Saturday, November 30, 2013

வாழ்வாதார உதவி

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்னுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குர்பானி தோல்விற்ற பணத்தில் இருந்து ரூ 5000 வழங்கப்பட்டது


முதலில் வருபவர்களுக்கு பரிசு! தோல்வியை ஒப்புக் கொள்ளும் அசத்தியம்!! (மீள் பதிவு)


(இந்த ஆக்கம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிரையில் மீலாது விழாவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு மீலாது விழா கமிட்டியினர் பரிசு கொடுத்து அழைத்தனர். அசத்தியத்தின் அழிவை விளக்கும் பதிவு)

இஸ்லாத்தில் இல்லாத மீலாது விழா, மௌலுது போன்ற பித்அத்களை தங்களின் வயிற்று பிழைப்புக்காக போலி ஆலிம்கள் பலர் முன்னின்று நடத்தி வருகிறார்கள். இவைகள் பித்அத்கள் என்று எவ்வளவு தான் சொன்னாலும் வயிறு வளர்க்கும் இந்த கூட்டம் திருந்துவதாக இல்லை. 1980 களில் ஒரு சிறிய கூட்டம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உண்மை கருத்துக்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. இப்படி புறப்பட்ட இந்த சிறிய கூட்டத்தின் மீது அன்று பெரும் கூட்டமாக இருந்த அசத்திய கூட்டம் பல்வேறு விதமான தாக்குதல்களை தொடுத்தது. இவர்களின் காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதல்களை தாங்கி, சத்திய பிரச்சாரம் தொடர்ந்தது. சத்திய பிரச்சாரம் எங்கும் தலைதூக்கியது. அசத்தியம் ஆட்டம் கண்டது. பெரும்பாவமான இணைவைப்பு மற்றும் பித்அத்கள் பெரும் அளவில் ஒழிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

அதிராம்பட்டிணத்திலும் இந்த நிலைமை தான் இருந்தது. அசத்தியம் ஆட்டம் கண்ட ஊர்களில் அதிராம்பட்டிணம் விதிவிலக்காக இருக்கவில்லை. இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. அவைகளை செய்து வந்த போலி ஆலிம்கள் அடையாளம் காட்டப்பட்டனர். மௌலுது சபைகளில் அன்று கூடிய கூட்டம் இன்று இல்லை. கந்தூரிகளில் அன்று கூடிய கூட்டம் இன்று இல்லை. மீலாது விழாக்களில் அன்று கூடிய கூட்டம் இன்று இல்லை. மக்கள் சத்தியத்தின் பின்னால் அணிவகுத்துவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வருடம் தர்ஹாவில் நடைபெறும் மீலாது விழாவில் முதலில் வந்து பங்கேற்கும் நானூறு நபர்களுக்கு பரிசுகளாம். பரிசு கொடுத்து மீலாது விழாவிற்கு ஆள் பிடிக்கும் அளவுக்கு அசத்தியம் ஆட்டம் கண்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

(மீலாது விழா குழுவினர் வெளியிட்ட நோட்டிஸ்)

''உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்! ஏன்? எதற்கு?

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.

அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)

இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன்  வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை:

இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.

படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.

வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.

வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.

இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை:

நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழிலாளியாகவோ

இறைச்சிக் கடைக்காரராகவோ

நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ

கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ

தோல் பதனிடும் தொழிலாளியாகவோ

பெட்டிக்கடை நடத்துபவராகவோ

குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல்

சாலை போடுதல்

கழிவுகளைச் சுத்தம் செய்தல்

உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்

தனியாருக்குக் கார் ஓட்டுதல்

வீடுகளைச் சுத்தம் செய்தல்

சமையல் வேலை செய்தல்

இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?

இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?

சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா

ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார்.  அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது.  அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.

பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.

பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.

இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?

பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.

அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்:

இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்

வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்

வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்

படிப்பறிவு இல்லாதவர்கள்

கூலி வேலை செய்பவர்கள்

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்

நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்

இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?

100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்

100 முஸ்லிம்களில் 41  பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி  இல்லாத வீடுகளிலும்

100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.

நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.

குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.

நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.

நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?

நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக

உயர் அதிகாரிகளாக

டாக்டர்களாக, எஞ்சினியர்களாக

தொழில் நுட்ப வல்லுனர்களாக

வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக

பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?

இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.

ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை:

எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு  தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.

எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.

உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.

தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.

கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.

நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.

உரிமையை வென்றெடுக்க:

சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.

ஜெயல்லைதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.

நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,

மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவும்மே இந்தப் போராட்டம்.

தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.

இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..

இத்தனை ஆண்டுகள் ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம்  என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..

இடஒதுக்கீட்டை அடைய எந்த்த் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..

குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்

அலை அலையாய் திரண்டு வாருங்கள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …

இறையருளால் வென்று காட்டுவோம்.

அணி திரள அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ATM படுகொலையும் பெண்கள் பெற வேண்டிய படிப்பினைகளும்! (வீடியோ)

படுகொலையும் பெண்கள் பெற வேண்டிய படிப்பினைகளும்! (வீடியோ)

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 13) - பரக்கத்தை அடையும் வழி

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 13) - பரக்கத்தை அடையும் வழி




இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, November 29, 2013

மதுக்கூரில் ஜனவரி 28 சுவர் விளம்பரம்

மதுக்கூரில் வருகின்ற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் 10 இடங்களில் செய்யப்பட்டது















Thursday, November 28, 2013

அதிரை கிளை சார்பாக மருத்துவ உதவி

புதுமனைத்தெருவை சார்ந்த சகோதரிக்கு தன் பிள்ளையின் மருத்துவ செலவுக்காக குர்பாணி தோல் விற்றபணத்தில் இருந்து ரூ5000 வழங்கப்பட்டது.


Tuesday, November 26, 2013

ஜனவரி 28 சுவர் விளம்பரம் பேராவூரணி

தஞ்சை தெற்கு பேராவூரணி கிளையில் 19-11-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தை வலியுறுத்தி பேராவூரணி நகர பேருந்து நிலையம் எதிரில் செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள்.


பேராவூரணி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்


தஞ்சை தெற்கு பேராவூரணி கிளையில் கடந்த 24-11-2013 அன்று பேராவூரணி தாலுகா பெருமகளுர் கிராமத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் விக்னேஷ்      s/o K. அசோகன் தனது வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாமிய மார்க்கத்தை கிளை சகோதரர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார், மேலும் தனது பெயரை சபீக் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துரில்லாஹ்





வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக மேலத்தெருவை சார்ந்த சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ6000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



Sunday, November 24, 2013

பீஜேயின் தன்னிலை விளக்கம்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம்.

இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை. பித்னாவுக்கு வழியும் இல்லை.

மேலும் ரியல் எஸ்டேட் அல்லது பிற சேவை நிறுவனங்கள் நடத்தினால் ஜமாஅத்தின் பெயர் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அதற்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் வியாபார நேர்மைக்காக மட்டுமே வாடிக்கையாளர்களாக உள்ளனர். தவ்ஹீத் சகோதார்களை விட மற்ற சகோதரர்களும், போரா ஜமாஅத்தினரும், முஸ்லிமல்லாத மக்களும் தான் அதிக அளவில் வாடிக்கையாளராக உள்ளனர். விலைகுறைவு, தரமான பொருட்கள் என்பதற்காகவே வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே ஜமாஅத் சகோதரர்களை தனது வியாபாரத்துக்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று யாரும் கூற முடியவில்லை.

மண்ணடி பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் குவியும் ஒரே நிறுவனமாக மூன் மார்ட் வளர்ந்துள்ளதால் எல்லா நேரமும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவைக் கவனத்தில் கொண்டு கடையை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சித்து வந்தோம்.

அந்த முயற்சியின் விளைவாக டிசம்பர் முதல் தேதியில் இருந்து பிராட்வே சாலையில் 2400 சதுர அடிபரப்பளவு கொண்ட வாடகைக் கட்டடத்துக்கு moon mart மூன் மார்டை மாற்றுகிறோம்.

அதுபோல் 3500 சதுர அடியில் அமைந்த மற்றொரு வாடகைக் கட்டடத்தில் இன்னொரு நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் துவக்கவுள்ளோம்.

இப்போது பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெரிய அளவில் தொழில் செய்வதற்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை என்பது பல சகோதரர்களுக்குத் தெரியும்.

