Wednesday, March 14, 2012

ஹதீஸ் கலை அறிவோம் : மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மற்றும் ளயீஃப் (பலகீனமான) ஹதீஸ்கள்

முந்தைய பகுதிகள்:


3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்

மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்

மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

  

4. ளயீஃப் (பலவீனமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது

சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?

உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (அல்குர்ஆன் 17:36)  என்று அல்லாஹ் கூறுகின்றான்

உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி),
நூற்கள் : திர்மிதீ, அஹ்மத், ஹாகிம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன

பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது

அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

குறிப்பு:

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.