Tuesday, November 20, 2012

இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்!

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ 
 
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.


 இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம் குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.

குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவார்கள். அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம்.164 நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.திருக்குர்ஆன்.28:14.


ஃபிர்அவ்னிடம் சென்று தூதுத்துவத்தை கூறுவதற்காக இரண்டு அத்தாட்சிகளுடன் இறைவன் அனுப்பி வைத்தான். மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று நான் அல்லாஹ்வின் தூதராவேன் இறைச் செய்தியுடனும் அத்தாட்சிகளுடனும் வந்துள்ளேன் என்றுக் கூறினார்கள்.


அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).181.திருக்குர்ஆன்.7:105.

தூதத்துவத்தை பொய்ப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காக கொண்டு வந்துள்ள அத்தாட்சிகளைக் காட்டும் படிக்கேட்டான். ''நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!'' என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. ''இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். திருக்குர்ஆன். 7:106, முதல் 110  வரை.

சூனியக்காரர்கள் நிறைந்து வாழும் பிரதேசமாக எகிப்து திகழ்ந்ததால் கைத் தடி பாம்பாக மாறியதும், கைகள் வெண்மையாக பளிச்சிட்டதையும் கண்டு  சூனியக் கலையை கற்று வந்திருப்பதாகவும், மண்ணின் மைந்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றம் சுமத்தினான்.  


தூதுத்துவத்தை ஒரே அடியாய் முடிவுக்குக் கொண்டு வரத் திட்டம் தீட்டினான் எகிப்து பிரதேசத்தில் உள்ள கை தேர்ந்த சூனியக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வர உத்தரவிட்டான். ''திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.. திருக்குர்ஆன்.10:79.


சூனியக்காரர்களின் பட்டாளம் புடைசூழ ஃபிர்அவனின் மாளிகையை நோக்கி படை எடுத்தனர். இதை முறியடிக்க தங்களுக்கு தகுந்த கூலி வேண்டும் என்று ஃபிர்அவனிடம் பேசினர். 

கூலி என்ன ? அதன் பிறகு நீங்களே எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள் என்றுக் கூறி சூனியக்காரர்களை ஊக்கப்படுத்தினான். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். ''நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ''ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.7:113, 7:114.

இதைக் கேட்ட மாத்திரத்தில் வெகுமதிகளுக்கும், ஃபிர்அவனின் நெருக்கத்திற்கும் ஆசைப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா(அலை) அவர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தொடங்குகிறீர்களா? நாங்கள் தொடங்குட்டுமா ? என்று அவசரப்பட்டனர்.


என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு அதுவரை அனுமதி வராததால் என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் நீங்களே செய்யுங்கள் என்றுக் கூறுகிறார்கள்.


''மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.182 மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன்.7:115, 7:116.

மக்கள் அதைக் கண்டதும் அச்சமுற்றனர் அந்த அச்சம் மூஸா(அலை) அவர்களுக்கும் ஏற்பட்டது. மூஸா(அலை) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதற்கு காரணம் அவர்கள் விரும்பிய போதெல்லாம் விரும்பியவாறு அற்புதங்கள் நிகழ்த்த முடியாது. தேவைப் படும் இடங்களில் தேவைப்படும் விதமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கும் விதமே செய்து வந்தார்கள்.


அச்சத்தில் நின்றுக் கொண்டிருந்த மூஸா(அலை) அவர்களை நோக்கி அவர்களின் கையில் வைத்திருந்த கைத் தடியை எறியச் சொன்னான் அல்லாஹ்.


கைத் தடியை எறிந்ததும் மக்களை அச்சுறுதிய அனைத்தையும் அது ஒரே அடியாக விழுங்கி முடித்து விட்டது. ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. திருக்குர்ஆன்.7:117.

இந்நிகழ்வு சூனியக்காரர்கள் அனைவர்களையும் திகிலுறச் செய்தது, அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். நாம் செய்தது கண் கட்டி வித்தை எதிரில் நடந்தது அவ்வாறானதல்ல என்பதை உறுதிபட நம்பினர்.  


மேலும் கைத் தடியை எறிந்தவர் இறைத் தூதர் என்றுக் கூறுவதால் இன்னும் அவர்களுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உள்ளம் தூண்டியது. அவ்விடத்திலேயே திருக்கலிமாவை மொழிந்து ஸஜ்தாவில் வீழ்ந்து விடுகின்றனர். அல்லாஹூ அக்பர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். ''அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். திருக்குர்ஆன்.7:120.121,122.


மேற்காணும் சம்பவங்கள் முழுவதும் ஃபிர்அவ்ன் முன்னிலையில் நடைபெறுகிறது. ஃபிர்அவ்ன் விடுவானா ?  என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் நம்பிக்கைக் கொள்வது என நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது சீறிப்பாய்ந்தான் கர்ஜித்தான் இதைக் கூட்டு சதி என்றான். ''நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். திருக்குர்ஆன். 7:123


மூஸா (அலை) அவர்களிடம் ஆள் பலம் அதிகரிப்பதைக் கண்ட ஃபிர்அவன் நாம் நாடு கடத்தப் படலாம் என்றே அதிகம் அஞ்சினான் அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் இது எங்களை வெளியேற்ற நடக்கும் சதி என்று பிதற்றிக் கொண்டே இருந்தான்.


தர்க்க ரீதியாக இவரை வெல்ல முடியாது இவருக்கு ஆள்பலம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை செய்து விடுவது சிறந்தது எனும் முடிவுக்கு வந்து தனது ராணுவத்தை தயார் படுத்தினான்.


