Thursday, March 15, 2012

சமுதாயப்பணிகளை விளம்பரப்படுத்தலாமா?

கேள்வி:
தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுமா?

பதில் : பொதுவாக நாம் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதில் இறைவனின் பரிசை மட்டுமே எதிர்பார்த்து செய்ய வேண்டும். உலகில் பெயர் வாங்கும் எண்ணத்தில் செய்யும் எந்தக் காரியத்துக்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடைக்காது. இது கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொண்ட பொதுவான விதியாகும்.

ஆனால் படம் பிடித்துப் போட்டால் அது பெயர் வாங்குவதற்காக செய்தது என்று அர்த்தம் இல்லை. படம் பிடித்துப் போடாவிட்டால் அது இறை திருப்திக்காக செய்த காரியம் என்றும் அர்த்தம் இல்லை. படம் பிடித்துப் போடுவதிலும் இறை திருப்தி இருக்கலாம். படம் பிடித்து போடாமல் இருப்பதிலும் பேர் வாங்குவது நோக்கமாக இருக்கலாம். இவர்கள் எதை செய்தாலும் அதைப் படம் பிடித்துப் போட மாட்டார்கள் என்ற பெயர் வாங்குவதைக் கூட சிலர் எதிர்பார்க்கலாம்.

நன்மையான காரியத்தை பகிரங்கப்படுத்தினால் அது பெயர் வாங்குவதற்குத்தான் என்ற கருத்தை அல்லாஹ் மறுக்கிறான்.

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் திருக்குர்ஆன் 2:271

நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:149

பகிரங்கமாகச் செய்யும் காரியங்களில் பிறரிடம் பேர் வாங்கும் எண்ணம்தான் அடிப்படையாக இருக்கும் என்றால் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் இரண்டு விதமாகவும் செய்யலாம் என்று சொல்லி இருக்க மாட்டான். பகிரங்கமாக செய்யும் போதும் இது போல் மற்றவர்களும் செய்ய நமது செயல் தூண்டுதலாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிரங்கமாக செய்தால் அதுவும் நன்மையைப் பெற்றுத் தரக் கூடியதாக ஆகி விடுகிறது.

பகிரங்கப்படுத்தும் போது கொடுத்ததை சொல்லிக் காட்டி, வாங்கியவரைச் சிறுமைப்படுத்தி புண்படுத்தும் தன்மை இருந்தால் அது போன்ற பகிரங்கப்படுத்துதல் தான் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன் 2:264

நாம் செய்யும் ஒரு செயலை நாம் பகிரங்கப்படுத்தும் போது அதனால் நமது தூய எண்ணத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அத்தகைய நிலையில் உள்ளவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்வதை குறை கூற முடியாது. அது போல் தூய எண்ணத்துக்கு பாதிப்பு வராத நல்லெண்ணத்தில் ஒருவர் பகிரங்கப்படுத்தினால் அதையும் குறை சொல்லக் கூடாது. இறைவன் அனுமதித்த ஒன்றைக் குறை காண்பது அல்லாஹ்வை எதிர்க்கும் கொடும் குற்றமாக ஆகிவிடும்.
நன்றி
உணர்வு