நான் எனது அறிமுகத்தைப் பயன்படுத்தி ஜமாஅத் சகோதரர்களிடத்தில் கடன் வாங்கி இருப்பேனோ அல்லது பங்குதாரர்களைச் சேர்த்து தொழிலை விரிவாக்கி இருப்பேனோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

எனது தொழில் விரிவாக்கத்துக்காக நான் ஜமாஅத் சகோதார்களிடமோ மற்றவர்களிடமோ எந்தக் கடனும் வாங்கவில்லை. யாரையும் பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. கடன் வாங்குவதையும் பங்கு சேர்வதையும் நான் தவிர்ப்பதுடன் அதையே ஆலோசனையாக மற்றவர்களுக்கும் கூறிவருகிறேன். எனவே இந்த ஜமாஅத்தின் அறிமுகத்தை எனது தொழில் வளர்ச்சிக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை முறைகேடாக நான் பயன்படுத்தி இருக்கலாமோ? அல்லது ஜமாஅத் நிதியில் கடன் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வரலாம். ஜமாஅத்தின் நிர்வாக நடைமுறையை அறிந்தவர்கள் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைவர் அல்லது பொதுச் செலாளர் நிதியைக் கையாள முடியாது. நிர்வாகக் குழுவின் ஆலோசனைப் படி பொருளாளர் தான் கையாள முடியும்.

நிர்வாகச் செலவுகளுக்குக் கூட 5000 ரூபாய்தான் தலைவர், பொதுச் செயலாளர் செலவிட முடியும். 25 ஆயிரம் வரை செலவிடுவது என்றால் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆலோசித்துத் தான் செலவிட முடியும். அதற்கு மேல் செலவிடுவது என்றால் நிர்வாக குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்பே செலவிட முடியும்.

இப்படிப்பட்ட நிர்வாகம் உள்ள ஜமாஅத்தில் நானோ மற்ற எந்த நிர்வாகியோ கடனாகக் கூட பணத்தை எடுக்க முடியாது.

எனது தொழில் விரிவாக்கத்துக்கு எந்த தனிநபரின் உதவியையும் நான் நாடவில்லை. எந்தச் செலவந்தரிடமும் கடனும் பெறவில்லை. பார்ட்னராகவும் சேர்க்கவில்லை. ஜமாஅத்தில் இருந்து கடனாகவும் பெறவில்லை.

யாருக்கும் தெரியாமல் ஜமாஅத் பணத்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை. எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜமாஅத்தின் பணம் என் கட்டுப்பாட்டிலோ கைவசத்திலோ இல்லை. ஜமாஅத் பணத்தை அமானிதமாக சில நேரம் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றை எனது சொந்த ஊருக்கு அருகில் வாங்கிப் போட்டு இருந்தேன். தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை போடப்பட்டு சாலையில் அந்த இடம் வருவதால் அந்த இடத்தின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து அல்லாஹ் பரக்கத் செய்துள்ளான்..

இஸ்மாயீல் சலபி என்பவர் எனது சொத்து குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதற்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். அந்தப் பதிலில் அந்த இடத்தைப் பற்றி முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன். அந்த ஆக்கத்தை வாசிக்க http://onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/ என்ற இணைப்பைப் பார்க்கவும்.

எனது ஒரே சொத்தான அந்த நிலத்தை உடனடியாக விற்று கடையை விரிவாக்கம் செய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

15 நாட்களுக்கு முன்னர் அந்தச் சொத்தை தொண்டி தவ்ஹீத் சகோதரர்கள் வழியாக விற்றேன். தொண்டியில் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.

அந்தப் பணத்தையும் தற்போது நடத்திவரும் மூன் மார்ட் நிறுவனத்தின் சரக்குகளையும் சேர்த்துத் தான் தற்போது எனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இயக்கத்தை தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சந்தேகப்படும் வகையில் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன்.


 நன்றி: ஆன்லைன்பிஜே

Friday, November 22, 2013

Monday, November 18, 2013

வாராந்திர பெண்கள் பயான்

வாரம் வாரம் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் பயான் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சகோதரர் பக்கீர் முகம்மது இல்லத்தில் நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ் இனிவரும் வாரங்களில் வழக்கம்போல் சனிக்கிழமை நடைபெறும்

Sunday, November 17, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபி வழி திருமணம்

கீழத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மகன் ராஜா என்கிற ஹாஜா நசுருதீன் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று [ 17-11-2013 ] காலை 11 மணியளவில்  நபி வழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 2-1/4 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி நடைமுறையில் திருமணங்கள் எப்படி நடக்கின்றன இஸ்லாமிய திருமணங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.






Saturday, November 16, 2013

உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை இடிக்க சொன்ன ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் அதிரை ஷாஃபி மத்ஹபினர்!!

கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்.

 (இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)

ஷாஃபி மத்ஹபினர் என்று சொல்லுபவர்கள் நிறைந்து வாழும் நமது ஊரில் பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும் இன்றும் இருப்பது எப்படி? இன்னுமா தயக்கம்? இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு, குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற முன்வாருங்கள்.

கப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள்.

உயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:

‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரலி) அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை தரைமட்டமாக்க கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:

அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த வேலை என்னவென்றால்) எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்
நூல்: முஸ்லிம் 1764

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்) அவர்கள்:

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: முஸ்லிம் 1610

கப்ர் வணங்கிகளுக்கு சாபம்:

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

கப்ரை வணங்குபவர்கள் மோசமான படைப்பினங்கள்:

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

Friday, November 15, 2013

மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் பற்றிய தாவா

தஞ்சை தெற்கு ஆவணம் கிளை சார்பாக 13-11-2013 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் அவர்களை சந்தித்து இஸ்லாமிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பேராவூரணி கிளை SCHOOL PRINCIPAL சந்திப்பு

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் கடந்த 20 ஆண்டாக இயங்கி வரும் MOOVENDER MERTICULATION HIGER SECONDERY SCHOOL என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40% மேற்பட்ட இஸ்லாமிய  மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் இப்பள்ளியில் 7ஆம் வகுபிற்க்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்  ARABS AND TURKISH INVASIONS மற்றும் SULTHANS OF DELHI போன்ற பாடங்களை நடத்தும் போது இஸ்லாமிய மதம் தீவிரவாதத்தை போதிக்ககூடியது என்பதாகவும் இஸ்லாமிய பெண்கள் தங்கம் போன்ற பொருள்களுக்கு ஆசைபட்டவகள் என்பது போன்ற இஸ்லாம் சம்பந்தமாக தவறான கருத்துக்களை கூறி வருவதாக நமது கிளை சகோதரர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் புகார் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த 09-11-2013 சனிகிழமை அன்று பேராவூரணி கிளை நிர்வாகம் மாவட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர் துணையோடு அப்பள்ளியின் PRINCIPAL குமாரவேல் அவர்களை சந்தித்து ஆசிரியர் சம்பந்தமாக விளக்கம் கேட்டு மேலும் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பதையும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற இஸ்லாமிய நூல்களை அவருக்கு அன்பளிப்பு செய்தனர்.

PRINCIPAL குமாரவேல் தாமும் இஸ்லாம் குறித்து நல்ல மரியாதை வைதிருபதாகவும் நாங்கள் மாணவர்களின் மத விசயங்களில் தடை போடுவதில்லை என்பதையும் மேலும் இது போன்ற குற்றசாட்டுகள் வராத வண்ணம் தாம் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தார்..!

Thursday, November 14, 2013

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம். 

பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அனைத்து வணக்கங்களிலும் "ரியா' என்ற முகஸ்துதி, அதாவது பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கலக்கின்ற அபாயமிருக்கின்றது. என்றாலும் ஹஜ் என்ற வணக்கத்தில் இந்த முகஸ்துதி அதிகம் கலக்கின்ற வாய்ப்பிருக்கின்றது. அதனால் ஹாஜிகள் இதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

அல்குர்ஆன் 3:97

தனக்காக மட்டுமே ஹஜ் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதை ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் வணக்கத்தில் முகஸ்துதி எப்படியெல்லாம் கலக்கின்றது என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

1. ஹஜ்ஜுக்குப் பயணம் செய்வதற்கு ஒரு மாதம், இரண்டு மாதங்கள் இருக்கும் போதே, தெரிந்த ஆட்களையெல்லாம் கண்டு, அவர்களிடம் கை கொடுத்து, "நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; துஆச் செய்யுங்கள்' என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

2. வீடு வீடாகப் போய் பயணம் சொல்லுதல்

ஆட்களைக் கண்டு பயணம் சொல்வதுடன் மட்டும் நிறுத்தாமல் வீடு வீடாக ஏறி, இறங்கி பயணம் சொல்கிறார்கள். இவ்வாறு பயணம் சொல்பவர்கள், ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்காவது நாம் பாவம் செய்திருப்போம் அல்லவா? அதனால் இப்போதே அவர்களைச் சந்தித்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று காரணம் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன், சக மனிதனுக்குப் பாவம் செய்தால் உடனுக்குடன் தீர்த்து விடவேண்டும். ஒரு ஹஜ் பயணத்திற்காகவோ, வேறேதும் காரணத்திற்காகவோ தாமதப்படுத்துதல் கூடாது. ஏனென்றால் எந்தச் சமயத்திலும் நாம் மரணிக்கலாம். அதனால் அதைத் தாமதப்படுத்துதல் கூடாது. ஆனால் ஹஜ்ஜை முன்னிறுத்தி இவ்வாறு சொல்லி வருவது வணக்கத்தை விளம்பரத்துவதாக ஆகும். இது பகிரங்கமான ரியா எனும் முகஸ்துதி ஆகும்.

