29.12.12 அன்று சென்னை மண்ணடியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் காவல்துறை செய்த அராஜகங்களை புள்ளிவிபரங்களோடும், ஆதாரங்களோடும் சகோதரர் பீஜே அவர்கள் பட்டியலிட கண்டனப்பொதுக்கூட்டம் கொட்டும் மழையிலும் அனல் பறந்தது. பொதுக்கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசியதன் முழுவிபரம்:
காவல்துறைக்கு விழுந்த முதல் மரண அடி:
முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி மிருக வெறியாட்டம் ஆடிய காவல்துறை முற்றுகையிட வந்த ஆண்களையும், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களையும் தடியடி நடத்தி பயமுறுத்தி ஆழம்பார்த்தனர்.
ஆனால் அந்த காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து பல்லாயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும், முதியவர்களும் இங்கு திரண்டிருப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய மரண அடி.
எந்த ஒரு இடத்தில் தடியடி நடத்தப்பட்டாலும் அந்த இடத்தில் சிறிது நேரத்தில் போராட்டம் நடந்த ஒரு சிறு சுவடு கூட இருக்காது. அந்த அளவிற்கு போராட்டக்காரர்கள் சிதறி ஓடிவிடுவார்கள். போலீஸார் நடத்திய தடியடியின் காரணமாக போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் பிய்ந்து போன செருப்புகள் மட்டும்தான் கிடக்கும். இந்த இடத்தில்தானா போராட்டம் நடந்தது என்று பிறர் கேட்கக்கூடிய அளவிற்கு போராட்டக் களமே மயான பூமியைப்போல காட்சி தரும். ஆனால் காவல்துறையைச் சேர்ந்த மனித மிருகங்கள் காட்டுமிராண்டித் தனமாக எங்களது சகோதரர்களை தாக்கியபோதும், எந்த ஒரு சகோதரனும் ஓடாமல் அந்த போராட்டக்களத்திலேயே நின்று சாதித்துக் காட்டினார்களே! அதுவே காவல்துறைக்கு விழுந்த மரண அடி.
எங்கள் சமுதாய பெண்களும் தடியடி நடத்திய இடத்தில் தைரியமாக நின்று, “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டார்களே! இதுதான் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய உங்களுக்கு விழுந்த முதல் மரண அடி.
எங்களது சகோதர, சகோதரிகள் போராட்டக்களத்தில் பின்வாங்கி ஓடாமல் ஏன் உறுதியாக நின்றார்கள் தெரியுமா? போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவது பெரும்பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடத்திய பாடம்தான் எங்களது மக்களை நெஞ்சுறுதியோடு நிற்க வைத்தது.
முஸ்லிம் சமுதாயத்தை மறுபடியும் பழைய நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்:
இந்த முஸ்லிம் சமுதாயத்தை தவறான பாதைக்கு நீங்கள்தான் தள்ளினீர்கள். 1992களில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம்களில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்கினர். அவர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும், அதற்காக உள்ள வழக்கு என்னவோ அதை அவர்கள் மீது போடாமல், பேருந்தின் மீது கல்வீசித் தாக்கியதற்காக அவர்கள் மீது தடா சட்டத்தை ஏவி அநியாயம் செய்தீர்களே! அதுதான் அவனை தவறான பாதைக்குத் தள்ளியது. அதன்பிறகு பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறையின் அத்தகைய அடக்குமுறைகள் ஒடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எங்கள் மீது இல்லாத விஷயத்தை பொய்யாகப் புணைந்து எங்களை தவறான வழிக்கு தள்ளிவிடாதீர்கள். இப்போது எங்கள் மீது பொய் வழக்குப்போட்ட ஏ.சி.செந்தில் குமரன் மற்றும் தடியடி நடத்திய டி.சி.கிரி போன்ற காவல்துறை அதிகாரிகளால்தான் மக்கள் தவறான பாதைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
ஜெயலலிதா செய்த அநியாயம்:
ராஜகோபாலன் என்பவர் மதுரையில் கொலை செய்யப்பட்டபோது, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது தடா சட்டத்தை ஏவிய ஜெயலலிதா, காசிம் என்ற ஆலிமை கொலை செய்த வழக்கில் பிடிக்கப்பட்ட இந்துத்துவாவினர் 3மாதத்தில் வெளியே வரக்கூடிய அளவிற்கு செக்சனைப்போட்டு பாரபட்சம் காட்டி அநியாயம் செய்தார். இரண்டு தரப்பினர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் இல்லாததுதான் பாதிக்கப்பட்டவர்களை தவறான பாதைக்குத் தள்ளிவிடுகின்றது.
கருணாநிதியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமை:
அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் ஆட்சியில் டிசம்பர் 6 வந்துவிட்டாலே நள்ளிரவுகளில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து மிருக வெறியோடு நர வேட்டை யாடிய படலங்களை காவல்துறை அரங்கேற்றியது. டிசம்பர் 6 என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிகளையெல்லாம் குண்டு வைத்து நாட்டைத் துண்டாட சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய் வழக்குப் போட்டு காவல்துறை உள்ளே தள்ளியது. தனி நபராக இருந்த ஒரு நபர் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார் என்று பொய் வழக்குகள் போடப்பட்டு, தனி ஒரு நபராக இருப்பவர் எப்படி குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பார்? இந்த அறிவுகூட உங்களுக்கு இல்லையா? என்று நீதிபதிகளால் காவல்துறையினர் கண்டிக்கப்படக்கூடிய அளவுக்கு முஸ்லிம்கள் மீது காவல்துறை பொய் வழக்குகளை போட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தோம். “யா! அல்லாஹ்! இந்த அக்கிரமக்காரர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று!” என்று இந்த காட்டுமிராண்டித்தனங்களை காவல்துறை வாயிலாக கட்டவிழ்த்துவிட்ட கருணாநிதிக்கு எதிராக கையேந்தினார்கள். அதன் விளைவு எப்படி முஸ்லிம் சமுதாயத்தை கருணாநிதி நள்ளிரவு கைது செய்து கருவறுத்தாரோ, அதேபோல அவரை நள்ளிரவில் வீடுபுகுந்து அவரது வீட்டுக் கதவை உடைத்து, அவரது படுக்கையறையில் வைத்து காவல்துறை கைது செய்தது.
முதல் எச்சரிக்கை:
பாதிக்கப்பட்டவனுடைய பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; பாதிக்கப்பட்டவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே எந்த திரையுமில்லை என்ற நபிமொழிக்கு ஏற்ப அல்லாஹ் கருணாநிதிக்கு அந்த தண்டனையை வழங்கினான்.
ஆட்சியாளனுக்கெல்லாம் ஆட்சியாளன் ஒருவன் இருக்கின்றான்:
அதுபோல இப்போது எங்கள் மீது பொய் வழக்கு போட்டு, எங்கள் சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி, எங்களது சகோதரர் களுடைய வீடுகளில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறை என்ற அதிகாரத்தில் மிருக வெறியாட்டம் ஆடியுள்ளீர்களே! உங்களது கையில் அதிகாரம் உள்ளது என்ற எண்ணத்தில் இப்படி ஆட்டம் போட்டீர்களேயானால், உங்களுக்கும் மேலே, இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் மேலே அனைத்து அதிகாரத்தையும் தனது கையில் வைத்துள்ள படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நினைத்தால் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்; நீங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவீர்கள் என்று முதல் எச்சரிக்கையை காவல்துறையினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் சொல்லிக் கொள்கின்றேன்.
துண்டுப்பிரசுரம் வெளியிட்டது தவறா?:
டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் அழியப் போகின்றது என்று பீதியை பரப்பினார்கள். அந்த பீதியை போக்குவதற்காக நாங்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். அவ்வாறு துண்டுபிரசுரம் வெளியிட்டது தவறா?.
உலகம் அழியப்போகின்றது என்று பீதியைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திராணியற்ற காவல்துறை, அந்த பீதியைப் போக்க துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்களை கைது செய்து தனது காவி புத்தியை காட்டியுள்ளது.
சீனாவில் இவ்வாறு பீதி பரப்பிய 1000 பேரை சீன அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. அது அரசாங்கம். ஆனால் இங்கோ அவ்வாறு பீதி பரப்புபவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, காவல்துறை செய்ய வேண்டிய வேலையை சமுதாய அக்கறையோடு கையில் எடுத்தவர்களை கைது செய்துள்ளது காவி காவல்துறை.
வள்ளலார் பற்றி எழுதியது தவறா?:
அப்படி என்ன எங்களை கைது செய்யக்கூடிய அளவிற்கு நாங்கள் தவறாக எழுதிவிட்டோம். அந்த துண்டுப்பிரசுரத்தில் எங்கள் மீது வழக்குத்தொடுக்கக்கூடிய வகையில் எந்த வாசகங்களும் இல்லை.
கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் தீபம் அணைந்ததால் உலகம் அழியப்போகின்றது என்று சொல்லி புரளி பரப்பி அந்த பீதியை அனைத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் செய்தியாக வெளியிட்டன. அதை நம்பி பல பெண்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து பரிகாரம் செய்கின்றார்கள் என்ற செய்தியை பத்திரிக்கைகள் புகைப்படங்களுடன் வெளியிடுகின்றன.
இவர்கள் எந்த உலகம் அழியப்போகின்றதாக சொல்கின்றார்களோ அந்த உலகத்தில் நாங்களும் இருக்கின்றோம். டிசம்பர் 21ஆம் தேதி நாங்களும் சாகப்போகின்றோம் என்று சொல்லி அவர்கள் எங்களுடைய மனதை புண்படுத்துகின்றார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் வள்ளலார் தீபம் அணைந்ததாக சொல்வதாலெல்லாம் உலகம் அழிந்துவிடாது. 150 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். அவரே இறந்துவிட்ட பிறகும் கூட அழியாத உலகம், அவர் ஏற்றி வைத்த தீபம் அணைந்ததாலா அழிந்துவிடும் என்று லாஜிக்காக கேட்டது தவறா?
இந்து முன்னணிக்கும், வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம்?:
இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் எங்களது இந்துக் கடவுளான வள்ளலாரை இழிவுபடுத்தி நாங்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டதால் எங்களை கைது செய்ய வேண்டும் என்று எங்கள் மீது புகார் அளித்ததால்தான் எங்கள் மீது நடவடிக்கை என்று சொல்கின்றீர்களே! உங்களுக்கு மூளை என்பது கொஞ்சமாவது உள்ளதா?
இந்து முன்னணிக்கும், வள்ளலாருக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
வள்ளலாரின் கொள்கை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உருவ வழிபாடு கூடாது என்பதுதான் வள்ளலாரின் கொள்கை. ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் கொள்கை. இந்து முன்னணியினருக்கு நேர்முரணான கொள்கையுடைய வள்ளலாரை நாங்கள் இழிவுபடுத்திவிட்டோம் என்று அவர்கள் சொல்லும்போதே இந்து முன்னணியினர் மதக்கலவரத்தைத் தூண்டத்ததான் இந்த வேலையைச் செய்கின்றார்கள் என்பது காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லையா?.
இதோ வள்ளலார் போதித்த பத்து கொள்கைகள்:
1.கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2.புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5.இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8.கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.
9.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
10.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
மேற்கண்ட வள்ளலாரின் பத்து கொள்கைகளில் பெரும்பாலானவை இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள். இந்து முன்னணியினரின் கொள்கைகளுக்கு எதிரானவை.
ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றும், கடவுளுக்கு எதையும் பலியிடக்கூடாது என்றும் வள்ளலார் கூறிய கருத்துக்கள் இந்து முன்னணியினருக்கும், இந்துக்களுக்கும் எதிரான கொள்கைகள்.
அதுமட்டுமல்லாமல், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கைக்கும், இந்துக் கடைகளில்தான் இந்துக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லும் இந்து முன்னணியினருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இதைக்கூட காவல்துறை சிந்திக்காதா?
“இறந்தவர்களை எரிக்கக் கூடாது; அவர்களுக்கு திதி செய்யக்கூடாது” என்ற வள்ளலாரின் கொள்கைக்கும், இறந்த இந்துக்களை எரிக்க வேண்டும்; அவர்களுக்கு திதி செய்ய வேண்டும் என்ற இந்து முன்னணியின் கொள்கைக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
வள்ளலார் இந்து கடவுளா? அவர் தனி ஒரு ட்ராக்கில் சென்றிருக்கும் போது இதை ஒரு புகாராக ஏற்று காவல்துறை எப்படி நடவடிக்கை எடுத்தது.
இந்தக் கேள்வியையெல்லாம் புகார் கொடுக்க வந்திருந்த இந்து முன்னணியினரிடம் காவல்துறை கேட்டிருக்க வேண்டாமா?.
வேறு ஒரு நாட்டில் இந்த துண்டுப்பிரசுரத்தை நாங்கள் வெளியிட்டிருந்தால் எங்களை அழைத்து பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். இந்தத் துண்டு பிரசுரம் எந்த அடிப்படையில் தவறு என்பதை காவல்துறை சொல்ல முடியுமா?
இப்படி நாங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தவறானதாக இல்லாத நிலையில், யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் திட்டமிட்டு எங்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளது.
இந்த காரணத்திற்காக எங்களை நள்ளிரவு 2.30மணிக்கு வீடு புகுந்து கைது செய்ய வேண்டியஅவசியம் என்ன வந்தது?.
