Thursday, March 01, 2012

என்கவுன்டர் மூலம் திருட்டை ஒழிக்க முடியாது!

இவர்கள் தான் வங்கியில் கொள்ளையடித்தார்கள் எனக்கூறி காவல்துறையினர் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுதான் ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவிக்கும் அனைவருமே தம்மைத் தாமே அறிவீனர்களாகக் காட்டிக் கொள்ளும் வகையில் அந்த விவாதம் தொடர்கிறது.

எல்லா என்கவுன்டர்களும் போலியானவைதான்

இப்போது நடந்தது உண்மையான என்கவுன்டரா, போலியான என்கவுன்டரா என்று இவர்கள் விவாதிப்பதே அர்த்தமற்றதாகும். தமிழகத்திலும் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட எல்லா என்கவுன்டர்களுமே போலியானவைதான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இதைப்பற்றி விவாதி்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்து, அது நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு கொலைக் குற்றத்தி்ற்கான தண்டனை வழங்கப்படாது. மக்களுக்கு உள்ள இதே உரிமை காவல்துறைக்கும் உள்ளது. அவர்கள் தங்களது கடமையைச் செய்யும்போது குற்றவாளிகள் அவர்களைக் கொல்ல முயற்சித்தால், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கியால் சுட்டு எதிரிகளைக் கொன்று அது நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படுமானால், அவர்களுக்கு கொலைக் குற்றத்திற்கான தண்டனை அளிக்கப்படாது.

ஆனால், கொலை செய்தது பொதுமக்களாக இருந்தாலும், போலிசாக இருந்தாலும், தற்காப்புக்காகவே இந்தக் கொலை நடந்திருந்தாலும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றம்தான் இது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்காப்பிற்காக நடந்ததா என முடிவு செய்யும்.

ஆனால் காவல் துறையினர் தற்காப்புக்காக கொல்லும் நிலை ஏற்படுவதில்லை. தற்காப்புக்காக கொலை செய்வது என்பது பொதுமக்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைதானே தவிர, காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சனை அல்ல. காவல்துறையால் தேடப்படுபவன் சுற்றி வளைக்கப்பட்டால், அவன் ஒரு போதும் காவலர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கவே மாட்டான். எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் அதிக பலத்துடன் உள்ள காவல்துறையினர் மீது அவன் துப்பாக்கியால் சுட்டாலோ, வெடிகுண்டை வீசினாலோ அவன் கதை அத்தோடு முடிந்துவிடும். சாதாரண மக்களுக்கே இது நன்றாகத் தெரியும். சாதாரண மக்களை விட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது இன்னும் நன்றாகவே தெரியும்.

நக்சலைட்டுகளுடன் நடக்கும் ஆயுதப்போரில் மட்டும்தான் நிஜமாகவே என்கவுன்டர் நடக்கும் போலிசாரும் அதில் கொல்லப்படுவார்கள். காயமடைவார்கள், ஏனெனில் போலிசைப் போலவே ஆள்பலமும், ஆயுத பலமும் அவர்களிடம் உண்டு.

இதைத் தவிர எல்லா எண்கவுன்டர்களுமே பொய்யானதுதான். போலியானதுதான. இப்போது நடந்த என்கவுன்டர் போலியா உண்மையா என விவாதித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இந்த என்கவுன்டரில் மட்டுமல்லாமல் எல்லா என்கவுன்டர்களின் போதும் காவல்துறையினர் கூறுவது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் பொய்யானவை.

கிரிமினல்களை மிரட்டும்போது உன்னை என்கவுன்டரில் போட்டுத் தள்ளுவேன் என்று காவல்துறை அதிகாரிகள் மரட்டுவார்கள். இதில் இருந்தே என்கவுன்டரின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். மதுரையில் என்கவுன்டர் புகழ் அதிகாரி யாரைப் பார்த்தாலும், என்கவுன்டரில் போட்டுவிடுவேன் என்பார். உயிரைக் காப்பாற்றத்தான் என்கவுன்டர் என்றால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்கும் போது இப்படிச் சொல்ல முடியாது.

