Wednesday, June 30, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஜூலை 4 மாநாடு பைக் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.06.2010 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற (இன்ஷா அல்லாஹ்) இருக்கும் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' ஏன் என்பதை விளக்கி, அதிரையின் முக்கிய பகுதிகளில் பைக் பேரணியும் மற்றும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.

பைக் பேரணி

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கீழ்காணும் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது:

1. கடல்கரை தெரு
2. தரகர் தெரு
3. பிலால் நகர்
4. மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
5. செக்கடிமேடு
6. மேலத்தெரு
7. நெசவுத்தெரு
8. தக்வா பள்ளி அருகில்

கடல்கரை தெரு
பிலால் நகர்
மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
செக்கடிமேடு
நெசவுத்தெரு
தரகர் தெரு
மேலத்தெரு
தக்வா பள்ளி அருகில்

Sunday, June 27, 2010

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


Tuesday, June 22, 2010

அதிரையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜூலை மாநாடு பிரச்சாரம்

கடந்த 19.06.2010 அன்று கடல்கரைத்தெரு ஜூம்மா பள்ளி அருகிலும் மற்றும் கடல்கரைத்தெரு பெண்கள் மார்கெட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 17.06.2010 அன்று பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் மௌலவி முஜாஹித் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலத்தெருவில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

கடந்த 16.06.2010 அன்று மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இது மேலத்தெருவில் இந்த வருடம் நடைபெறும் கந்தூரி திருவிழாவை கண்டித்து நடைபெறும் முன்றாவது தெருமுனை பிரச்சாரமாகும்.

Monday, June 21, 2010

குர்ஆன் வசனத்தை கிழித்த கப்ர் வணங்கிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தின் கருத்தை பொறுக்க முடியாத கப்ரு வணங்கிகள் அதை கிழித்தனர்.


மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
திருக்குர்ஆன் 22:73

கிழிக்கப்பட்ட பேணர்


கிழிக்கப்பட்ட பேணரை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் புதிய பேணர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிதாக வைக்கப்பட்ட பேணர் கீழே,



குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட பேணரை கிழித்த அவ்லியா பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 19, 2010

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:8, 9

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

அல்குர்ஆன் 92:18-20

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

'விடைபெறும்' ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் "பாதியைக் கொடுக்கட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 1295

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1466

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2067

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள்.

இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:272

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!

Wednesday, June 16, 2010

தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேணர்

மேலத்தெரு தர்ஹா அருகில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டுள்ளது.


கந்தூரி திருவிழாவை கண்டித்து மேலத்தெரு தர்கா அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 12.06.2010 அன்று மேலத்தெரு தர்கா அருகில் சமாதி வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமாதி வழிபாடு எவ்வகையில் தவறு என்பதை விளக்கி பேசினார்.

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 14, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

13.06.2010 அன்று A. அப்துல் (சாகுல்) ஹமீது என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மஹராக 5 பவுன் தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 12, 2010

கந்தூரி விழாவை கண்டித்து மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 11.06.2010 அன்று மேலத்தெரு MMS வாடி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி நடைபெற இருக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தை பலர் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைக்கும் இமாம்களை பின்பற்றி தொழலாமா?

பதில்-1:




பதில்-2:


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 09, 2010

வங்கியில் தரும் வட்டியை வாங்கலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 02, 2010

ஸலாதுன்னாரியா ஓதலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Friday, May 28, 2010

Saturday, May 22, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 14.05.2010 அன்று மேலத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி 'வட்டி' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Tuesday, May 18, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்

அதிராம்பட்டிணத்தில் கடந்த 25.04.2010 முதல் 11.05.2010 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி முகம்மது நாசர் ஆகியோர் நடத்தினார்கள்.



பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டது. 

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12.05.2010 அன்று 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்நூர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ரிஜ்வானா மற்றும் ஆயிஷா ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பத்து ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, May 12, 2010

ஆலடித்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.04.2010 அன்று அதிராம்பட்டிணம் ஆலடித்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் மௌலவி முஹம்மது நாசர் மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Monday, May 10, 2010

பிலால் நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 14.04.2010 அன்று அதிராம்பட்டிணம் பிலால் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Saturday, May 08, 2010

பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி, மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Tuesday, May 04, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரியின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.

Saturday, May 01, 2010

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்

கடந்த 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளிவாசல் அருகில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.


முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில், குர்ஆன் ஹதீசை அடிப்படையாக கொண்டு அமையும் ஒற்றுமை தான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை அழகாக தெளிவுபடுத்தினர்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இம்மையும், மறுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் முஸ்லிம்கள் எப்படி மறுமையை லட்சியமாக கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'உணரப்படாத தீமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தீமைகள் என்று உணராத பல்வேறு தீமைகளை பட்டியல் போட்டு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, April 29, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

29.04.2010 அன்று ஜகபர் சாதிக் என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மஹராக 10 பவுன்  தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 26, 2010

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

வியாபாரம் செய்வதற்காக நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது.

இது அல்லாமல் ஒரு முஸ்லிம் தன் அண்டை வீட்டுக்காரருக்கு, தன் வீட்டில் ஆக்கிய உணவுகளை வழங்கச் செய்து அவர் எப்படி காலம் தள்ளுகிறார் என்று பக்கத்து வீட்டுக்காரரின் பிரச்சனையை இஸ்லாம் பார்க்கச் செய்கிறது. இன்று நம்முடைய சமுதாயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. 

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 2:273)

தன் சமுதாயத்தில் உள்ள சகோதரன் என்ன சிக்கலில் சிரமத்தில் இருக்கிறான்? என்று பார்த்து அல்லாஹ் உதவச் சொல்கிறான். இவ்வாறு கண்டறியாதவர்களை அல்லாஹ் அறிவிலி என்கின்றான். அல்லாஹ் தனது வசனத்தில் கூறியது போன்று அடுத்தவரிடம் வாய் திறந்து யாசிக்காமல் இருப்பவர்களை, அவர்கள் வாய் திறந்து யாசிக்க வைக்காது உதவச் சொல்கின்றது இஸ்லாம். ஜகாத்’ எனும் பொருளாதாரத்தை இது போன்றவர்களுக்கு வழங்கச் சொல்கின்றது.

இன்று இஸ்லாமிய சமுதாயக் கூட்டமைப்பில் இது போன்ற நற்பணிகளெல்லாம் அரிதாகிப் போய் விட்டது. விபச்சாரம் என்ற வாசலை அடைத்த இஸ்லாம் மனிதனின் உடற்கூறுகளைக் கவனித்து ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அது போல் யாசகம் கேட்கும் பாதையை அடைத்த இஸ்லாம் ஜகாத், தான தர்மம், கடன் போன்ற வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றது

தொழிலுக்கு யாரேனும் வந்து கடன் உதவி கேட்கும் போது கொடுக்கும் நிலையில் உள்ளவரின் உள்ளத்தில் உதிக்கின்ற முதல் எண்ணம் இவன் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் என்ன செய்வது? என்பது தான். இந்த எண்ணத்திற்கு அவர் வலுவூட்டினால் நிச்சயமாக அவர் கொடுக்க மாட்டார். இப்படிப்பட்டவர் ஏதேனும் ஒன்றில் ஏமாந்ததும் அன்று அவன் கடனாகக் கேட்டானே, அவனுக்குக் கொடுத்திருந்தாலாவது, நம்முடைய பணம் அவனிடம் கடனாக நின்றிருக்குமே என்று பின்னால் யோசிப்பார். இது ஒரு நிலை.

கொடுக்கும் நிலையில் உள்ளவரின் சிந்தனைப் பொறியில் தட்டுகின்ற இன்னொரு சிந்தனை என்னவெனில், நாம் இவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து நம்முடைய அந்தத் தொகையில் இவன் முன்னேறுவதை விட நாமே அந்தத் தொகையைப் பயன்படுத்தி முன்னேறினால் என்ன? என்ற எண்ணம் ஏற்படுவது மற்றொரு நிலை. இது போன்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான்.

மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி இஸ்லாத்தில் எல்லாமே மறுமையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஒருவர் அடுத்தவருக்காகக் கொடுக்கும் அந்தத் தொகையில் இவரே தன்னை வளர்க்கலாம். ஆனால் இவர் அடுத்தவருக்காகக் கொடுக்கின்ற இந்த தொகைக்குரிய நன்மைகளையெல்லாம் மறுமையில் அல்லாஹ் இவருக்கு வழங்கி விடுகின்றான். எல்லாவற்றிற்குமே அல்லாஹ்விடம் கூலி உண்டு. கொடுப்பவர் அல்லாஹ்வுக்காகவே கொடுக்க வேண்டும். ஒரு வேளை கடன் பெற்றவர் நட்டம் அடைந்து விட்டால் அந்தத் தொகையை மீட்பதற்காக வட்டிக்காரனைப் போன்று இரக்கமற்ற அரக்கக் குணம் கொண்டவனாக நடந்து விடக் கூடாது. ஒன்று அவகாசம் கொடுக்கலாம். அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்து விடலாம். இந்த இரண்டிற்கும் மறுமையில் கிடைக்கும் நன்மையைப் பார்ப்போம்.