அதற்கு முந்தைய நாள் வரைக்கும் தென்சென்னைமாவட்ட நிர்வாகிகள் அப்துர்ரஹீம் உட்படஅனைத்து நிர்வாகிகளும் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்ற நிலையில்திடீரென்று நள்ளிரவு வீட்டு கதவை உடைத்துஅவர்களை கைது செய்யச் சொல்லி உத்தரவுபோட்டது யார்?
தீவிரவாதிகளுக்கெல்லாம் ஏன் வீடு வாடைக்குவிடுகிறாய்? என்று வீட்டு உரிமையாளரிடத்தில் காவல்துறையை கேட்கச் சொல்லி ஏவியது யார்?
ஆண்கள் இல்லாத வீட்டில் எங்களது முஸ்லிம்சகோதரிகள் மட்டுமே இருந்த வீடுகளுக்குள்அத்துமீறி பெண் காவலர் இல்லாமல் உன்னைநுழையச் சொன்னது யார்?
இரண்டு செல்ஃபோன்களை பிடுங்கச் சொன்னதுயார்? (காவல்துறை செல்ஃபோன் பிடுங்கியதைமறுக்க இயலாது; நாம் காவல்துறை உயர்அதிகாரிகளிடத்தில் புகார் அளித்த பிறகு அவர்களேகொண்டு வந்து இப்போது நம்மிடம் இரண்டுசெல்ஃபோன்களையும் திரும்ப ஒப்படைத்துள்ளனர்)
கமிஷனர் இந்த உத்தரவை போட்டாரா?
டிஜிபி இந்த உத்தரவை போட்டாரா?
இந்த உத்தரவை போட்டது யார்? உள்துறைசெயலாளரா?
அல்லது தலைமைச் செயலாளர் இந்த உத்தரவைபோட்டாரா?
முதல்வர் அவர்கள் இந்த உத்தரவை போட்டாரா?
இவர்களெல்லாம் அந்த உத்தரவை போடவில்லை என்றால் அந்த ஏ.சி.செந்தில் குமரன் மீதும், டி.சி.கிரி மீதும் நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் இவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்பது உறுதியாகும். இல்லாவிட்டால் முதல்வர், டிஜிபி, கமிஷனர் ஆகியோரது உத்தரவுப்படிதான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது என்பது உறுதியாகும். அது உறுதியாகுமேயானால், ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகித்ததற்காக எங்களை இப்படி ஒடுக்குவீர்கள் என்றால், இன்னுமொரு சுதந்திரப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயம் தயார். எங்களது பிரச்சாரத்தை தடுப்பாயேயானால், எந்த தியாகங்களை செய்தும் எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
உதயக்குமாரை நெருங்க வக்கில்லாத காவல்துறை:
ஒரு துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்துள்ளீர்களே! நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் தடுத்து நிறுத்த துப்பில்லாத காவல்துறைக்கு எங்களை மட்டும் கைது செய்ய துப்பு வந்துவிட்டதா?
காவல்துறையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, காவல்துறையினரை கடல் வழியே தாக்கும் உதயகுமாரை உங்களால் நெருங்க முடிந்ததா?
எவ்வளவோ கொலை, கொள்ளை, கற்பழிப்புகளைச் செய்யும் கயவர்களை கைது செய்யத் துப்பில்லாத காவல்துறையே! அத்தகையவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தாயா? அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய துப்பில்லாத நீ எங்களை கைது செய்ய வந்துவிட்டாயா? உன் வீரத்தை காட்டுவதாக இருந்தால் அவர்களிடத்தில் போய் காட்டு!
திட்டமிட்ட சதி:
முஸ்லிம்களை திட்டம் தீட்டித்தான் நாங்கள் கருவறுத்தோம் என்பதை சம்பந்தப்பட்ட காவல்துறை உயரதிகாரியே அவரையும் அறியாமல் உளறிவிட்டார்.
அமெரிக்க முற்றுகை போராட்டத்தின்போது, 23அமைப்புகள் செய்த வன்முறையின் காரணமாக முஸ்லிம்களை எல்லாம் இனிமேல் இப்படித்தான் நடத்துவோம் என்று அந்த உயர்அதிகாரி கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம்கள் என்றால் உனக்கு என்ன கிள்ளுக்கீரையா?
கான்ஸ்டபிள் வேலைக்குக்கூட தகுதியில்லாத செந்தில்குமரனும், கிரியும்:
துண்டுப்பிரசுரத்தை கொடுத்ததற்காக கைது செய்கின்றோம் என்று சொல்லி கைது செய்தாயே! நீ எங்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளாயே! அந்த எஃப்.ஐ.ஆர்-ல் என்ன எழுதியுள்ளாய்?
