தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை
வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில்
இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத்
தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய
சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்…
கடந்த 2012ஆம் ஆண்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்கள் மற்றும் கிளைகள் மூலம் 213 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 17,622 பேர் குருதிக்கொடை அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் டிஎன்டிஜே சார்பாக 173
முகாம்களில் 12,111 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்
வெளிநாட்டிலுள்ள டிஎன்டிஜே கிளைகள் மூலம் 31 முகாம்கள் நடத்தப்பட்டு 3,813
நபர்கள் குருதிக் கொடையளித்துள்ளனர்.
அவசர இரத்ததானமாக 1,698 நபர்களுக்கு குருதிக் கொடை வழங்கப்பட்டுள்ளது.
தனியொரு அமைப்பு இந்த அளவிற்கு கிட்டதட்ட பதினெட்டாயிரம்
யூனிட்டுகளுக்கு நெருக்கமாக குருதிக் கொடை கொடுத்திருப்பது இதுவரை தமிழக
வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாகும்.
டிஎன்டிஜேவின் வருகைக்கு முன்பாக தமிழக அளவில் முதலிடம்
பெரும் அமைப்புகள் ஐந்தாயிரம் யூனிட்டுகள் இரத்ததானம் செய்வதே பெரிய
விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் இருபதாயிரம் பேரை தொடக்கூடிய அளவிற்கு
இரத்ததானத்தில் புதிய மைல்கல்லை டிஎன்டிஜே எட்டியுள்ளது.
முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் குண்டு வைக்கக்கூடியவர்கள்;
தீவிரவாதிகள்; பிறரது இரத்தத்தைக் குடிக்கக்கூடியவர்கள் என்ற ஒரு கருத்தை
தமிழகத்து ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் விதைத்திருந்தன.
ஆனால் டிஎன்டிஜேவின் தன்னலம் பாராத இந்த மனித நேயச் சேவையின் மூலம்
முஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் உள்ளார்கள். அவர்கள்தான்
தங்களது இரத்தத்தைக் கொடுத்து பிறரது உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப்
பணியில் முதன்மையானவர்கள். அவர்களை முந்துவதற்கு பெரும்பான்மையான இந்து
சமுதாய அமைப்புகளால் கூட இயலாது என்று அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு
நிலைமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப்பணி சொல்ல
வைத்துள்ளது.
முஸ்லிம்களில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய இந்த ஏகத்துவக்
கொள்கைக் கூட்டம் மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு
செயல்படுவதால்தான் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாக செய்து வரமுடிகின்றது.
மேலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து
முக்கிய மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜேவை அறியாத மருத்துவர்கள் இல்லை என்று
சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது. யாரேனும்
வெளிமாநிலத்திலிருந்தோ, சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களுக்கு
தொடர்பில்லாத ஊர்களிலிருந்தோ வந்து அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுவார்களேயானால் அவர்களிடத்தில் நீங்கள் டிஎன்டிஜேவை
அணுகுங்கள்; எத்தனை யூனிட்டுகள் இரத்தம் உங்களுக்குத் தேவைப்பட்டாலும்
அவர்கள் அதை வழங்குவார்கள் என்று அந்தந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே
அவர்களை நம்மிடம் அணுகச் சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்து
மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜே தனி இடம்பிடித்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும்
வெளியூர் சகோதரர்கள் தங்களது அறுவைச் சிகிச்சைக்கான இரத்தத்தை வெளியில்
காசு கொடுத்து வாங்கவும் வழியில்லாமல், தங்களுக்கு உதவ யாராவது
முன்வரமாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு
பைசாகூட செலவுவைக்காமல் நமது சகோதரர்கள் அளிக்கும் குருதிக்கொடைக்கு அந்த
சகோதரர்கள் அதற்கு பலனாக எவ்வளவோ கைமாறு செய்ய எத்தனித்தாலும்
அவர்களிடத்தில் ஆட்டோவுக்கு கூட போக்குவரத்துப் பணம் வாங்காமல் திரும்பும்
நமது சகோதரர்களைப் பார்த்து மருத்துவமனையிலுள்ளவர்களும், நோயாளியின்
உறவினர்களும் பூரித்துப்போகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் தரக்கூடிய இரத்தம்தான்
தூய்மையானதாக உள்ளது என்றும், பீடி, சிகரட், மது போன்ற தீயபழக்க வழக்கங்கள்
உங்களது உறுப்பினர்களிடம் இல்லாதது அதற்குரிய காரணம் என்றும் மருத்துவமனை
நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுவது இந்த ஜமாஅத்தின் பணிகள் எந்த அளவிற்கு
பிறமத சகோதரர்களை சென்றடைந்துள்ளது என்பதையும், இந்த ஜமாஅத்தைப் பற்றி
பிறமத சகோதரர்கள் எந்த அளவிற்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதையும்
தெளிவுபடுத்துகின்றது.