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)
நூல்: அஹ்மத்

உதாரணமாக நஸீர் என்பவர் ஜலீல் என்பவருக்கு ஜனவரி 2005 முதல் தேதி பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கின்றார். அவர் அளிக்கும் அவகாசம் ஒரு வருடம். அதாவது டிசம்பர் 2005 வரை தவணை எனில், ஒவ்வொரு நாளும் கடன் கொடுத்தவர் இந்தப் பத்தாயிரத்தைத் தர்மம் செய்தவர் போல் ஆகின்றார். டிசம்பர் 2005 தாண்டிய பிறகும் கடன் பெற்றவர் திரும்பத் தரவில்லை. அவருடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு கடன் கொடுத்தவர் 2006 டிசம்பர் வரை அவகாசம் அளிக்கின்றார் எனில் அவர் ஒவ்வொரு நாளும் ரூ.20,000/- தர்மம் செய்தவர் போலாகின்றார்.

வட்டியை ஒரேயடியாக வெட்டி வீழ்த்தும் மார்க்கம் எந்த அளவுக்கு நன்மைகளை அள்ளி அபரிமிதமாக அளவுக்கதிகமாக வழங்குகின்றது என்று பாருங்கள். மனிதன் இலாப நட்ட கணக்குப் பார்க்கும் மனநிலை கொண்டவன் என்பதாலும் கடன் வழங்கியவர் அந்தத் தொகையைத் தன் தொழிலுக்காகப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பதை தியாகம் செய்கின்றார் என்பதாலும் அல்லாஹ் மறுமையில் இவருக்குக் கூலியாக வாரி வழங்குகின்ற சன்மானங்களைக் கவனியுங்கள்.

இதைச் செல்வந்தர்கள் கைக்கொண்டிருந்தால் ஏழைகள் எத்தனை வளங்களையும், நலங்களையும் பெற்றிருப்பார்கள் என்று நாம் எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கடன் தொடர்பான விவகாரங்களில், வழக்குகளில் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றார்கள். “இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் கொடுத்திருந்த கடனைப் பள்ளிவாசலில் வைத்து நான் கேட்டேன். எங்கள் இருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து “கஅபே!” என்று கூப்பிட்டார்கள்.

“இதோ! வந்தேன். அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “பாதி” என்பதைக் காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி “உமது கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். “எழுவீராக! பாதியை நிறைவேற்று வீராக” என்று (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி

தர்மங்களைப் பெற்றேனும் தள்ளுபடி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டவர்களைக் கண்டு வாளாவிருந்ததில்லை. உடனே அவருடைய கடனைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைக் காண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பழங்கள் வாங்கிய வகையில் ஒருவரது கடன் அதிகமாகி அவர் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களை நோக்கி) “அவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் வசூலான தொகை கடனைப் பூர்த்தி செய்யுமளவுக்கு எட்டவில்லை. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் அவருடைய கடன்காரர்களிடம், “கிடைத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்காகத் தர்மங்களைப் பெற்றேனும் கடனைச் செலுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது. இன்று கடன்பட்டவர்கள் நடுத்தெருவில் உள்ள அரண்மனை போன்ற வீடுகளை விற்று விட்டுச் செல்வதை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஏழைக்கு இரங்கியவருக்கு இறைவன் இரங்குதல். அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதற்கு அடியான், “என்னுடைய ரட்சகனே! உன்னுடைய பொருளை எனக்கு வழங்கினாய். மக்களிடம் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடன்பட்டவருக்கு (கடனை) தள்ளுபடி செய்வது என்னுடைய குணமாகும். அதனால் (கடன்பட்ட) பணக்காரரிடம் நளினமாகவும், (கடன்பட்ட) வறியவருக்கு தவணையும் அளித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிலளித்தார். உடனே மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ், “இந்த அடியானை விட நான் மிகவும் உரிமை படைத்தவன். எனவே, இந்த அடியானின் பாவத்தைக் கண்டு கொள்ளாது விட்டு விடுங்கள்” என்று (மலக்குகளிடம்) கூறுகின்றான்.