இதோ நீ போட்ட எஃப்.ஐ.ஆர் காப்பி. நான் வாசிக்கின்றேன்.
எஃப்.ஐ.ஆர்-ல் காவல்துறையின் அயோக்கியத்தனம்:
“தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியும், கேவலப்படுத்தியும், இந்து மதத்தை மிகத்தரக்குறைவாக விமர்சித்தும், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தியும், இந்துவாக பிறந்ததற்கே கேவலப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே மதவெறியைத்தூண்டிவிட்டு, இந்துக்களை மதம் மாற்றியே தீர வேண்டும் என்றும், முஸ்லிம் மதவாத பயங்கரவாத கும்பல் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்றும், விநாயகர் மீது செருப்பு வீசிய பயங்கரவாதிகள் அனைவரும் என்றும், கூட்டாக சேர்ந்து இந்த மத பிட் நோட்டீஸை தயார் செய்து இருந்ததாகவும், இவர்கள் மேலும் திருவல்லிக்கேணியில் திரும்பவும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும், இந்துக்களை தாக்கும் நோக்கத்துடனும், பல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும், இவர்கள் பல தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அமைதியாக இருக்கும் திருவல்லிக்கேணியில் மதக்கலவரத்தைத் தூண்டி இந்துக்களை தாக்கவும், இந்து பிள்ளையார்களை தாக்கவும் முயற்சியாகவே இந்த நோட்டீஸை விநியோகித்து மதக்கலவரத்தைத் தூண்டி பயங்கரவாதத்தை பரப்புகின்றார்கள் என்றும், அதனால் யாகூப் என்ற இவரை 15நாள் ரிமாண்டில் வைக்கின்றோம்” என்று மேற்கண்ட வரிகளை எஃப்.ஐ.ஆர்-ல் எழுதியுள்ளாயே! இது காவிச்சிந்தனையோடு போடப்பட்ட எஃப்.ஐ.ஆரா? இல்லையா?
இந்த எஃப்.ஐ.ஆர்.-ல் இப்படி நீ எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து எழுதியுள்ளதே உன்னுடைய
அயோக்கியத்தனம்தான், காட்டுமிராண்டித்தனம்தான், அராஜகம்தான், கொடுமைதான், காவிச்சிந்தனைதான்,மதவெறிதான் என்பதை காட்டுகின்றது.
நாங்கள் வெளியிட்ட நோட்டீஸில் அப்படி ஏதாவது ஒரு வாசகமாவது உள்ளதா?.
எஃப்.ஐ.ஆர். போடுவதிலும் கூறுகெட்டத்தனம்:
அந்த பொய் வழக்கையாவது ஒழுங்காக நம்பும்படி போடத்தெரிகின்றதா?. அதுவும் இல்லை.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மதமாற்றம் செய்ததாக எழுதியுள்ளார்கள். குண்டு வைத்துவிட்டு, பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்துவிட்டு இஸ்லாத்திற்கு வா என்றால் எவனாவது இஸ்லாத்திற்கு வருவானா? அந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் எஃப்.ஐ.ஆர். போட்டு தங்களது கூறுகெட்டத்தனத்தை வெளிக்காட்டியுள்ள இந்த ஏ.சி.செந்தில் குமரனும், கிரியும் சாதாரண கான்ஸ்டபில் வேலைக்குக்கூட தகுதியற்றவர்கள்.
முதல்வருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றால் தகுதியற்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை காவித்துறைதான் என்பதற்கான ஆதாரங்கள்:
பல்லாவரத்தில் செய்த அநியாயம்:
இதை ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரம்
டிசம்பர் 21ல் உலகம் அழியாது என்று நாங்கள் போட்ட துண்டுப் பிரசுரத்தில் வள்ளலார் என்று ஒரு வார்த்தை வந்ததற்காக நள்ளிரவில் எங்களை வீடு புகுந்து கைது செய்தாயே, நீ சரியான ஆளாக இருந்தால் பல்லாவரத்தில் இந்து முன்னணியினர் வெளியிட்டார்களே! மத துவேஷத்தை தூண்டக்கூடிய ஒரு துண்டுப் பிரசுரம். அந்த பிரசுரத்தை வெளியிட்டதற்காக இந்து முன்னணியினர் மீது நாங்கள் கடந்த 18.09.12 தேதியில் கொடுத்த புகாருக்கு இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்தாயா? அதில் எந்த அளவிற்கு மதத்துவேஷத்தை பரப்பியுள்ளார்கள்?.
