Monday, February 27, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்


முந்தைய பகுதி:


1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. 

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.  

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது, மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள். 

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 

صحيح وضعيف سنن الترمذي - (ج 1 / ص 1)
 حدثنا قتيبة بن سعيد حدثنا أبو عوانة عن سماك بن حرب ح و حدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது.என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ். 

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார். 

முஸ்அப் பின் ஸஃது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர். 

முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார். 

ஸிமாக்கிடம் வகீவு என்பாரும் அபூ அவானா என்பாரும் கேட்டனர்.

வகீவு என்பார் வழியாகவும் அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.

முதல் வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     இஸ்ராயீல்
6.     வகீவு
7.     ஹன்னாத்
8.     திர்மிதீ

இரண்டாவது வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     அபூ அவானா
6.     குதைபா
7.     திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார். அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இப்படித் தான் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். 
  • இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.