வெளிநாடு செல்வதால் நாம் திரும்பி வர முடியாமல் மரணித்து விடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம் என்றும் காரணம் கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தால் ஹஜ்ஜை விட அதிக நாட்கள் வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் போதும் இப்படி மன்னிப்புக் கேட்டு விட்டுச் செல்வார்கள். வேறு எதற்காக எவ்வளவு நாட்கள் பயணம் செய்தாலும் இதுபோல் செய்வதில்லை. இதிலிருந்து தாங்கள் செய்யும் இந்த முகஸ்துதியை நியாயப்படுத்த இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்

3. விருந்து வைத்தல்

பயணம் சொன்னால் போதாது என்று ஹஜ் செல்வதற்காக விருந்தும் வைக்கின்றார்கள். ஒரு லட்சம் ரூபாயில் செய்ய வேண்டிய ஹஜ்ஜை, பொருளாதார ரீதியில், சமுதாயத்தில் பாரமாக்கி, அடுத்தவரை ஹஜ் செய்ய முடியாமல் தடுப்பதாகும். இந்த வகையில் இது பாவமாகும்.

4. வழியனுப்பு விழா

ஹஜ்ஜுக்குச் செல்பவர் ஏதோ சாதனை படைக்கப் போவது போன்று வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கென மேடை போட்டு ஹஜ் செய்யச் செல்பவரை ஆளாளுக்குப் புகழ்கின்றனர்.

5. பயணம் அனுப்புதல்

ஹாஜிகளை வழியனுப்ப வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரைக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு பெருங்கூட்டம் வாகனங்களில் செல்கின்றனர். இது போதாதென்று ஒரு கூட்டம் சென்னை வரைக்கும் செல்கின்றது. இந்தச் செலவுகளையும் ஹாஜிகளே பொறுப்பேற்க வேண்டும். இதற்கென்று பெரும் பொருளாதாரத்தை விரயமாக்குகின்றனர்.

பெரும்படை புறப்பட்டுச் சென்று சென்னையில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் போய் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் எனத் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையினால் அவர்கள் ஹஜ் சீசன் வந்தாலே பயந்து நடுங்கும் நிலைமை.

6. ரயில் மற்றும் விமான நிலையங்களில் பெருங்கூட்டம்

சாதாரண பயணிகள் அனைவரும் அல்லல், அவஸ்தைப்படுகின்ற அளவுக்கு விமான, ரயில் நிலையங்களில் பெருங்கூட்டம் கூடி அடுத்தவருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஹாஜிகள் செல்லும் தினத்தில் விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் ஸ்தம்பித்து விடுகின்றன.

7. மாலை மரியாதை

ஐயப்ப பக்தர்களைப் போன்று ஹாஜிகள் அனைவரும் மாலைகள் அணிந்து கொண்டு செல்கின்றனர். அந்த மாலைகளை ரயில்களின் ஜன்னல் ஓரங்களில் கட்டித் தொங்க விடுவது அதைவிடக் கொடுமை.

8. சுவரொட்டிகள் அடித்தல்

ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம் என்று ஹாஜிகளின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துகின்றனர். ஹஜ் காலம் வந்து விட்டாலே ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்துகின்றனர். ஹஜ் வணக்கம் விளம்பரமாக்கப்படுகின்றது என்பதற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை.

9. இந்தக் காரியங்கள் அனைத்தையும் ஹஜ் பயணம் முடித்து விட்டு ஹாஜிகள் திரும்ப வரும் போதும் செய்கின்றனர். வழியனுப்பு விழாவிற்குப் பதிலாக வரவேற்பு விழா நடக்கின்றது. மற்ற அனைத்தும் அப்படியே தொடர்கின்றது.

10. ஹாஜிகளின் துஆ கபூலாகும் என்ற நம்பிக்கையில் ஹாஜிகளிடம் சென்று, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் கைலாகு கொடுத்து, துஆச் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக வரும் ஹதீஸ் பலவீனமானதாகும்.

