Thursday, November 24, 2011

இஸ்லாத்தின் பார்வையில் பெருந்தன்மை (3)

சகோதரர் மணாஸ்

அபூ பக்கர் (ரலி) அவர்களின் பெருந்தன்மை

சில சந்தர்ப்பங்களில் நாம் சில மனிதர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருப்போம் அப்படியான சந்தர்பங்களில் அந்த மனிதர் நமது சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் விதமாக அல்லது நம்மைப்பற்றி நமது குடும்பத்தினரைப் பற்றி தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நாம் கோபத்தின் உச்சிக்கு சென்று எதைப் பேசவேண்டும் என்று சுயசிந்தனையற்றவர்களாக வாய்க்கு வந்ததையெல்லாம் மனிதன் என்ற வகையில் நடந்து கொள்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்திருந்தால் கூட அந்த உதவியைச் சொல்லிக் காட்டி இனி இப்படியான உதவிகளை இவர்களுக்கு செய்யமாட்டேன். என்று அறுதியிட்டு சத்தியம் செய்து சொல்லிவிடுகிறோம். கொடுத்த தர்மங்களை சொல்லிக் காட்டக்கூடாது. என்று திருமறைக் குர்ஆன் கட்டளையிடுவது மாத்திரமில்லாமல் சொல்லிக் காட்டுபவனுக்கு எந்த உதாரணத்துடன் ஒப்பிடுகிறது. என்று இந்த வசனத்தை உற்று நோக்கினால் இதன் பாரதூரத்தை நம்மால் விளங்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் தர்மங்களைச் சொல்லிக்காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. அல்குர்ஆன் (2:264)



இதற்கு சான்றாக அபூ பக்கர் ரலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி நமது .ஈமானுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது. நமது வாழ்க்கை எங்கே அந்த புணிதருடைய வாழ்க்கை எங்கே என்பதற்கும் அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு அவர்கள் எந்த அளவு மரியாதை கொடுத்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளது.

'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிடமாட்டேன்'' என்று கூறினார்கள்... மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்கர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்...... உடனே அல்லாஹ், ' உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவிசெய்யும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர் களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்த வர்களுக்கோ (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கின்றான்'' என்னும் (24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள், 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.ஆதாரம் புகாரி(2661)

இன்று வாழும் முஸ்லீம்கள் மத்தியில் இப்படி தன்னுடைய மனைவியைப் பற்றியோ அல்லது பெண்பிள்ளைகளைப் பற்றியோ இப்படி அவதூறு சொன்னால் எந்தக் கரம் உதவி செய்ததோ அதை கரத்தால் அவனின் தலை சீவப்பட்டதைப் பார்த்திருக்கமுடியும். அபூபக்கர் (ரலி) அவர்கள் சொல்லிக்காட்டவில்லை மாறாக உதவி செய்யமாட்டேன் என்றுதான் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பையையும் அவனின் அருளையும் எதிர்பார்த்து அல்லாஹ்வுக்காக மன்னித்து விட்டார்கள். இந்தப் பெருந்தன்மை நம்மிடம் வரவேண்டும்.