இரத்ததானத்தில் முதலிடம் பிடித்த தென்சென்னை மாவட்டம் :
கடந்த 2012ஆம் ஆண்டு இரத்ததானத்தில் அதிகமான நபர்கள்
இரத்ததானம் செய்ததன் மூலம் முதலிடத்தை பிடித்த மாவட்டம் தென்சென்னை
மாவட்டம் ஆகும். மொத்தம் 46 முகாம்களில் 3,834 நபர்கள் தென்சென்னை சார்பாக
இரத்ததானம் செய்துள்ளார்கள்.
திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய மாவட்டங்கள் முறையே
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. அரசு தரப்பிலிருந்து
பல்வேறு விருதுகளும் டிஎன்டிஜேவின் இரத்த தான சேவையை பாராட்டி
வழங்கப்பட்டுள்ளன.
சாதனை படைத்த தேனி மாவட்டம் :
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் மிகவும்
பின்தங்கிய நிலையில் உள்ள தேனி மாவட்டம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
நமது தேனி மாவட்டத்தின் இந்த சேவையை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம்,
அரசாங்க இரத்த வங்கியில் போதிய இரத்த இருப்பு இல்லாத நிலையில்,
டிஎன்டிஜேவின் தேனி மாவட்ட நிர்வாகத்தை அணுகி முகாம்களை நடத்தும்படி
கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரத்ததான முகாம்களை நமது சகோதரர்கள் நடத்தி
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியிலுள்ள இரத்த
இருப்பு பற்றாக்குறையை நீக்கியுள்ளனர்.
பரவலாக அரசு மருத்துவமனைகளில் இரத்தம் கையிருப்பு
இல்லாவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள்
டிஎன்டிஜேவின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு முகாம்களை நடத்தச் சொல்லி
கோரிக்கை வைக்கின்றன. அவர்களது கோரிக்கைகளை ஏற்று நமது நிர்வாகிகள்
இரத்ததான முகாம்களை நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிக்கும் ரியாத் மண்டலம்:
இந்தியாவிற்கு வெளியே உள்ள டிஎன்டிஜேவின் வெளிநாட்டு
கிளைகளும் இரத்ததான முகாம்களை போட்டி போட்டு நடத்தி மனிதநேயப்பணியை
உலகளாவிய அளவில் செவ்வனே செய்து வருகின்றன.
அந்த வகையில் வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது
ரியாத் மண்டலம் ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு ரியாத் மண்டலத்தின் சார்பாக
1,214 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். ரியாத்தைத் தொடர்ந்து தம்மாம்
மற்றும் குவைத் ஆகிய மண்டலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை
பிடித்துள்ளன.
சவூதி அரேபியாவில் நமது சகோதரர்கள் வழங்கும் இரத்தங்கள்
சேகரிக்கப்பட்டு ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கும், ரமலான் மாதத்தில் உம்ரா
செய்ய வருவோருக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
இதுவல்லாமல் டிஎன்டிஜேவின் இந்த ஏகத்துவப்படை ஸ்ரீலங்கா,
துபாய், அபுதாபி, பஹ்ரைன், ஷார்ஜா, புருனை, கத்தார் ஆகிய நாடுகளிலும்
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இரத்த தானம் செய்து உலகளாவிய அளவில்
இரத்ததானத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
அவசர இரத்த தான சேவையில் மதுரை முதலிடம் :
இரத்ததான முகாம்களில் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணி ஒரு
வகை என்றால், திடீரென்று ஏற்பாடு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு
உடனடியாகத் தேவைப்படும் இரத்தத்தை அதிரடியாக வழங்கி உயிர்காக்கும் பணி
மற்றொரு வகை.
