முந்தைய பகுதிகள்:
- ஹதீஸ்களின் வகைகள்
- ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்
- மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்
- மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மற்றும் ளயீஃப் (பலகீனமான) ஹதீஸ்கள்
- ஹதீஸ்களின் வகைகள்
- ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்
- மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்
- மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மற்றும் ளயீஃப் (பலகீனமான) ஹதீஸ்கள்
பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்:
அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம்.
1. முர்ஸல்:
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும்.
ஹன்னாத் – வகீபு – இஸ்ராயீல் – ஸிமாக் – முஸ்அப் – நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும். ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும் ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.
அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.
ஒரு நம்பகமான தாபியீ, ”நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன்” என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.
2. முன்கதிவு (தொடர்பு அறுந்தது):
நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள்.
உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.
ஹன்னாத் – வகீபு – இஸ்ராயீல் – ஸிமாக் – முஸ்அப் – இப்னு உமர் – நபிகள் நாயகம்.
இதில் ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத் – வகீவு – இஸ்ராயீல் – முஸ்அப் – இப்னு உமர் – நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று ஆகிவிடும்.
இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.
இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.
ஆ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்த விட்டார்.
இ என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம்.
இ என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
ஆ என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.
இ என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.
ஆ என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.
இ என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை.
வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை.
ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஆ என்பார் இ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதை இப்போதும் கண்டுபிடித்து விடலாம்.
ஆ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்
இ என்பவர் 115 ல் பிறந்தார்
இப்போது ஆ என்பவரிடமிருந்து இ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஆ என்பவர் மரணிக்கும் போது இ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.
ஆ என்பவரிடமிருந்து அறிவிக்கும் இ என்பவர், தான் அரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டு பிடித்து விடலாம்.
இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும் அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும்.
3. முஃளல்:
ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.
ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும்.
4. முஅல்லக்:
ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.
வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.
உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.
அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான்.
ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் புகாரி கூறுவார்.
இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்ததால் அதை ஏற்றுச் செயல்படலாம்.
அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அதை விட்டு விட வேண்டும்.
பலவீனமான ஹதீஸ்களின் மற்றொரு வகை:
அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
1. ஷாத்
அரிதானது என்பது இதன் பொருள்.
ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர்.
தொழுகையில் நான்கு தடவை நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார்.
நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது.
இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?
மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும்.
நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், நஸயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியனானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும்.
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.
ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகின்றார்.
ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது.
அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்ற பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு. பலவீனராக உள்ளதால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும்.
”முதல் ரக் அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள்” என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார்.
இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றது. இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான்.
இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.
ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பலவிதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.
நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள்.
எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.
முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள்.
ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாகும்.
2. முன்கர் (நிராகரிக்கப்பட்டது):
ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.
ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.
ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
இப்னு ஸலாஹ் என்ற அறிஞர் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றார்.
முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.
அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.
பலவீனமான ஹதீஸ்களின் இன்னொரு வகை:
அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும்.
1. முதல்லஸ்:
பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.
1. நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்சாரி அறிவித்தார்.
2. மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினார்.
3. மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.
4. மாலிக், ஸுஹைல் பின் அபீஸாலிஹ் வழியாக அறிவித்தார்.
5. அபூஸாலிஹ், அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.
6. அபூஹுரைரா (ரலி), நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.
இது திர்மிதீ நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஆறு நபர்கள் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
ஆரம்பத்தில் ”நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார்” என்று கூறப்படுகின்றது. ”நமக்கு அறிவித்தார்” என்ற வாசக அமைப்பிலிருந்து இமாம் திர்மிதீ நேரடியாக இஸ்ஹாக்கிடம் கேட்டிருக்கிறார் என்பது விளங்குகின்றது.
இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடமிருந்து அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகின்றது. எல்லாருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர்.
ஆனால் ஐந்தாவதாக ”குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்” என்று தான் கூறப்பட்டுள்ளது.
இந்த வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்.