அறிவிப்பவர்: ரிப்ஈ பின் ஹிராஷ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2920

இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் புகாரியிலும் பல இடங்களில் இடம் பெறுகின்றது. ஐங்காலத் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றைச் செய்தால் போதும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பி இத்தகைய வணக்கங்களைச் செய்கின்றோம். ஆனால் இது போன்ற சமுதாயச் சேவையின் மூலம் சொர்க்கம் செல்வதைக் காணத் தவறி விடுகின்றோம். எனவே, நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுடன் இந்தச் சேவையையும் செய்கின்ற போது இது நம்மை சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றது.

அர்ஷின் நிழலில்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த ஹதீஸுக்கு அப்படியே செயல் வடிவம் கொடுத்தனர். அபூகதாதா (ரலி)யிடம் ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது “ஆம் வீட்டில் கஸரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்” என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) “இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்,

அவர் வெளியே வந்ததும் “நீ என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?” என்று கேட்டார். “என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் அல்குரளி
நூல்: அஹ்மத்

இதே கருத்தில் முஸ்லிமிலும் ஹதீஸ் இடம் பெறுகின்றது. கடன் பட்டவர் தான் அழ வேண்டும். ஆனால் மேற்கண்ட இந்த ஹதீஸில் கடன் கொடுத்தவரான அபூகதாதா (ரலி) அழுகின்றார்கள். இதை எங்கேனும் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்களின் கூட்டத்தில் உள்ள அபூகதாதா (ரலி) அவர்கள் கடன்பட்டவர் படும் கஷ்டத்தைக் கண்டு அழுகின்றார். இப்படி இந்தச் சமுதாயம் சஹாபாக்களின் வழியில் ஆக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இன்று கடன் கொடுத்தவர் கடன் பட்டவரிடம் காட்டு மிராண்டித்தனமாக நடப்பதைப் பார்க்கின்றோம். வாயில் வரும் வார்த்தைகளைத் திட்டி தீர்ப்பதை, தனது கொதிப்பைக் கொட்டி வார்ப்பதையும் பார்க்கின்றோம். நாக்கை பிடுங்கி சாகக் கூடாதா? தூக்கு மாட்டி தொங்கக் கூடாதா? என்று நெருப்புக் கங்குகளை அள்ளி வீசுகின்றார்கள். அரசாங்கம் ஜப்தி செய்வதைப் போன்று தட்டுமுட்டு சாமான்களைத் தெருவில் வீசி எறிந்து, ஏற்கனவே. நாணி, கூனி குறுகி நிற்கும் கடன்பட்டவர் கடுமையாக அவமானப் படுத்தப்படுகின்றார். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூகதாதா (ரலி) நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் ஊட்டிய போதனையில் நடந்து கொள்கின்றார். இந்த ஹதீஸில் அபூகதாதா (ரலி) தவணையளித்தார்களா? அல்லது தள்ளுபடி செய்தார்களா? என்ற குறிப்பு நமக்கு கிடைக்கவில்லை

பின் வரும் புகாரி ஹதீஸின் படி அபூகதாதா (ரலி) அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யும் பண்பாளர் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் இங்கும் அவர்கள் நிச்சயமாகக் கடனைத் தள்ளுபடி செய்திருப்பார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். இது பற்றி இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம். ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி “அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் “இல்லை” என்று பதிலளித்தனர்.

அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். “உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்” என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) “எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடு” என்று கூறினேன். உடனே அவர் வந்தார்.

“நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார்.

அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி)யின் மகன் தொடர்ந்து கூறுகின்றார்.

அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய செவிப் புலன் செவியுற்றது. அதை இந்த மனம் மனனம் செய்தது என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் வாங்கிய கடனைத் தரவில்லையே என்று இந்த நபித்தோழர் கோபப்படுகின்றார். அதன் பின் நிதானமாகி நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நினைத்துப் பார்க்கின்றார்கள். உச்சந்தலைக்கு மிக நேராக மிக நெருக்கமாக வரும் உதய சூரியன் மறுமை நாளில் மூளையை உருகச் செய்யும் அவ்வேளையை ஒரு கணம் தனது எண்ண ஓட்டத்தில் ஓட விட்டுப் பார்த்து, அபூயஸார் (ரலி) கடனாளியை விட்டு விடுகின்றார்.

கடன் கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள், கடன்பட்டவர் கொடுக்க முடியாவிட்டால் இது போன்று தள்ளுபடி செய்யும் மனப் பாங்குள்ளவர்களாக நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் சீரும் சிறப்பும் பெறும்.

