான ஆட்சிக்குச் சில சான்றுகளைப் பாருங்கள்!



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும். 'இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா?' என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம் எனக் கூறப்பட்டால் 'கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா?' எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இல்லை எனக் கூறப்பட்டால் 'உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது 'இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே, யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும்' என்று கூறலானார்கள்.



நூல் : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763



குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை நாம் பார்த்துள்ளோம். ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளையும் நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூக்கும் ஆட்சியையும், வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.



ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காகக் கடன் பட்டிருந்தாலும் அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள். இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.



குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்த அற்புத ஆட்சியை, செழிப்பு மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.



நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவு செழிப்பானதாக இருந்தது என்றால் யாரேனும் இல்லை என்று கேட்டு வந்தால் மிகவும் தாராளமாக வாரி வழங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பு இருந்தது.



இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.



நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப் பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள்.



இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : நஸயீ 4694, அபூ தாவூத் 4145



இரண்டு ஒட்டகங்களை வைத்திருப்பவர் வசதியானவராக அன்று கருதப்பட்டார். இத்தகைய வசதியுடையவரும், யாரென்று தெரியாதவருமான ஒருவர் நாகரீகமற்ற முறையில் கேட்கும் போது ஒரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பேரீச்சம் பழத்தையும், இன்னொரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு கோதுமையையும் ஏற்றி நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பினார்கள் என்பது அவர்களின் ஆட்சியில் காணப்பட்ட செழிப்புக்குச் சான்றாகும்.



கேட்டவருக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கியதற்கு இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகி விடும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.


அரசுக் கருவூலத்தில் கணக்கின்றி செல்வம் குவிந்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்தது ஏன்? 

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.



மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.



அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.



இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.



நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள்.



நூல் : புகாரி 1485, 1491, 3072



'தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது



நூல் : புகாரி 1485



'பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்' என்றார்கள்.



நூல் : புகாரி 851, 1221, 1430



மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.



நூல் : புகாரி 2055, 2431, 2433



நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.



இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.



'நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்' என்பதே அந்தப் பிரகடனம்.



இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்பவர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.



தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.



தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.



மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள்.



நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407



நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.



'அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.



இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர் தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.



அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.



எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.)



நூல் : புகாரி 2776, 3096, 6729



நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.



நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்.



'எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார்.



நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார்.



நூல் : புகாரி 6730 

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புக்களையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.



'அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது' என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.



தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.



மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.



இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.



நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?' என்றார்கள். அவர் கிடாய்' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி 'நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்' என்று கூறினார்கள்.



இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.



நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.



அரபு நாட்டு ஆடுகள் அதிகமாகப் பால் சுரக்கக் கூடியவை. நூறு ஆடுகள் இருக்கும் போது பத்து ஆடுகளாவது பால் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். நூறு ஆடுகள் கொண்ட பண்ணையில் மாதம் இரண்டு ஆடுகள் குட்டி போட்டாலே போதுமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தின் மூலம் தான் தமது தேவைகளையும், தமது மனைவியரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் இந்த வருமானம் தேவைக்கும் அதிகமான வருமானமாகும். ஆனால் பல மனைவியர் இருந்த காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியிருந்ததால் தான் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய வறிய வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது.



(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் பல மனைவியரை மணக்க வேண்டும் என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற நமது நூலைப் பார்க்கவும்.)



இவை தவிர இன்னொரு வகையிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பல்வேறு போர்களைச் சந்தித்தார்கள்.



போரில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித ஊதியமும் அன்றைய காலத்தில் வழங்கப்படுவதில்லை. போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் தோற்றவர்களின் உடமைகளை வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. போரில் பங்கு கொண்டவர்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அது போல் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தனி மனிதர்களுக்கு உரிமையாக இல்லாத பொதுச் சொத்துக்களும் வெற்றி பெற்றவர்களுக்குச் சொந்தமாகி விடும். அவற்றையும் வெற்றி பெற்ற நாட்டினர் போரில் பங்கெடுத்தவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தனர்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற வீரர்களைப் போலவே நேரடியாகப் போரில் பங்கெடுத்தார்கள். வாள் வீச்சிலும், குதிரை ஏற்றத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் மற்றவர்களை விடத் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள்.



போரில் பங்கு கொண்ட மற்ற வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போல் போர் வீரர் என்ற முறையில் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள். குதிரை வைத்திருப்பவர்களுக்கு சாதாரணப் போர் வீரரை விட இன்னொரு மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் குதிரை வீரர்களுக்குக் கிடைத்த பங்குகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தன.



கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்கள் நபிகள் நாயகத்துக்கு இவ்வாறு தான் கிடைத்தன. இதையும் மரணிக்கும் போது பொது உடமையாக்கி விட்டார்கள் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.



இந்தத் தோட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு வருமானம் வந்தது.



நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் அன்பளிப்புகளாக வழங்கினால் அதை ஏற்றுக் கொள்வார்கள். தாமும் அன்பளிப்புச் செய்வார்கள்.



இந்த வகைகளில் தவிர வேறு எந்த வருமானமும் அவர்களுக்கு இருந்ததில்லை. இதிலிருந்து தான் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அற்புதமான வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற நூலை வாசிக்க:


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.