அவனுடைய ரகசிய கொலை திட்டத்தை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களையும், அவர்களுடன் ஈமான் கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு இரவில் வெளியேறும் படி உத்தரவிடுகிறான் அத்துடன் அவன் இவர்களை பின் தொடர இருப்பதையும் கூறி விடுகிறான். ''என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். திருக்குர்ஆன்.26:52


அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அந்த இரவிலேயே மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய வஹி வந்ததும் இரவோடு இரவாக இடம் பெயர்ந்து செல்லலானார்கள். 

அதற்கு முன்பே ஃபிர்அவ்னுடைய கொலைவெறித் திட்டம் தயாராக இருந்ததால் அவனுடைய பெரும்படை அவர்களை விடிய விடிய துரத்தி அதிகாலையில் ஓரிடத்தில் ஓடுவதை அறிந்து கண்டு பிடித்து வேகமாக விரட்டியது... காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். திருக்குர்ஆன்.26:60.


கடல் குறுக்கிடுகிறது சிறிய அளவிலான எண்ணிக்கையுடைய மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார்கள் ஃபிர்அவ்னுடைய பெரும் படையைக்கண்டு நம்மைப் பிடித்து விடுவார்கள் என்று அச்சமடைந்தார்கள். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ''நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். திருக்குர்ஆன். 26:61


அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் நம்மைக் கை விட மாட்டான் பயப்படாதீர்கள் என்று அவர்களை மூஸா(அலை) அவர்கள் தைரியப் படுத்தினார்கள். ''அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன்.26:62


அல்லாஹ்வுடைய மகத்தான உதவி நம்பிக்கைக்கொண்டோரை அடைகிறது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களிடம் இருக்கும் கைத்தடியை கடலில் அடிக்க உத்தரவிடுகிறான். ''உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. திருக்குர்ஆன்.26:63


கடல் பிளந்து மலை அளவுக்கு உயர்ந்து நின்று வழிவிட்டது அதன் வழியாக மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார் வெளியேறுகின்றனர், அதே வழியாக ஃபிர்அவனின் படையும் உள்ளே நுழைந்து அவர்களை விரட்டுகிறது (கடல் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாருக்காக பிளந்த அதிசயத்தை நேரில் பார்த்தப் பிறகாவது எதோ ஒரு சக்தி செயல்படுகிறது அதனால் மேலும் முன்னேறாமல் நின்று விடுவோம் என்று சிந்திக்க விடாமல் அவர்களுடைய மூளையை தடுத்து விடுகிறான் வல்லோன் அல்லாஹ்.) அதனால் அவ்வழிகளுக்குள் விரட்டிக் கொண்டு நுழைகிறார்கள். அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். திருக்குர்ஆன். 26:64.


இவ்வாறு இரு படைகளும் கடல் பிளவுண்ட மையப் பகுதிக்குள் சங்கமித்தார்கள் இதில் முன்பே நுழைந்து விட்ட மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் கடலைக் கடந்து விடுகின்றனர். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். திருக்குர்ஆன்.26:65


கடல் பகுதியை விட்டு அவர்கள் வெளியேறியதும் கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்து வழிகளை மூடி விட்டது. ஃபிர்அவனின் படையினர் வசமாக மாட்டிக்கொண்டனர். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். திருக்குர்ஆன்..26:66



ஏக இறைவனை மறுத்தக் கூட்டம் கடலுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு உப்புத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகிக் கொண்டிருந்தனர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றுக் கூறியவனோ தானும் ஒரு சாதாரண மனிதன் தான் ன்பதை உப்புத் தண்ணீரைக் குடித்துக் கொண்டு மூச்சுத் திணறும் போது உணர்ந்தான். (இங்காவது அவர்க்ளுக்கு உப்புத் தண்ணீர் கிடைத்தது மறுமையிலோ சலமும், சீழும் தான் ).


ஒரே ஒரு இறைவன் தான் இருக்கின்றான் அவன் அகிலங்களுக்கெல்லாம் அதிபதி, சர்வ வல்லமைப் பொருந்தியவன் அவனை நாம் காணவில்லை என்றாலும் அவன் நம்மைக் காண்கின்றான் நாம் கூறுவதைக் கேட்கின்றான் என்பதை இறுதியில் உறுதியாக நம்பினான்.


மக்களின் அதிபதியே ! இறைவா ! நான் கட்டுப்பட்டேன் என்று விண்ணை முட்டும் அளவுக்கு மூழ்குவதற்கு முன் அயபக் குரல் எழுப்பினான். இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.10:90


அல்லாஹ்வுடைய கடும் கோபத்தால் அகம்பாவமும், ஆணவமும் கொண்ட ஃபிர்அவனுக்கு ஏற்பட்ட இந்த துர்பாக்கிய நிலையை பின் வரக்கூடிய மக்கள் தெரிந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடைய உடலை மட்டும் அப்படியே விட்டு வைப்பதாக அவன் மூர்ச்சையாவதற்கு முன் அவனிடம் இறைவன் கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.384  

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். திருக்குர்ஆன்.10:91, 92.


அவனுடைய உடல் கடலோரத்தில் உள்ள பணிப்பாறையில் கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு ட்படுத்தி ஆய்வாளர்களால் அது ஃபிர்அவ்னின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டு மக்கள் பார்த்து படிப்பினை பெரும் பொருட்டு அல்லாஹ்வின் அத்தாட்சி காட்சி பொருளாக்கப்பட்டுள்ளது.  

இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்.26:67 

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் 

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.