பத்திரிகைகளும் பல குற்றவாளிகள் பற்றி செய்தி வெளியிடும்போது என்கவுன்டரில் போட்டுத் தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். முன்கூட்டியே முடிவு செய்தால் அது எப்படி என்கவுன்டர் ஆகும்?

ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கை அசையவில்லை. அதனால் இது பிணம்தான் என்று ஒருவர் சொல்கிறார் கண்ணே திறக்கவில்லை. அதனால் இது பிணம்தான் என்று இன்னொருவர் சொல்கிறார். உலகத்துக்கே பிணம் என்று தெரிந்த நிலையில் இப்படி விவாதித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் மீடியாக்களில் நடக்கும் இந்த விவாதமும் அமைந்துள்ளது.
நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கும்போது காவல்துறையும் அரசாங்கமும் ஏன் என்கவுன்டர் என்ற பெயரில் படுகொலையைச் செய்யும் நிலைக்கு வருகின்றனர்?

அன்றாடம் குற்றச் செயல்கள் நடக்கும் போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மிகக் கொடூரமான கொலை கொள்ளை நடக்கும்போது மக்களுக்குக் கோபம் அதிகரிக்கிறது. கொந்தளிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று மக்கள் கோபம் கொள்ளும் நிலை ஏற்படும்போது தங்களின் திறமையைக் காட்டிக் கொள்வதற்காகத்தான் அதிகமான படுகொலைகள் காவல்துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. அதுவும் அரசின் வாய்மொழியான அனுமதி பெற்று இது நடத்தப்படுகிறது. காவல்  துறையைச் சேர்ந்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைத்தால் அந்தக் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு விடுகிறார் என்பதற்கு நெல்லை சேலம் ஆகிய நகரங்களில் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது உதாரணமாக உள்ளது. இது போல் வசமாக மாட்டிக் கொள்ளும் போது தான் காவல்துறையினர் தாக்கப்பட்டு கொல்லவும்பட்டுள்ளனர். துப்பாக்கியுடனும் படையுடனும் இருக்கும் போது எந்தக் காவல் துறையினரையும் யாரும் கொல்லவே முயற்சிக்கமாட்டார்.

கோவையைச் சேர்ந்த சிறுமியைக் கடத்தி கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலையாளி கையில் கிடைத்தால் மக்களே அவனைக் கொன்றுவிடக் கூடிய நிலையில் இருந்தார்கள். மக்களின் இந்த உணர்வுகளுக்கு ஏற்ப குற்றம் சாட்டப்பட்டவனைக் கைது செய்த காவல்துறையினர் நிராயுதபாணியாக இருந்த அவனைக் கொலை செய்தார்கள். மக்களின் உணர்வுகளுக்கேற்ப இந்தக் கொலை இருந்ததால், இதற்கு மக்களின் ஆதரவும், ஊடகங்களின் ஆதரவும் மற்றும் அனைத்துக் கட்சியினரின் ஆதரவும் இருந்தன. இப்போது நடந்த போலி என்கவுன்ரைக் கண்டிக்கும் பல இயக்கத்தினர் அந்தப் போலி என்கவுன்டரை நியாயப்படுத்தினர், பாராட்டினர்.

அந்த என்கவுன்டரைக் கண்டித்தால் மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அளவுக்கு அப்போதைய நிலை இருந்தது. மக்கள் ஆதரவு இருந்தாலும் அது போலி என்கவுன்டர்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

ஆனால் வங்கிக் கொள்ளையர் மீது சமூதாயத்தினருக்கு அந்த அளவுக்கு கோபம் இல்லை. கையில் கிடைத்தால் கொன்று போடவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. பத்துப்பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு இவர்கள் கொள்ளையடித்திருந்தால், அப்போது போலி என்கவுன்டர் அவசியம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள். முந்ததைய சம்பவம்போல் இதுவும் மாறிப்போயிருக்கும்.