குதைபா நேரடியாக மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கைக் கூறியிருக்கலாம்.
இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகின்றோம். அபூஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று.
இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொருத்தே ஹதீஸின் தரம் முடிவாகும்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து விடலாம்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாக கேட்டிருக்கா விட்டால் இடையில் ஒருவரை அவர் விட்டிருக்கலாம். அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் ஒன்று இருக்கலாம்.
எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகின்றது.
இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது.
குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத் தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்கமுடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாது. மாலிக் வழியாக குதைபா என்பதை ”மாலிக் நமக்கு அறிவித்தார்” என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்காவிட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார்; நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம்.
(குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்திற்குத் தான் இவ்வாறு கூறுகின்றோம்)
இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகின்றார் என்றால் தனது ஆசிரியரை விட்டு விட்டு, தனது ஆசிரியருடைய ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வருகின்றது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தாம் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தக்லீஸ் எனப்படும்.
இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும்.
ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரைக் கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதீஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும்.
ஒரு நபர் சில நேரங்களி்ல தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர், குறிப்பிட்ட ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் ”நமக்கு இவர் அறிவித்தார்” என்று தெளிவாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
இவர் முதல்லிஸ் (தக்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் அவர் விட்டு விடவில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்கலாம்.
ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.
இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
2. முஅன்அன்:
”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும்.
”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.
”நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்” என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. ”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.
அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
3. முத்ரஜ் (இடைச் செருகல்):
ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு.
”இந்த நேரத்தில் இதை ஓது” என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர், இந்த நேரத்தில் இதை ஓது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, “இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள்” என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.
இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.
வேறு அறிவிப்பைப் பார்த்தும் இடைச் செருகலைக் கண்டு பிடிக்கலாம்.
இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ கூறுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.
அல்லது இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத் தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்தும் கண்டு பிடிக்கலாம்.
அல்லது இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளலாம்.
பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
பலவீனமான ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை:
1. முள்தரப்:
குழப்பமானது என்று இதன் பொருள்.
முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது. என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.
முள்தரப் என்பது ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அதற்கு முள்தரப் எனப்படும்.
ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும்.
இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும் மதீனாவிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக் கூடாது.
முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.
ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த தவறு) தான்.
கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.
இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல் காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.
2. மக்லுாப் (மாறாட்டம்):
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரைக் கூற வேண்டிய இடத்தில் மாணவரையும், மாணவரைக் கூற வேண்டிய இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.
3. மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்):
ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.
இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.
அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் இவரும் மஜ்ஹுல் தான்.
ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.
இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.
யாரைப் பற்றிய செய்தி என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல்
இது வரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம்.
யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மர்பூஃவு என்றும்
நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மவ்கூஃப் என்றும்
அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்ட செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.
இதை விரிவாகப் பார்ப்போம்.
1. முஸ்னத், மர்ஃபுவு:
முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள்.
முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான்.
முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும்.
மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக – செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும்.
மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும்.
மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.
2. மவ்கூஃப்:
சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும்.
நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது.
சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.
”நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்”
”எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது” என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக் கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர்.
மவ்கூஃபுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சொல் மர்ஃபூவு என்பதாகும்.
மர்ஃபூவு என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியாகும். மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்தி என்று பொருள்.
3. மக்தூவு (முறிக்கப்பட்டது):
நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.
அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல்:
எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. முதவா(த்)திர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது):
ஒரு செய்தியை ஒருவர். இருவர் அல்ல. ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர்.
மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.
நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒரவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம்.
குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும்.
குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். ”யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும்” என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஹபருல் வாஹித் (தனி நபர் அறிவிப்பது)
தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.
இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.
இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.
எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவர்த்துள்ளோம்.
ஆதார நூற்கள்:
இதுவரை நாம் கூறிய விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவீ, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல் ஆகிய நூற்களே இந்நூலுக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
முற்றும்.
முற்றும்.
குறிப்பு:
சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.