இதையெல்லாம் இங்கே கூற வேண்டிய காரணம் மறுமையை நம்பிய முஸ்லிம்கள் மறுமைக்காக கடன் கொடுப்பதில்லை. உலகத்தின் லாப நட்டக் கணக்கைப் பார்த்து, தன்னிடம் பொருளிலிருந்தும் கொடுக்க மறுத்து விடுகின்றனர். என்ன தான் நெருக்கமாக இருந்தாலும். எவ்வளவு தான் பழகியிருந்தாலும் நாம் கடன் என்று கேட்டதும் செல்வந்தர்கள் நம்மை ஏற இறங்கப் பார்க்கின்றார்கள் இவரெல்லாம் திரும்பத் தரப்போகிறாரா? என்று எத்தனையோ இழிவான எண்ணங்களைக் கடன் கேட்ட நொடிப் பொழுதில் கொண்டிருக்கின்றார் என்று அவரது பார்வை நமக்குப் புலப்படுத்திக் காட்டுகின்றது.

அந்த நேரத்தில் கடன் கேட்ட நாம் நொந்து நுலாகப் போய் விடுகின்றோம். ஏதோ பழகிய நண்பராலேயே அவர் நம் மீது கொண்டிருக்கும் பாரதூரமான பலவீன எண்ணத்தாலேயே, அவர் நம்மை ஒரு பெரும் மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்ட ஒரு பிரமையை உணர்கின்றோம். மறுமையின் நம்பிக்கை பிரதிபலிக்குமேயானால் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அரவணைப்பு என்ற அருட்கொடையை எண்ணிப் பார்ப்போமானால் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்றாகி விடும். இப்படி ஒரு நிலை சமுதாயத்தில் நீடிக்குமானால் வங்கிப் பக்கம் வட்டி வாங்க எவருமே சென்றிருக்க மாட்டார்கள். எத்தனையோ சகோதரர்கள் பீடி, லாட்டரி, மது, வட்டி போன்ற தொழில்களை விட்டு வெளியே வரத் துடிக்கின்றனர். வங்கியில் வளமான இருப்பு வைத்திருக்கும் வசதிமிக்க சீமான்கள் இவர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உலகத்தில் அனுபவிக்கும் நரக வாழ்க்கையை விட்டும் மறுமை உலக நரக வாழ்க்கையை விட்டும் பாதுகாக்க, கடன் கொடுத்துக் கை தூக்கி விட மறுக்கின்றனர்.

அப்படியே கடன் கொடுத்த பின் கடன்பட்டவர் கடனைச் செலுத்தாமல் தவிக்கும் போது அதைத் தள்ளுபடி செய்ய முன் வருவதில்லை. அத்தகையவர்கள் மன நிலையில் மேற்கண்ட ஹதீஸ்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பது இந்தக் கட்டுரையின் பலமான எதிர்பார்ப்பு.

இதை ஒவ்வொருவரும் தன்னுடைய உறவினரிடமிருந்து துவங்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தனது குடும்பத்திலிருந்து துவங்கி விட்டால் நிச்சயமாக அது சமுதாய மாற்றமாகப் பரிணமிக்கும். ஏனெனில் பல குடும்பங்களின் சங்கமம் தான் ஒரு சமுதாயம். அது தான் நாம் எதிர்பார்க்கும் சஹாபிய சமுதாயமாகும்.

நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம்

Saturday, April 24, 2010

தமிழக அரசு தமிழில் வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டி புத்தகம்!

கல்வி வழிகாட்டி புத்தகம் ஒன்றை தமிழ் மொழியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நம் சமுதாய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Saturday, April 17, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மக்கள் தொகை (பக்கம் 13):

முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17):

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25):

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.
அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30):

ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு: S.சித்தீக், M.Tech, TNTJ மாணவர் அணி

Friday, April 16, 2010

அதிரையில் மார்க்க விளக்க கூட்டம்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பு: இந்த கூட்டம் நடக்கும் நாள் 24.04.2010. நோட்டிஸில் 18.04.2010 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, April 13, 2010

அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக தலா இரண்டாயிரம் வீதம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது.



மேலும், ஜந்து கிரைண்டர்களும், இரண்டு தையல் மெஷின்களும் வாழ்வாதார உதவியாக ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, April 06, 2010

அதிரையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

அதிராம்பட்டிணம் ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 02.04.2010 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Friday, April 02, 2010

அதிரையில் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' பிரச்சாரம் துவங்கியது

ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்) ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டிற்காக அதிரையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தின் காட்சிகள்.