தலைப்பைப்பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!
ஆனால், இப்படி “தானே” புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித்தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்து, அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.
அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுக காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.
தானே வந்த வார்த்தைகள் :
ஆம்! : “தானே’ புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ஜால்ரா தட்டுவதில் என்னை விஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வாத்தியார்
இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த எம்.எல்.ஏ :
இதற்கு முன்பு எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சட்டசபைக்கு சென்றுள்ளார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக உள்ளது வாத்தியார் அவர்களின் வர்ணனை
தானே புயலால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்கும் வேலையில், அந்த மக்களின் மனம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் இவ்வேளையில் இது போன்ற புயல் தங்களது மாவட்டத்தில் வரவில்லையே என்று பிற மாவட்ட மக்கள் ஏங்குவதாக இவர் கூறியிருக்கும் கருத்தை பார்த்தால் ”தானே” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை விட, அம்மா அவர்கள் மீதும், எம்.எல்.ஏ பதவி சுகத்தின் மீதும் இவர் கொண்ட பாசப்புயலின் காரணமாக இவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நமக்கு பளிச்சென்று தெரிகின்றது.
இவர் இருக்க வேண்டிய இடம் சட்டசபையல்ல; கீழ்பாக்கம் மருத்துவமனைதான் என்பதும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு இவருக்கும் இவரது மனநிலையை சரி செய்ய மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் சமுதாய அக்கறை உள்ளவர்களின் தற்போதைய ஆசை.
சொன்னாலும் சொல்வார்:
நல்ல வேளை பிச்சைக்காரர்களுக்கு முதல்வர் அவர்கள் ஏதேனும் சலுகைகளை அறிவிக்காமல் போனார். அப்படி முதலைமைச்சர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் சலுகைகளை அறிவித்தால், பிச்சையெடுக்காத மற்ற மக்கள் அனைவரும் தாங்களும் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கக் கூடாதா? என ஏங்குவதுதாக முதல்வருக்கு புகழாராம் சூட்டினாலும் சூட்டுவார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், கேன்சர் நோயாளிகளுக்கும் ஏதேனும் புதிய திட்டத்தையோ, புதிய சலுகைகளையோ முதலமைச்சர் அறிவித்தாரேயானால், நாமும் எய்ட்ஸ் நோயாளியாகவோ, கேன்சர் நோயாளியாகவோ இருந்திருக்கக் கூடாதா? என அனைத்து மக்களும் ஏங்குவதாகச் சொன்னாலும் சொல்வார்.
விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு கூட அடிக்கடி முதலமைச்சர் நிவாரண உதவித்தொகைகளை அறிவித்து வருகிறார். எனவே அதையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த உதவித் தொகைகளை பார்த்து தமிழக மக்கள் தங்களது வீட்டிலும் இழவு விழக்கூடாதா? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் ஜால்ராத்தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அளவுக்கு மானம்கெட்டுப்போய் ஜால்ராத்தட்டும் ஒரு சட்டசபை உறுப்பினரை தமிழக முஸ்லிம் வரலாறு இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கின்றது.
சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை :
இதற்கு முன்பு இருந்த சுயநல எம்.எல்.ஏ க்கள் மற்றும், சிறந்த ஜல்ராத்தட்டி எம்.எல்.ஏ க்கள், மற்றும் சிறப்பாக அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் அனைவரது சாதனை(?)களையும், தான் எம்.எல்.ஏ வாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே வாத்தியார் அவர்கள் முறியடித்திருப்பது இவரது சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை. இந்த தனித்துவ(?) முத்திரையின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தையும், ஜால்ரா தட்டுவதிலும், அடிமைச்சாசனம் எழுதிக்கொடுப்பதிலும், முதல் இடத்தைப் பிடித்துள்ளார் வாத்தியார்.
