Wednesday, July 16, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர் - 4) - தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

திருக்குர்ஆன் 21: 25

'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65,66

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:59

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?' என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 7:65

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து சான்று வந்துள்ளது ..... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:73

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது .... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:85

ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்’ என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:50

ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்' என்றார்.

திருக்குர்ஆன் 11:61

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்' என்றார்.

திருக்குர்ஆன் 11:84

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். 'என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?' என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 23:23

'அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?' என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 43:45

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? 'எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது 'உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல்,இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2:133

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9:31

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.