இதுதான் இரண்டு என்கவுன்டருக்கும் உள்ள வித்தியாசம்.

யாரைத் தண்டிப்பதாக இருந்தாலும், அதை விசாரித்து ஆதாரங்களுடன் நிரூபித்துவிட்டு சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டும். இதுதான் நாகரிகமான சமுதாயத்தின் நடைமுறையாக இருக்க வேண்டும். போலிசார் யாரைக் குற்றவாளி என்று முடிவு செய்து சுட்டுக் கொல்கிறார்களோ, அவர்கள் குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என்று காட்ட முடியும். ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவனருகில் சில துப்பாக்கிகளைப் போட்டு வைப்பதும், கட்டுக்கட்டாக ரூபாய்களைப் போட்டு வைப்பதும், மிரட்டி சாட்சி சொல்ல வைப்பதும் போலிசுக்கு சாதாரணமானவை. எந்த அப்பாவியையாவது சுட்டுக் கொன்றுவிட்டு மக்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

சட்டத்தின் பார்வையிலும் அறிவுப்புர்வமாக சிந்திக்கும் போதும் இது ஏற்முடியாதது என்றாலும் மக்களின் அதிகமானவர்கள் பெரும்பாலான என்கவுன்டர்களை ஆதரிக்கிறார்கள் மக்கள் ஆதரவு இருக்கும் போது அறிவுஜீவிகளின் வாதங்கள் எடுபடப் போவதி்ல்லை.
என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்த அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படப் போவதும் இல்லை. தற்காப்புக்காகத்தான் செய்தார்கள் என்று நிரூபிக்கும் வகையில் வழக்கையும் சாட்சிகளையும் ஜோடிப்பது அதிகார வர்க்கத்துக்கு கஷ்டமானது அல்ல.

மக்கள் ஏன் என்கவுன்டர்களுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள்? இது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் போது இது தங்களையும் பாதித்துவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். நிர்வாகமும், சட்டமும் பலவீனமாக இருப்பதை மக்கள் உணர்கிறார்கள். இப்போது இருக்கும் சட்டத்தினால் யாரையும் தண்டிக்க முடியாது என்று அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு சுதந்திரமாக நடமாடுவதையும் மேலும் மேலும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மக்கள் பார்க்கிறார்கள். வேறு ஏதாவது செய்தால் தான் சரிப்பட்டு வரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நாலு பேரைப் போட்டுத் தள்ளினால்தான் திருடர்களுக்குப் பயம் வரும், நம்முடைய உயிரும் உடமையும் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். சுயபாதுகாப்பு என்று வரும்போது, தர்மத்தையும் நியாயத்தையும் மக்கள் பார்ப்பதில்லை. இந்தப் பலவீனம் மற்றும் பயம் காரணமாகவே போலி என்கவுன்டர்தான் எனத் தெரிந்தாலும், அதற்கு எதிராக நிற்க மறுக்கிறார்கள், ஆதரிக்கவும் செய்கிறார்கள் இப்போது நாட்டில் நீதிவழங்கும் இலட்சணத்தை விட என்கவுன்டர் சிறந்தது என்று நினைக்கும் வகையில் தான் நீதிபரிபாலனம் இங்கே உள்ளது.

சட்டத்தால் பாதுகாக்க முடியாதபோது சட்டவிரோதமான முறையிலாவது பாதுகாப்பு கிடைத்தால் சரிதான் என்ற மக்களின் மனநிலை காரணமாகத்தான் என்கவுன்டர்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

குற்றங்களை என்கவுன்டர் குறைக்குமா?