11. வரவேற்பு விழா

"ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக!' என்று மறுபடியும் போஸ்டர் அடித்து வரவேற்பு விழாக்கள் நடத்துகின்றனர். தெரு முழுக்க தோரணங்கள் தொங்க விட்டு, மாப்பிள்ளை ஊர்வலம் போல் ஹாஜிகளை காரில் வைத்து ஊர்வலம் நடத்துகின்றனர்.

12. ஹாஜி என்ற அடைமொழி

டாக்டர், இஞ்சினியர் என்று பெயருக்கு முன்னால் போடுவது போன்று ஹாஜி என்ற அடைமொழியைப் போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கையெழுத்துப் போடும் போது கூட, ஹாஜி சுல்தான், ஹாஜி மஸ்தான் என்று கையெழுத்துப் போடுவது கொடுமையிலும் கொடுமை.

இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? ஹஜ் எனும் வணக்கத்தை இவர்கள் விளம்பரப்படுத்துவதைத் தான். இப்படி வணக்கத்தை விளம்பரப்படுத்தினால், பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமல் செய்தால் அதன் விபரீதம் என்ன?

முதன்முதலில் மறுமையில் அல்லாஹ் அடியார்களுக்குக் காட்சியளிப்பான். முகஸ்துதிக்காக இந்த உலகில் வணக்கங்கள் புரிந்தவர்கள் அப்போது ஸஜ்தாச் செய்ய இயலாமல் ஆகிவிடுவார்கள். இதை கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)
நூல்: புகாரி 4919

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர்:


அபூஹுரைரா (ரலி) நூல்:
முஸ்லிம் 3537

ஹஜ் என்ற இந்த வணக்கம் இப்படி விளம்பரம் ஆவதால் நரகம் தான் கூலியாகக் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்றுவானாக!

வழிகெடுக்கும் வழிகாட்டிகள்

தற்போது ஆங்காங்கே ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, நபிவழிக்கு மாற்றமான விளக்கங்களைத் தருகின்றார்கள். தலைப்பிலேயே ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் நடத்தும் விளக்க வகுப்புகளில் கலந்து கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று வருவபர்கள் எப்படி தூய்மையான அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்? சென்று வந்த பின்னர் எப்படி ஏகத்துவக் கொள்கையில் இருப்பார்கள்? எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் நபிவழி ஹஜ் விளக்க வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள்.

அதுபோன்று ஹஜ் வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்களும் இணைவைப்புக் கொள்கை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஹாஜிகளுக்குத் தவறான வழியைக் காட்டுகின்றார்கள். பித்அத்தான செயல்களையும், ஷிர்க்கான விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இவற்றை விட்டுத் தப்பிக்க ஒரே வழி, "நபிவழியில் நம் ஹஜ்', "ஹஜ் - உம்ரா வழிகாட்டி' போன்ற நமது ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் படியுங்கள்; நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.

தமிழக முஸ்லிம்களில் பலர், யா முஹ்யித்தீன், யா காஜா முஈனுத்தீன் என்று அழைத்துப் பிரார்த்திப்பவர்களாக உள்ளனர். இது மாபெரும் இணை வைப்பாகும். இந்தப் பாவத்தைச் செய்தவரை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

இப்ராஹீம் நபி அவர்கள் இந்த இணைவைப்பை எதிர்த்துத் தான் போரிட்டார்கள். இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவூட்டும் இந்த ஹஜ் வணக்கத்தைச் செய்யும் ஹாஜிகளே! ஷிர்க் எனும் கொடிய பாவம் கலக்காத தூய ஹஜ் செய்யுங்கள்.

சிலர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த பின்னரும் பொட்டல்புதூருக்கும், நாகூருக்கும், அஜ்மீருக்கும் சென்று பாவ மூட்டைகளைச் சுமந்து வருகின்றனர். இணைவைப்பில் வீழ்ந்து கிடக்கின்றனர். இத்தகையவர்கள் ஹஜ் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே ஹஜ்ஜுக்குப் பிறகு, மரணிக்கின்ற வரை அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தியுங்கள்; முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
 நன்றி
ஏகத்துவம்



Tuesday, November 12, 2013

Monday, November 11, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 8.11.13(வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 8.11.2013 (வீடியோ)
தலைப்பு : ஈகோ
உரை M.S  சுலைமான் பிர்தவ்ஸி



Sunday, November 10, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 12) - பரக்கத் எனும் சிறப்பருள்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 12) - பரக்கத் எனும் சிறப்பருள்




இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிராம்பட்டினத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி 8.11.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கேள்விகளுக்கு மௌலவி M S சுலைமான் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் தங்களுடைய மார்க்க சந்தேகங்களை கேட்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.