இந்த அவசர இரத்ததான சேவையில் மதுரை மாவட்டம் தொடர்ந்து
முதலிடத்தை பெற்று வருகின்றது. சென்ற ஆண்டு 574 நபர்கள் அவசர இரத்த தானம்
வழங்கியுள்ளார்கள். மதுரையைத் தொடர்ந்து திருச்சி மற்றும் நெல்லை ஆகிய
மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
டிஎன்டிஜேவின் இந்த தன்னலமில்லாத இரத்ததானப்பணி இன்னும் சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
தாயகம் 2012“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ அல்குர் ஆன் : 5 – 32
எண் | மாவட்டம் | முகாம்கள் | நபர்கள் | தர வரிசை |
1 | தென்சென்னை | 46 | 3834 | 1 |
2 | திருவள்ளூர் | 54 | 3531 | 2 |
3 | வட சென்னை | 19 | 1760 | 3 |
4 | தேனி | 5 | 795 | 4 |
5 | இராமநாதபுரம் | 5 | 221 | 5 |
6 | காஞ்சி கிழக்கு | 3 | 183 | 6 |
7 | தஞ்சை தெற்கு | 5 | 179 | 7 |
8 | விருதுநகர் | 2 | 165 | 8 |
9 | காஞ்சி மேற்கு | 2 | 130 | 9 |
10 | விழுப்புரம் மேற்கு | 4 | 126 | 10 |
11 | நெல்லை | 2 | 93 | 11 |
12 | நாகை தெற்கு | 1 | 82 | 12 |
13 | திருவாரூர் | 2 | 74 | 13 |
14 | புதுக்கோட்டை | 2 | 73 | 14 |
15 | காரைக்கால் | 2 | 70 | 15 |
16 | சிவகங்கை | 2 | 69 | 16 |
17 | கோவை | 1 | 67 | 17 |
18 | நாமக்கல் | 2 | 65 | 18 |
19 | தி மலை | 1 | 60 | 19 |
20 | வேலூர் | 1 | 58 | 20 |
21 | ஈரோடு | 2 | 56 | 21 |
22 | திருப்பூர் | 1 | 55 | 22 |
23 | சேலம் | 1 | 55 | 23 |
24 | தஞ்சை வடக்கு | 1 | 52 | 24 |
25 | பெங்களுர் | 1 | 50 | 25 |
26 | திருச்சி | 1 | 43 | 26 |
27 | நாகை வடக்கு | 1 | 42 | 27 |
28 | பெரம்பலூர் | 1 | 42 | 28 |
29 | கரூர் | 1 | 30 | 29 |
30 | நிலகிரி | 1 | 26 | 30 |
31 | திருவாரூர் | 1 | 25 | 31 |
மொத்தம் | 173 | 12,111 |
எண் | மண்டலம் | முகாம்கள் | நபர்கள் | தர வரிசை |
1 | ரியாத் | 6 | 1214 | 1 |
2 | தம்மாம் | 10 | 868 | 2 |
3 | குவைத் | 3 | 494 | 3 |
4 | துபாய் | 3 | 456 | 4 |
5 | ஸ்ரீலங்கா | 2 | 233 | 5 |
6 | அபுதாபி | 3 | 233 | 6 |
7 | பஹ்ரைன் | 1 | 97 | 7 |
8 | ஷார்ஜா | 1 | 87 | 8 |
9 | புருனை | 1 | 82 | 9 |
10 | கத்தார் | 1 | 49 | 10 |
மொத்தம் | 31 | 3,813 |
எண் | மாவட்டம் | நபர்கள் | தர வரிசை | ||||||||||
1 | மதுரை(அவசரதேவைக்கு) | 574 | 1 | ||||||||||
2 | திருச்சி(அவசரதேவைக்கு) | 342 | 2 | ||||||||||
3 | நெல்லை(அவசரதேவைக்கு) | 308 | 3 | ||||||||||
4 | திருப்பூர்(அவசரதேவைக்கு) | 262 | 4 | ||||||||||
5 | தென்சென்னை(அவசரதேவைக்கு) | 111 | 5 | ||||||||||
6 | விருதுநகர்(அவசரதேவைக்கு) | 73 | 6 | ||||||||||
7 | வடசென்னை(அவசரதேவைக்கு) | 22 | 7 | ||||||||||
8 | ஈரோடு (அவசரதேவைக்கு) | 6 | 8 | ||||||||||
மொத்தம் | 1,698 |
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.