அந்தத் துண்டுப் பிரசுரத்தில் உள்ள வாசகங்கள் இதோ:
யாரடா தமிழன்?
அம்மா, அப்பா என்பவர்களா?
மம்மி, டாடி, உம்மா, வாப்பா என்பவர்களா?
அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம்என்று சொல்பவர்கள் தமிழர்களா?
ஏசு மட்டும், அல்லாஹ் மட்டும் கடவுள்என்பவர்கள் தமிழர்களா?
வணக்கம் என்று கைகூப்பி அழைப்பவர்கள்தமிழர்களா?
ஸ்தோத்திரம், சலாம் அலைக்கும் என்பவர்கள்தமிழர்களா?
சாணம் முழுகி, கோலம் போட்டு, மாயிலைகட்டுபவர்கள் தமிழர்களா?
இதில் எதையும் கடைப்பிடிக்காமல்சுகாதாரக்கேட்டை உண்டுபண்ணுபவர்கள்தமிழர்களா?
தாலி, மெட்டி, பூ, வளையல் அணிபவள் தமிழச்சியா?
முக்காடும், மூளியாகவும் இருப்பவள்தமிழச்சியா?
என்று இப்படி அப்பட்டமாக மதத்துவேஷத்தை தூண்டக்கூடிய வகையில், முஸ்லிம்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யக்கூடிய அளவிற்கு, எங்களைப் படைத்த அல்லாஹ்வை நேரடியாக திட்டும் இந்தத் துண்டுப்பிரசுரம் கொடுத்த இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி இதே சென்னை காவல்துறையிடத்தில் புகார் கொடுத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இது வரை எந்த நடவடிக்கையாவது எடுத்தீர்களா? அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தீர்களா?
இது அப்பட்டமான காவிச்சிந்தனைக்கு ஆதரவான போக்கா? இல்லையா?
காரைக்குடியில்…
இந்து முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்ட விஷயத்தில் தாக்கியது யார் என்றே இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மறுகணமே, திருப்பூர் மாவட்டச் செயலாளரை தாக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகளை உடனே கைது செய் என்று இந்து முன்னணியினர் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டினார்களே! அதைக் கண்டித்து நாங்கள் புகார் கொடுத்த போது, இந்த காவல்துறை என்ன செய்தது? அவர்களை தூக்கி உள்ளே வைக்காமல், அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்றோம் என்று சொல்லி பூசி மெழுகினீர்களே! இதுதான் நீதியா?. நாங்கள் அறிவிப்பூர்வமாக நோட்டீஸ் வெளியிட்டால் எங்கள் மீது பொய் வழக்கு. இந்து முன்னணியினர் எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டினால் அவர்களுக்கு அறிவுரையா?
திருவள்ளூரில்…
முஸ்லிம்களுக்கு ஜிஹாத் என்றால் ரத்தம் குடிக்கும் எங்கள் காளிக்கு பலி பூஜை நடத்த நாங்கள் தயார் என்று சொல்லி போஸ்டர் ஒட்டி, இந்துக்களை எதிர்ப்பவர்களை காளி என்ற இந்துக்கடவுளுக்கு இரத்த காணிக்கை தருவோம் என்ற ரீதியில் அப்பட்டமான பயங்கரவாதத்தை தூண்டிவிட்டார்களே! அதைத் தடுக்க நீ எடுத்த நடவடிக்கை என்ன?
ஈரோட்டில்…
ஈரோடு மாவட்டம் கோபியில் முஸ்லிம்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தால் ஒரு முஸ்லிமும் நடமாட முடியாது என்று இந்து முன்னணியினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை குறித்து, நாங்கள் புகார் கொடுத்தால் அங்கு உள்ள சத்தியமங்கலம் டி.எஸ்.பி.முத்துசாமியும், இன்ஸ்பெக்டர் சௌந்தர ராஜனும் கூறுகிறார்கள், “அவ்வாறு துண்டு பிரசுரம் கொடுப்பது அவர்களுடைய கருத்து சுதந்திரம். இதற்கெல்லாமா கேஸ் போடுவார்கள்” என்று.
அப்படியானால், மற்றவர்கள் எங்களை கொல்ல வேண்டும் என்று சொல்லி நோட்டீஸ் போட்டால் அவர்களுக்கு அது கருத்து சுதந்திரம். நாங்கள் அறிவுப்பூர்வமாக நோட்டீஸ் வெளியிட்டால் நாங்கள் தீவிரவாதி; கோவையில் குண்டு வைத்தவர்கள் என்ற பட்டமா?