கரு கலைப்பு செய்யலாமா?

முகத்தை மூடித்தான் ஆகவேண்டுமா?

இந்த நிகழ்ச்சியில் ஏன் ஸ்கீன் போடவில்லை?

மாற்று மதத்தினருடன் எந்த அளவுக்கு பலகவேண்டும்?

இன்னும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன இதன் வீடியோ விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.

Thursday, November 07, 2013

நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்களா? - மத நல்லிணக்க விழாவில் அக்மார்க் தவ்ஹீத்வாதிகளின் கப்ஸா!

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் இஸ்லாத்தை பிறருக்கு சொல்லுகிறோம் என்ற பெயரில் ஒரு விழா நடத்தினார்கள். இதில் பல  கப்ஸாகளையும் கதைகளையும் அவிழ்த்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கா விட்டால், இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்று இவர்கள் மத நல்லிணக்க விழாவில் விட்ட கப்ஸாவை பற்றி ஏற்கனவே நாம் அம்பலப்படுத்தியிருந்தோம்.

கொள்கையில்லாதவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஒன்றாக பிரச்சாரம் செய்கிறோம் என்றால் இப்படி தான் ஆகும் என்பதற்கு பல ஆதாரங்களை இந்த நல்லிணக்க விழாவில் இருந்து எடுத்து காட்டலாம்.  பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரலாமா என்று ஒருவர் கேட்டதற்கு, ஒருவர் வரலாம் என்கிறார், மற்றொருவர் வராமல் இருப்பது தான் நல்லது என்று சொல்லி, கோவில்களில் மாற்று மதத்தினர் சாதி அடிப்படையில் தடுக்கப்படுவதை சரி காணுகிறார். மேலும், கோவிலுக்கு அழைப்பு தாருங்கள் வருகிறோம் என்று பெருமையுடன் கூறுகிறார்கள்.

உங்கள் தர்காவிற்கு நாங்களெல்லாம் வருகிறோம் எங்கள் கோவிலுக்கு நீங்கள் ஏன் வருவதில்லை என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி கேட்ட போது இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஒரு அருமையான வாய்ப்பு அமைந்தது தர்கா என்பது இஸ்லாத்தில் இல்லை அதற்கும் இஸ்லாத்திற்கும்  சம்மந்தமில்லை பல தெய்வ வழிபாடு தவறு அதற்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது என்று அழகாக சொல்லி இருக்கலாம் அதை விடுத்து ஒரே இறைவனை வணங்க நீங்கள் கூப்பிடுங்கள் நாங்கள் வருகிறோம் என்று பொடி வைத்து பேசுவது எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும் இது போன்ற சமுதாய ஒற்றுமையையா இஸ்லாம் வலியுறுத்துகிறது ?

மேலும் கீழ்காணும் கப்ஸாவையும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அள்ளிவிட்டார்கள். 

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந் நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், 'நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத கட்டுக்கதையாகும். இது பற்றி இங்கு விளக்கம் வெளியிடுவதுடன் மேலும் சில தகவல்களையும் பதிய விரும்புகிறோம். மாற்று மதத்தினரை பள்ளியில் அவர்களின் வழிபாடுகளை செய்ய அனுமதிக்கலாம் என்றால், இந்த கொள்கைவாதிகள் (?) கட்டியுள்ள பள்ளியில் மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதிப்பார்களா?

அதிரையில் ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பணிக்கு முன்னோடியாக இருந்த ஒரு சகோதரர் மேடையில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் சொல்லப்பட்டு அதற்கு அவர் மறு கருத்து சொல்லாமல் அமர்ந்து இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லி கொண்டு, உப்பு சப்பில்லாத விஷயத்தை எல்லாம் மலை அளவுக்கு உயர்த்தி எழுதும் உளறும் நிருபர்களும் இந்த கப்ஸாகளை பற்றி வாய் திறக்கவில்லை. கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் வழிகேட்டு நிரூபர்கள் இவற்றை பற்றி வாய் திறப்பார்கள் என்று  எப்படி எதிர்பார்க்க முடியும்?

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந்நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், "நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.

