Thursday, October 11, 2012

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் - 6) - மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் -6)




மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்:

அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:

ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், “அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள்என்று கூறினார்.

இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.

தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.

கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.

அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன்)

மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)
நூல் : முஸ்லிம்

கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
கப்ரில் நடக்கும் வேதனையை மனித ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.
இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.

இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.

அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.

இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை.

இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை.
இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை.

இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும்.

இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.
சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

கப்ரில் தொழுத பெரியார்:

ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.

தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.

ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,

கேள்வி கேட்கப்பட்ட பின் 70 X 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் உறங்குவீராகஎனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன்என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் புது மணமகனைப் போல் உறங்குவீராக!எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)

நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.