அப்படியானால் நாங்கள் எந்தப் பிரச்சாரமும் செய்ய அனுமதியில்லை; அப்படி பிரச்சாரம் செய்தால் நாங்கள் தீவிரவாதி என்று சொல்ல வருகின்றீர்களா?
இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா? அல்லது முதல்வர் கூட்டிய கூட்டத்திற்குப் பிறகு அவ்வாறு உத்தரவு போடப்பட்டதா?
சரியான முறையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக நல்லிணக்கத்திற்காக பாடுபடும் எங்களுக்கே தீவிரவாதி என்ற முத்திரை குத்தப் பார்க்கிறீர்களே! எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நாங்கள் வேறு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எங்களை தள்ளப் பார்க்கின்றீர்களா? அப்படி நாங்கள் வேறு வழியை தேர்ந்தெடுத்தால் இந்த நாடு தாங்காது. எங்களது மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளதால் நாங்கள் அதைச் செய்யமாட்டோம்.
இப்படிப்பட்ட அநியாயத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தினால் முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைகள் உடையும் அளவிற்கு அடித்து இரத்தக்களறியாக்கி மிருக வெறித்தாக்குதல் நடத்தினீர்களே! நாங்கள் என்ன செய்தோம்?
பேருந்தை கல் வீசித் தாக்கினோமா”?
பொதுச் சொத்துக்களுக்கு சேதம்விளைவித்தோமா?
போலீசைத் தாக்கினோமா?
சாலை மறியல் செய்தோமா?
எங்கள் மீது தடியடி நடத்தினாயே! 50 இந்து முன்னணியினர் சேர்ந்து 20.12.12 அன்று திருவல்லிக்கேணியில் சாலை மறியல் செய்தார்களே! அவர்கள் மீது தடியடி நடத்தினாயா? திருவல்லிக்கேணியை குட்டி பாகிஸ்தானாக முஸ்லிம்கள் உருவாக்க நினைக்கின்றார்கள் என்று பிட்நோட்டீஸ் கொடுத்து மதவெறியைத் தூண்டிய இந்து முன்னணியினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தாயா?
அப்படியானால் இது திட்டமிட்ட சதியா இல்லையா?
போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே பெரும் போலீஸ் படையை குவித்தாயே! இது திட்டமிட்ட சதியா இல்லையா?
போலீஸ்கள் அனைவரும் பேட்ஜுகள் இல்லாமல் திருடர்களைப் போல நின்றார்களே! அயனாவரம் ஏ.சி.கிருஷணசாமி என்பவர் கான்ஸ்டபிள் தரத்துக்கு இறங்கி லத்தியால் முஸ்லிம்களை கொலை வெறியோடு தாக்கினாரே! இதுவெல்லாம் திட்டம் போட்டு முஸ்லிம்க்ளை கருவறுத்ததா? இல்லையா?
27 முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு, லேசான முறையில் தடியடி நடத்தி கலைத்தோம் என்று சொல்கின்றாரே உயர் அதிகாரி. கை எலும்புகள் முறியக்கூடிய அளவிற்கு அடிப்பதுதான் லேசான அடியா? 8வயது சிறுவனென்றும் பாராமல் அவனையும் மண்டையை உடைத்துள்ளீர்களே! இது முஸ்லிம்கள் மீது கொண்ட வெறியா? இல்லையா?
இந்த அநியாயத்தை எளிதில் விட்டுவிடமாட்டோம்:
இது அனைத்தையும் சும்மா விடமாட்டோம்.
உச்ச நீதி மன்ற நீதிபதி வரை செய்தியை கொண்டுபோய் சேர்த்துள்ளோம்.
மனித உரிமை கமிஷனுக்கு புகார்கொடுத்துள்ளோம்.
சிறுபான்மை கமிஷனுக்கும் புகார் கொடுக்கடெல்லி வரை செல்லவுள்ளோம்.
டெல்லியிலிருந்து உனக்கு கேள்வி வரும்.
மனித உரிமை கமிஷனிலிருந்து கேள்வி வரும்.
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
உயர் நீதி மன்றத்திற்கு நீ பதில் சொல்லியாகவேண்டும்.
இதை முஸ்லிம் சமுதாயம் சும்மா விடாது. இதை இப்படியே விட்டுவிட்டால் எந்த முஸ்லிமும் இனிமேல் உரிமை கேட்டு போராட முடியாது. நையப் புடைப்பார்கள். நமது அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாது. எனவே முஸ்லிம் சமுதாயம் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.