இவரது இந்த அம்மா புகழ்மாலையைக் கேட்டுவிட்டு தானே புயலால் பாதிக்கப்படாத மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தானே முன்வந்து துடைப்பத்துடனும், பிய்ந்த செருப்புகளுடனும் வாத்தியாருக்கு வரவேற்பளிக்கக் காத்துக் கொண்டுள்ளனர். தானே புயல் வராதா? என தமிழக மக்கள் தற்போது எதிர்பார்க்கவில்லை; இவர் துடப்பத்தால் அடிவாங்க தங்கள் மாவட்டத்திற்கு வரமாட்டாரா? என்றுதான் தமிழக மக்கள் தற்போது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
மானம் என்பது துளியளவு கூட இல்லை:
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியில் மமகட்சி இல்லை என்று ஜெயலலிதா அறிவித்த பிறகும் கூட மானம் கெட்டுப்போய் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அப்போதே தமிழக முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டனர் இவர்களுக்கு மானம் என்பது துளியளவு கூட இல்லை என்று.
அடித்து துவைத்தாலும், எட்டி மிதித்தாலும், காரித்துப்பினாலும், எங்களுக்கு எல்லாமே அம்மாதான் என்று இவர்கள் மானம்கெட்டு நிற்கும் நிலைபார்த்து சமுதாயம் இவர்களைக் காரி உமிழ்கின்றது. இருந்த போதிலும் நாங்கள் மானமிழந்து மரியாதை இழந்து, இன்னும் எதை வேண்டுமானாலும் அடகு வைத்தாவது எங்களுக்கு அம்மாவிடத்திலிருந்து வாரியத்தை வாங்கிவிடலாம் என்பதுதான் இவர்களது கனவு என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. இப்படியெல்லாம் அதிமுக காரர்களையே விஞ்சக்கூடிய அளவுக்கு நீங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு வாரியப்பதவி கிடைக்குமா என்பது சந்தேகமே. அம்மா காலில் சாஷ்டங்கமாக விழுந்தால் எப்படியும் வாரியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் வாத்தியார் அதையும் செய்யத் தயாராகவே இருப்பார் என்பதற்கு இது அச்சாரமாக அமைந்துள்ளது
எட்டி மிதிக்கும் போது, எட்டி மிதிப்பவரது காலைக் கட்டிப்பிடித்து, ”பார்த்து மிதியுங்கள் ஐயா, உங்கள் கால் வலிக்கப் போகின்றது” என்று சொல்லும் மானம் கெட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதையும் தாண்டி இவர்கள் ஒருபடி கீழே போய், ”உங்களிடம் இப்படி மிதிவாங்க பல பேர் ஏங்கிக் கொண்டுள்ளார்கள்” என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்களது மானம்கெட்ட செயல்பாடு அமைந்துள்ளது.
விஜயகாந்துக்கு சொன்னது தான் வாத்தியாருக்கும் :
ஏதோ முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே முஸ்லிம்களின் பிரதிநிதியாக நாம் இருக்கின்றோம். எனவே அம்மாவுடைய நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துவிடலாம் என்று வாத்தியார் தப்புக் கணக்கு போடுவாரேயானால், அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.
விஜயகாந்த் வெற்றி பெற்றதே அதிமுகவை வைத்துத் தான். தேமுதிகவிற்கு ஒதுக்கிய சீட்டுக்களில் அதிமுக நின்றிருக்குமேயானால் அதிமுக இன்னும் அதிக இடங்களை பிடித்திருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது தேமுதிகவிற்கு மட்டுமல்ல; உங்களைப் போல ஜால்ரா தட்டிக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் என்பதை தற்போதைக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இவ்வளவு சொன்ன பிறகும், இவ்வளவு கேவலப்பட்ட பிறகும் அம்மா அம்மா என்று இவர் தனது சுயநலனுக்காக அம்மா புராணம் இவர்கள் பாடுகிறார் என்றால் மம கட்சியில் உள்ள மற்றவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?
அரசியல் தான் தேவை என்று கருதும் மம கட்சியினர் இது போன்ற மானத்தை முழுமையாக கப்பலேற்றும் மம கட்சிக்கு முழுக்கு போட்டு விட்டு இவர்கள் அளவுக்கு மானத்தை விற்காத முஸ்லிம் லீக், தேசிய லீக் போன்ற கட்சிகளை நாடலாமே?
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர். அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.
அல்குர்-ஆன் 2 : 14 முதல் 16 வரை
நன்றி : உணர்வு வார இதழ்