குற்றங்களை குறைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் ஆதரித்தாலும். என்கவுன்டர்களால் குற்றங்களைக் குறைக்க முடியாது. இதுதான் நடைமுறையில் தெரிய வரும் உண்மையாகும். அப்போதைய உணர்வுக்கு ஒரு வடிகாலாகவும் ஆறுதலாகவும் தான் இது இருக்குமே தவிர அவர்கள் எதிர்பார்க்கும் நல்விளைவு ஏற்படாது.

குழந்தை கடத்தலுக்காக கோவையில் என்கவுன்டர் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தலைநகரத்திலேயே சிறுவன் கடத்தப்பட்டான். பணம் கொடுத்து காவல்துறையினர் அவனை மீட்டு கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதன் பின்னர் இன்று வரை குழந்தை கடத்தலும் குழந்தைக் கொலையும் கொஞ்சமும் குறையவில்லை என்கவுன்டரால் இவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

வங்கிக் கொள்ளையர்கள் என்று சொல்லி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளும், அதற்கடுத்த இருநாட்களும் வழக்கம் போல் ஐந்து வங்கிக் கொள்ளைகள் நடந்துள்ளன. வழக்கம்போல் எண்ணற்ற திருட்டுகளும் குறையில்லாமல் நடக்கின்றன.

ஒரு குற்றத்திற்காக என்கவுன்டர் நடந்தால் அதே குற்றத்துக்காக மறு என்கவுன்டர் செய்ய போலிசார் ஐந்து வருடங்களாவது எடுத்துக் கொள்வார்கள் என்பது கிரிமினல்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த என்கவுன்டர் பிரச்சினையிலிருந்து காவல் துறையினர் மீண்டு வரவே ஐந்து வருடம் ஆகும் கொள்ளைகள் தொடர்கின்றன சட்டவிரோதமான என்கவுன்டரைத் தொடர்ந்து செய்ய முடியாது. எப்போதாவது அரிதாகத் தான் செய்ய முடியும்.

குற்றங்களைக் குறைக்க என்னதான் வழி?

என்கவுன்டர்கள் மூலமாக படுகொலைகள் செய்யாமல் உண்மையாகவே கொள்ளை மற்றும் திருட்டுக் குற்றங்களைக் குறைக்க நினைத்தால் திறமையான ஆட்சியாளர்களால் அது சாத்தியமே.

1. விரைந்து வழக்கை முடித்தல்

குற்றங்கள் தொடர்ந்து நடக்கக் காரணம், நீதி மன்றங்களின் அநியாயத் தாமதம். ஒரு கிரிமினல் குற்றத்தை விசாரித்து தீர்ப்பளிக்க பத்து வருடங்களும், அதற்கு மேலும் ஆகிறது. குற்றத்துக்கு சாட்சியாக இருந்தவன் இறந்து விடுகிறான். அல்லது குற்றவாளிகளால் மிரட்டப்படுகிறான். பல வருடங்கள் ஆகும்போது சாட்சி சொல்பவனுக்கே குற்றவாளி மீது அனுதாபம் வந்து விடுகிறது. இதனால் அதிகமான குற்றவாளிகள் விடுதலை ஆகிவிடுகிறார்கள்.

ராஜிவ் காந்தி கொலையானபோது அன்றைக்கு மக்களுக்கு இருந்த ஆத்திரம் ஒரு ஆட்சியையே மாற்றிப்போட்டது. ஆனால் காலம் கடந்த பின்னால் கொலையாளிகளுக்கு ஆதரவு பெருகிவிட்டது ராஜீவ் மறக்கப்பட்டு விட்டார். இதுதான் மனிதனின் இயல்பு

ஒரு குற்றம் நடந்தால், அவன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பதினைந்து நாட்களில் விசாரித்து முடிக்க இயலும் விரைந்து விசாரிக்கும் போது சாட்சிகள் மிரட்டப்பட முடியாது. சாட்சிகள் சாகும் வாய்ப்பும் குறைவு. குற்றவாளியின் மீது சாட்சிக்கு அனுதாபமும் ஏற்படாது.  இப்படி மிக விரைவாக விசாரித்து தண்டனை வழங்கினால்  அதிகமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

