Wednesday, November 05, 2014

யாரையும் நம்பி இந்த ஜமாத் இல்லை – அது பி.ஜெ யானாலும் சரியே!

யாரையும் நம்பி இந்த ஜமாத் இல்லை – அது பி.ஜெ யானாலும் சரியே! 

தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கம், உலகம் முழுவதும் வியாபித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் சிலர் இந்த ஜமாத்தை விட்டும் வெளியேற்றப்படும் போதும், அல்லது பகட்டுக்காக விலை போனவர்கள் வெளியேறும் போதும் இந்த ஜமாத் அடியோடு அழிந்து, வீழ்ச்சி கண்டுவிடும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் – இறைவனின் இந்த மார்க்கம் யாரையும் தங்கியில்லை, யாரையும் நம்பியும் இல்லை என்பதை இறைவன் மிகத் தெளிவாக நமக்கு பல சந்தர்பங்களில் உணர்த்தியிருக்கின்றான்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

'இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் (18 : 29)

எவருக்கும் இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன.

இதே நேரத்தில் யார் இந்த மார்க்கத்தினை விட்டு வெளியேறினாலும் அதனால் இஸ்லாத்திற்கு எவ்வித நஷ்டங்களும் ஏற்படாது என்பதை கீழுள்ள இன்னும் சில வசனங்களில் இருந்தும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.

அல்குர்ஆன் (5 : 54)

அவ்வப்போது இந்த ஜமாத்தை விட்டு சிலர் நீக்கப்படுவது என்பது ஜமாத்தின் வளர்ச்சிப் பாதையில் புதிதான ஒன்றல்ல.

ஜமாத்தின் மிகப் பெரும் பேச்சாளராக இருந்த ஹாமித் பக்கி நீக்கப்பட்டார். – ஹாமித் பக்ரி அவர்கள் இக்கொள்கையை விட்டும் வெளியேறும் போது 'தவ்ஹீத் ஜமாத் வழிகேட்டில் பயனிக்கின்றது, பி.ஜெ என்ற ஒருவர் சொல்வதைக் கேட்டுத் தான் நாங்கள் இவ்வளவு நாட்களும் இங்கிருந்தோம், இப்போது நேர்வழிக்கு வந்து விட்டோம்' என்று கூறினார்.

இருக்கும் வரை இந்த ஜமாத்தில் இருப்பதும், ஏதாவது குற்றம் செய்து மாட்டிக் கொண்டவுடன், பி.ஜெ அவர்களை காரணம் சொல்வதும் அனைத்து வழிகேடர்களும் கைக் கொண்ட ஒரு நடை முறை தான்.

 பி.ஜெ கருப்பு என்றார், நாங்களும் கருப்பு என்றோம்.

 பி.ஜெ வெள்ளை என்றார், நாங்களும் வெள்ளை என்றோம்.

 பி.ஜெ இது சரி என்றார், நாங்களும் சரி என்றோம்.

 பி.ஜெ இதனை தவறு என்றார், நாங்களும் தவறு என்றோம்.


இப்படி ஜமாத்தில் இருந்து வெளியேறியவுடன் பலரும் கருத்து சொல்வது என்பது புதிய விஷயமல்ல.

பாக்கர் வெளியேற்றப்பட்டவுடனும் இதனை சொன்னார், சைபுல்லாஹ் ஹாஜா வெளியேற்றப்பட்டவுடனும் இதனை சொன்னார், இப்போது அப்பாஸ் அலியும் இதனை சொல்லியுள்ளார்.

ஆகவே வழிகேடர்கள் வழிகேட்டின் காரணமாக வெளியேற்றப்பட்டவுடன் இந்தக் கருத்தை சொல்வது என்பது புதிதல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கு பயந்து கொள்கையை விட்டவர்கள்:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் சொல்வது தான் சத்தியம் என்பதை ஒப்புக் கொண்டார். அடுத்த நாள் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கொள்கையை விட்டும் வெளியேறி காபிராகிய வரலாறுகளை நாம் ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1883)

காய்ச்சலுக்கு பயந்து கொள்கையை விட்டவர்கள் நபியின் காலத்திலேயே இருக்கும் அற்பத் தனத்திற்காக நமது காலத்தில் இவர்கள் கொள்கையை விட்டும் வெளியேறி வழிகேட்டில் நுழைவது என்பது பெரிய விஷயமே அல்லவே

அதே போல் நபியவர்களின் காலத்தில் இடம் பெற்ற இன்னுமொரு சம்பவத்தை பாருங்கள்.

ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிரிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (3617)

நபியவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பகராவை மனனமிட்டு, ஆலு இம்ரானை மனனமிட்டு பின்னர் மீண்டும் இஸ்லாத்தை விட்டும் வெளியெறி நபியவர்களுக்கே எதிராக செயல்பட்டு பின்னர் மரணத்தின் பின்னர் கூட இறைவன் அவனை கேவலப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்நிலை ஏற்பட்டும் நேர்வழியில் இருந்த நபித் தோழர்கள் இவனின் நிலையைப் பார்த்து விட்டு தாமும் அவனுடைய வழியில் செல்லவில்லை. மாறாக தெளிவான நிலைபாட்டிலேயே அவர்கள் இறுதி வரை தூய இஸ்லாத்தின் வழியில் வாழ்ந்து மரணித்தார்கள்.

தக்லீத் வாதிகளுக்கு இந்த ஜமாத்தில் இடமில்லை என்பதே வரலாறு. 



இந்த ஜமாத்தை பொருத்த வரையில் யாரெல்லாம் பி.ஜெ சொன்னால் சரி தான் என்ற நிலையில் இருந்தார்களோ அவர்களையெல்லாம் அல்லாஹ் வழிகேட்டில் நிலையாக்கி விட்டான் என்பதே ஜமாத்தின் வரலாறாக உள்ளது.

பி.ஜெ சொன்னால் சரி என்று இந்த ஜமாத்தில் யார் இருந்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலை.

தற்போது ஜமாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ள அப்பாஸ் அலியின் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையே அவர் இந்த ஜமாத்திற்கு தகுதியற்றவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் பகுதியைப் பாருங்கள். தான் இது வரை எந்த நிலையில் இருந்தார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

'சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.'

பி.ஜெ சொன்னதை சரியென்று நினைத்துத் தான் அப்பாஸ் அலி இவ்வளவு காலமும் பிரச்சாரம் செய்தாராம், அதே நிலையில் இருந்துதான் புத்தகமும் எழுதினாராம். இதை கேட்டால் பொது மக்கள் ஏளனமாக சிரிப்பார்கள்.

 பி.ஜெ கருப்பு என்றால், நீங்களும் கருப்பு என்பீர்கள்?

 பி.ஜெ வெள்ளை என்றால், நீங்கள் வெள்ளை என்பீர்கள்?


இதுதான் உங்கள் நிலையாக இருந்தது என்பதை தெளிவாக இப்போது அறிவித்து விட்டீர்கள். இப்படியானவர்கள் இந்த ஜமாத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதை அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விட்டான் – அல்ஹம்து லில்லாஹ்.

கீழுள்ள திருமறை வசனத்தை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். இந்தக் கொள்கையை விட்டும் வழிதவறிச் சென்றவர்களின் நிலையை தெளிவாக நாம் உணர முடிகின்றது.

இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.

அல்குர்ஆன் (9 : 74)

எங்கள் இறைவா எங்களை மரணிக்கும் வரை நேர்வழியிலேயே வைப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களை தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

(அல்குர்ஆன் 03:08) 
 
                                                                                                                                                                 நன்றி : rasminmisc

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.