மேற்கண்ட சம்பவம் நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவமாகும்.

இதுபோன்ற ஒரு சம்பவம்  ஆதாரமற்ற சில நூற்களில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நூற்களிலுமே இப்னு இஸ்ஹாக் என்பார் வழியாகத்தான் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு இஸ்ஹாக் என்பவருக்கு இந்தச் சம்பவத்தை அறிவிப்பவர் “முஹம்மத் பின் ஜஃபர் பின் சுபைர்” என்பவர் ஆவார். இவர் ஹிஜ்ரி 110லிருந்து 120க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்து விட்டார். இவர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கிடையாது. இவர் அடுத்த தலைமுறையின் கடைசிப் படித்தரத்தில் உள்ளவராவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள்தான் அதனை அறிவிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தையே அடையாத ஒரு மனிதர் இது போன்ற சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த ஒரு செய்தியாகும். இது போன்ற செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நஜ்ரான் பகுதி கிறித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாதப் பிரதிவாதங்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய பல நூற்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரப் பூர்வமான எந்த அறிவிப்புகளிலும் நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று கூறப்படவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நபியவர்கள் காலத்தில் நடந்திருந்தால் பிரபல்யமான இந்தச் சம்பவத்தை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்திருப்பார்கள். அவை ஆதாரப்பூர்வமான நூற்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு நபித்தோழருமே இதுபோன்ற ஒரு சம்பவத்தை அறிவித்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்டதாக இருப்பதுடன் இது திருமறைக் குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதக் கூடியதாக அமைந்துள்ளது.

பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஆலயங்களாகும். அங்கு ஒரு போதும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக்கூடாது என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! 

அல்குர்ஆன் 72:18

ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு அனுமதித்திருப்பார்களா?

மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை  உடைக்கின்ற கேவலமான காரியத்தையும் செய்துள்ளார்.

முஸ்லிம் அல்லாத மக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சான்றுகள் இருக்கும்போது திருமறைக் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எதிரான இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கூற வேண்டியதன் அவசியம் என்ன?

 (பார்க்க: பிற மதத்தவர்களுடன் அன்பு).

இதை உண்மை என்று நம்பினால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இது போல் சிலை வணக்கத்தை அனுமதிக்குமாறு கடிதம் எழுதுவார்களா? அதிரையில் தவ்ஹீத் புரட்சியாளர்களால் (?) கட்டப்பட்டுள்ள பள்ளியில் இதை அனுமதிப்பார்களா?

உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதாகவும் ஒரு கட்டுக்கதை உள்ளது.

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.

மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  : 

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!” என்று கூறினார்கள்.

நூல்  : புகாரி (1341)



நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் “நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்“  என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்” என்று கூறினார்கள்.

நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)

தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பார்களா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

 முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?



கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?

உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். 

கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?

இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.

நன்றி: ஆன்லைன் பீஜே (சில மாற்றங்களுடன்)

Tuesday, November 05, 2013

ஆர்பாட்டத்திற்கு சென்ற வாகனங்கள் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டது (வீடியோ)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு தடைவிதித்ததை கண்டித்து இன்று மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை செய்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்ததை அடுத்து இன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பக்கத்திலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வேன் பஸ்களில் திருவாரூக்கு சென்றனர் இந்த ஆர்பாட்டத்திற்கு 15000க்கு அதிகமானவர்கள் வருவார்கள் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து மாவட்ட காவல்துறை திருவாரூருக்கு வாகனங்கள் வரும் வழிகளை மறைத்து ஆர்பாட்டத்திற்கு மக்கள் செல்லவிடாமல் வழியில் தடுத்துநிறுத்தியுள்ளனர். அதிரை மற்றும் முத்துப்பேட்டையில் இருந்து சென்ற வாகனங்கள் மன்னார்குடியில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.








Monday, November 04, 2013

அதிரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
  
பெண்களுக்கான
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


(நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி)

நாள் : 8.11.2013 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு
இடம் : தவ்ஹீத் பள்ளிவாசல், E C R ரோடு, அதிராம்பட்டினம்


பதிலளிப்பவர்
மௌலவி M.S. சுலைமான் பிர்தவ்ஸி
 (மேலாண்மைக்குழு உறுப்பினர் TNTJ)

ஆண்களுக்கு தனி இடவசதி உண்டு

இவண்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை. தஞ்சை தெற்கு மாவட்டம் 

80153-79211  96776 26656 99448 24510