எந்தப் பிரச்சினையான இருந்தாலும் தயவு செய்து கோர்ட்டுக்குப் போகாதீர்கள். உங்கள் பேரன் காலத்தில் தான் தீர்ப்பு கிடைக்கும் என்று மக்கள் கேவலமாகப் பேசிக் கொள்ளும் வகையில் நீதித்துறையில் அநியாயத் தாமதம் இங்கே உள்ளது.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு எத்தனை நீதிபதிகளும், நீதி மன்றங்களும் இருக்க வேண்டுமோ அதில் கால்பகுதிதான் இங்கே உள்ளது.  இதனால் வாய்தாக்கள் போட்டு இழுத்தடிக்கின்றனர்.

வழக்கு எதுவும் வராதா என்று நீதி மன்றங்களும், நீதிபதிகளும்
காத்திருக்கும் அளவுக்கு நிலைமை உருவானால்தான் குற்றங்கள் குறையும்.

ஊதாரித்தனமாக பணத்தைச் செலவிடும் அரசுகள், மக்களின் உயிர் உடமைகளின் பாதுக்காப்பு விஷயத்தில் கடும் அலட்சியம் காட்டுகின்றன. அதிகமான நீதிபதிகளை நியமிக்க எத்தனை ஆயிரம் கோடி செலவிட வேண்டிவந்தாலும் செலவிட்டுத் தான் ஆகவேண்டும். ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை மக்களின் உயிர் உடமைகளைப் பாதுகாப்பது தான் இதைச் செய்யாமல் ஒரு மாதத்தில்  ஒழிப்பேன் ஒரு வாரத்தில் ஒழிப்பேன் என்று ஜம்பம் அடித்தால் அதனால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

இதில் போதிய அக்கரை செலுத்தாவிட்டால் இன்னும் குற்றங்கள் பெருகிக் கொண்டேதான் இருக்கும் எண்கவுன்டர் நாடகமும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

2. தண்டனையில் மாற்றம் தேவை

அடுத்து தண்டனை முறைகளும் கூட குற்றங்கள் பெருகக் காரணமாக உள்ளன

பல ஆண்டுகள் இழுத்தடிப்பதாலும், பலவீனமாக வழக்குப் பதிவு செய்வதாலும் பலர் தப்பித்துக் கொண்டாலும் சிலர் தண்டிக்கப்படுகின்றனர். இந்தத் தண்டனைகள் யாவும், பைத்தியக்காரத்தனமாகவும், பணத்தை வீண் விரயம் செய்யக்கூடியதாகவும், குற்றம் செய்யத் தூண்டுவதாகவுமே உள்ளன

சிறையில் அடைத்தால் நம்முடைய வரிப்பணம் பாழாகிறது. கிரிமினல்கள் சிறையில் தங்களது அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், புதுப்பது தீய வழிகளைச் சிந்திக்கவுமே சிறைச்சாலைகள் உதவுகின்றன.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சொல்வது போல் சட்டம் இயற்றினால் அது என்கவுன்டரை விட குறைவானதாக இருக்கும். குற்றங்களும் குறைந்துவிடும்.

திருடினால் கையை வெட்டு என்று இஸ்லாமியச் சட்டத்தை இவர்கள் கொண்டு வரப்போவதில்லை. அதற்கான திராணி இவர்களுக்கு இல்லை.
இஸ்லாமியச் சட்டத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், இப்புாது உள்ள தண்டனைகள் குற்றங்களைக் குறைக்காது என்பது கூடவா இவர்களுக்குப் புரியவில்லை.

கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை சில மாதங்கள் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவர்களி்ன் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் அதற்கான தண்டனை என்று சட்டம் இயற்றினால் எவன் திருடுவான்? சிறைச்சாலையில் சோறு போடும் செலவும் மிச்சமாகும். பறிமுதல் செய்த பணத்தால் அரசு கஜானாவும் நிரம்பும்.

சொத்தே இல்லாதவன் திருடினால், அவன் உழைத்து மாதமாதம் இவ்வளவு தொகையை நீதிமன்றத்தில் கட்டவேண்டும் என்று சட்டம் போட்டால் ஏழையும் திருட மாட்டான்.

பணத்தை பெருக்கவே திருடுகிறான். இருக்கின்ற சொத்தும் போய்விடும் என்றால் எவனுமே திருடமாட்டான். சிறையில் அரசாங்கச் செலவில் மூன்று மாதம் சாப்பிட்டுவி்ட்டு, விடுதலையாகி திருட்டுப் பணத்தில் சொகுசாக வாழலாம் என்று கிறுக்குத்தனமான சட்டத்தை வைத்துக் கொண்டு யாரையும் குறை சொல்ல முடியாது.

இவைகளைச் செய்யாமல் இவர்களால் திருட்டையும், கொள்ளையையும் ஒழிக்கவே முடியாது.

3. கிரிமினல்களுடன் காவல்துறையினர் கூட்டு

குற்றங்கள் பெருகுவதற்கு அடுத்த காரணம் குற்றவாளிகளை ஊக்குவித்து மாமூல் வாங்கும் காவல்துறையினர்தான். சிறிய அதிகாரிகளிலிருந்து பெரிய அதிகாரிகள் வரை முக்கால்வாசிப்பேர் கிரிமினல்களுடன் கூட்டாக உள்ளனர்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் கொடுக்கல வாங்கலை முடித்துத் தரும் கட்டப்பஞ்சாயத்தினர் உள்ளனர். பணம் வாங்கிக் கொண்டு ஒருவன் சொத்தை இன்னொருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த கிரிமினல்கள் காவல்துறையை வைத்து மிரட்டித்தான் காரியம் சாதிக்கின்றனர். இருபத்தைந்து கதவிகிதம் வரை காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்தில் கமிஷன் வாங்கிக் கொள்கின்றனர். வில்லங்கச் சொத்துக்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருடன் காவல்துறை உயா் அதிகாரிகள் பலருக்குக் கூட்டு உண்டு.

ஒவ்வொரு பகுதியில் உள்ள கிரிமினல்களுக்கும் அந்தப் பகுதியில் காவல்துறை நண்பர்களும் பாதுகாவலர்களும் உள்ளனர்.  இந்த தைரியத்தில் தான் கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த அதிகாரி நம்மை பிடிக்க மாட்டார். யாரையாவது ஒரு அப்பாவியைப் பிடித்து வழக்கை முடித்துவிடுவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பிடிப்பட்டாலும், உப்பு சப்பில்லாத வகையில் வழக்குப் பதிவு செய்து நம்மைத் தப்ப வைத்து விடுவார் என்று நினைக்கின்றனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினருக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள உறவு அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இது ஊருக்கே தெரிந்த ரகசியமாக இருந்தும் இதை ஒழிக்க எந்த முயற்சியையும் எந்த அரசும் எடுப்பதில்லை. வேலியே பயிரை மேய்கிறது என்ற நிதர்சனமான உதாரணமாக காவல்துறை இருப்பது தான் குற்றங்கள் பெருகவும், குற்றவாளிகள் துணிவு பெறவும் மற்றொரு காரணமாக இருக்கிறது.
இந்த மூன்றையும் செய்தால் திருட்டும் கொள்ளையும் பெருமளவு குறைந்துவிடும் அரசாங்கம் செய்யுமா?

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டிவிடுங்கள். இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும் அல்லாஹ்வின் தண்டனையும் ஆகும். அல்லாஹ் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். அல்குர்ஆன் 5 - 38

நன்றி
உணர்வு