சகோதரர் M I சுலைமான்
அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலை கடல் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் அதில் எவை திரும்புகிறது என்பதை கவனிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்தவரித் (ர), நூல்கள்: முஸ்ம் (5101), திர்மிதீ (2245), இப்னுமாஜா (4098),
மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். இவ்வுலக வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களும் மறு உலகவாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களைப் பற்றி இந்த உதாரணம் மூலம் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மறுஉலகத்தில் கிடைக்கும் இன்பங்கள் கடலளவு நிறைந்தவை. இவ்வுலக இன்பங்கள் ஒருவர் கடல் தனது ஆட்காட்டி விரலை நுழைத்து வெளியே எடுக்கும் போது அந்த விரல் கடல் நீர் எவ்வளவு திரும்பவும் வந்து சேரும்? இந்த விரல் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இவ்வுல இன்பம். இதுதான் இவ்வுலக மறுஉலக இன்பங்களுக்கு உதாரணம்.
கடலுடன் ஒப்பிடும் போது விரல் ஒட்டிக்கொண்டிருக்கும் அளவுதான் இவ்வுலக இன்பங்கள். கடல் என்பது மறுஉலக இன்பங்கள். இதில் முஃமின்கள் எந்த இன்பத்தை தேர்வு செய்ய போகிறார்கள்?
இதைப்போன்று நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது இவ்வுலகம் இவ்வுலுகத்தில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ர), நூல்கள் : புகாரீ (2892),திர்மிதீ (1572),இப்னுமாஜா (4321), அஹ்மத் (15012), தாரமீ (2699)
விரல் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்பத்திற்காக கடல் அளவு இன்பத்தை இழக்கும் மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ''அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)
இவ்வுலக இன்பத்தை விரும்பிய ஒருவர் நடந்தாலும் அதை தருபவனும் அல்லாஹ்தான், அவன் நாடாமல் ஒருபோதும் இவ்வுலக இன்பத்தை நீங்கள் அடையமுடியாது.
யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:134)
அல்லாஹ்வை நம்பாதவர்கள், நம்பியும் அவன் கட்டளைபடி நடக்காமல் பொருட் செல்வங்கள் அதிகம் பெற்றவர்களைப் பார்த்து நீங்களும், அவர்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து விடவேண்டும். இவ்வாறு அவர்களுக்கு பொருட் செல்வம் வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்குதான் என்பதை மறந்துவிட வேண்டாம்!
அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கை யில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)
''விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
இவ்வுலகத்தை பயந்து கொள்ளுங்கள்!, பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம் (4925)
இவ்வுலக வாழ்க்கை மனிதனை மயக்கத்தில் ஆழ்த்தும் அதன் மீது ஆசையைத் துண்டும், மனிதன் வளரும் போதே இந்த ஆசைûயும் சேர்ந்தே வளர ஆரம்பிக்கும் அதற்காக மார்க்க சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு விட்டு உலக இன்பங்களுக்கு முதடம் கொடுத்துவிடக் கூடாது.
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை 2. நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரீ (6421)
நபித்தோழர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இந்த உலக இன்பங்களைத்தான் மிக அதிகமாக எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.
6425 .... فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ رواه البخاري
இறுதியாக இவ்வுலக வாழ்க்கையில் இறைக்கட்டளைபடியும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படியும் நடப்பவர்களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலைப் போன்றே தோற்றமளிக்கும். இறைக்கட்டளை மதிக்காதவர்களுக்கு இந்த உலகம் சொர்க்கப்பூஞ்சோலையாக காட்சியளிக்கும்.
நபி (ஸல்) அவர்களிடம் இந்த உலக இன்பத்தைப்பற்றி எடுத்துரைத்போதுகூட அவர்கள் மறுஉலகத்தில் இதைவிட சிறந்த இன்பத்திற்கு காத்திருப்பதாக கூறியுள்ளார்கள்.
படைத்தவனை நம்பியவர்கள் மறு உலக வாழ்க்கை நம்பியவர்கள் கடல் அளவு இன்பத்தை பெற முற்சிக்க வேண்டும்.
இவ்வுலகம் முஃமீன்களுக்கு சிறைச்சாலையாகவும் இறைநிராகரிப்பாளர்களுக்கு சொர்க்கமாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்த பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்சம் நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே (பைளாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள். (புகாரீ 4913)
பிர்அவ்ன் என்ற கொடுமைக்காரன் ஆட்சியில் வாழ்ந்த சூனியக்காரர்கள் மூஸா (அலை) அவர்கள் செய்தது உண்மையான அற்புதம் என்பதை தெளிவாக விளங்கியவர்கள் பிர்அவ்னின் கொடுமைகளுக்கு பயப்படாமல் ஓரிறைக் கொள்கை ஏற்று இவ்வாறு கூறினார்கள்.
''எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்றனர். ''எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20;72,73)
நபி (ஸல்) அவர்களைப் போன்று பிர்அவ்ன் காலத்தில் வாழ்ந்த சூனியக்காரர்களைப் போன்று மறுமை வாழ்க்கைக்கு முதடம் கொடுத்து இவ்வுலக வாழ்க்கையில் இஸ்லாம் கூறி அறிவுரைகளை பேணி நடந்து கொள்வோம்.