ஒரு லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கும் சிறைநிரப்பும் போராட்டம்:
எங்களது ஜனநாயக உரிமையை பறித்து, நாங்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட வந்தபோது எங்களை பலவந்தப்படுத்தி எங்களது உணர்வுகளை நாங்கள் சொல்வதற்கு முன்னாலேயே கைது செய்து, எங்கள் மீது தடியடி நடத்தி இரத்த ஆறு ஓட்டினாயே!
இந்த சமுதாயம் சிறைசெல்ல அஞ்சாத சமுதாயம் என்பதை காவல்துறை காட்டுமிராண்டி மிருகங்களுக்கு உணர்த்தும் வகையில், எங்கு நீ தடியடி நடத்தினாயோ அதே திருவல்லிக்கேணியில் வரக்கூடிய ஜனவரி 3ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஒரு லட்சம் முஸ்லிம்கள் திரளும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
நீ எங்களை கைது செய்து உள்ளே வைக்கத்தானே ஆசைப்பட்டாய். ஒரு லட்சம் பேரையும் உன்னால் இயன்றால் கைது செய்து பார். அங்கு வந்து நீ தடியடி நடத்து. இந்த சமுதாயம், ஓடாமல் பின்வாங்காமல் அங்கு நின்று காட்டும். கைது செய்து வேனில் ஏற்றி சிறையில் அடைத்து, எங்களை 15நாள் ரிமாண்ட் பண்ணிப்பார்.
ஜனவரி 3ஆம் தேதிக்குள் திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன், திருவல்லிக்கேணி சரக டி.சி.கிரி, அயனாவரம் ஏ.சி.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அந்த போராட்டத்திற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்க மறுத்தால் அடுத்த கட்டப்போராட்டம் தொடரும்.
முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம்:
அடுத்த கட்ட போராட்டம் என்ன தெரியுமா?. காவித்துறையான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம். அது பெயரளவிலான முற்றுகையாக இருக்காது. நிஜமான முற்றுகையாக இருக்கும். அப்போது உன் தடியடிகளுக்கு மட்டுமல்ல; துப்பாக்கி தோட்டாக்களுக்குக்கூட அஞ்சாத கூட்டமாக அந்தக்கூட்டம் அங்கு வந்து நிற்கும் என்பதை குறித்து வைத்துக் கொள்” என்று ஆக்ரோஷமாக பேசி முடித்தார்.
அனைத்து அமைப்புகளும் ஓரணியில்…
1992 ஆம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே கருத்தில் இருக்கும் நிலை தற்போது முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட இந்த தடியடி விஷயத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், இது தவ்ஹீத் ஜமாஅத் மேட்டராக அல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய மேட்டராக மாற்றியுள்ளீர்கள் என்றும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் காவல்துறையின் இந்த அயோக்கியத்தனத்தை ஒருமித்த குரலில் எதிர்க்கின்றன என்றும், இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது என்றும் பீஜே தனது உரையில் குறிப்பிட்டார்.
நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் உள்ளனர்:
காவல்துறையை இந்த அளவிற்கு தாக்குவதை பிற காவல்துறை அதிகாரிகள் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. நாங்கள் தாக்குவது அந்த குறிப்பிட்ட அநீதி இழைத்த அந்த மூன்று அதிகாரிகளைத்தான். காவல்துறைக்கு இழிவை ஏற்படுத்திய அந்த அதிகாரிகளைத்தான் நாங்கள் தாக்குகின்றோமே ஒழிய காவல்துறையில் நல்ல அதிகாரிகளும் உள்ளனர் என்பதையும் பீஜே சுட்டிக்காட்டினார்.
வரலாற்றை புரட்டிப்போட்ட கூட்டம்:
இவ்வளவு கொட்டும் மழையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இந்த விஷயத்தில் பாதிக்கப்படுள்ளார்கள் என்பதை காட்டுகின்றது. மண்ணடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மிகப்பெரிய அளவிற்கு மக்கள் திரள் திரண்டது. இதுவரையில் மண்ணடியில் இப்படி ஒரு கூட்டம் நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு வெளியூரிலிருந்து யாரும் வந்துவிட வேண்டாம் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இந்த பொதுக்கூட்டத்திற்கு வரவேண்டாம். 3ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு வாருங்கள் என்று நாங்கள் மாவட்டங்களுக்கு சொல்லியுள்ளோம் என்பதையும் பீஜே அந்த பொதுக்கூட்டத்தில் பதிவு செய்தார்.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.