Wednesday, March 19, 2014

மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, "ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளீவாசலுக்குள் வந்து "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்'' என்றார்.

நூல்: புகாரி (462)

இணைவைப்புக் கொள்கையில் இருந்த ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் பள்ளிவாசலில் தான் தங்க வைத்துள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "அத்தூர்' எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். "(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?'' எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

நூல் : புகாரி (4854)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகை நடத்தியபோது அங்கு அவர்கள் ஓதியதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் செவியேற்றார்கள். இது மேற்கண்ட புகாரியின் அறிவிப்பில் உள்ளது

இந்தச் சமயத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை. இணைவைப்புக் கொள்கையில் இருந்தார்கள். இது கூடுதலாக முஸ்னது ஹுமைதி என்ற நூலில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

நான் இணைவைப்பவனாக இருக்கும் நிலையில் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்.

நூல் : முஸ்னது ஹுமைதி

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பவர்கள் பள்ளிக்குள் வரும் நிலை இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்யாமல் அனுமதித்து இருந்தார்கள்.

சகீஃப் குலத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாக பேசி இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்காக வந்தனர். இன்னும் இஸ்லாத்தை ஏற்றிராத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள்.

நுஃமான் பின் சாலிம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

சகீஃப் கூட்டதாருடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தேன். ஒரு கூடாரத்தில் நான் அவர்களுடன் உறங்கினேன்.

நூல் : நஸாயீ (3917)

மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்கு மட்டுமே இணைவைப்பாளர்கள் வரக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது.

அல்குர்ஆன் (9 : 28)

இதிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் அல்லாத மற்ற எந்தப் பள்ளிகளானாலும் இணைவைப்பாளர்கள் உள்ளே செல்வது குற்றமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரும் போது நல்ல விசயங்களைப் பார்க்கும் வாய்ப்பும் நல்ல விசயங்களைக் கேட்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிமாகவும் மாறலாம். எனவே மார்க்கம் அனுமதித்த இந்தக் காரியத்தை யாரும் தடை செய்யக் கூடாது

மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.