1974 வாக்கில் தமிழகத்தில் நூரி ஷாஹ் என்ற தரீக்கா தோன்றியது. இது பரேலவிஸம் என்ற விஷத்தின் ஒரு கிளையாகும்.
இந்தத் தரீக்கா, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் காலூன்றியது. லால்பேட்டை போன்ற பெரிய பெரிய மதரஸாக்கள் உள்ள ஊரிலும் இந்தத் தரீக்கா தோன்றியது.
தோன்றிய சிறிது காலத்திலேயே நாகப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள பொரவாச்சேரியில் ஒரு மதரஸாவையே தனது கேந்திரமாக ஏற்படுத்தியது.
இந்தத் தரீக்காவினர் புகைப்படம் எடுத்து அதற்கு மரியாதை செய்வதை அனுமதித்தனர்; இசையில் மூழ்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக சித்தம் கலங்கிப் போன பக்த பித்தர்களைத் தங்கள் கால்களில் விழுந்து சாஷ்டாங்கம் செய்ய வைத்தனர். இவர்களது அநியாயம் இத்துடன் நின்று விடவில்லை. யா முஹம்மது' என்ற திக்ரை அறிமுகம் செய்து அதை அரங்கேற்றவும் செய்தனர்.
இதைக் கண்டு மனம் வெறுத்த ஆலிம்கள் கூத்தாநல்லூரில் ஷரீஅத் மாநாட்டை நடத்தி, இந்தத் தரீக்காவாதிகளை வெளுத்துக் கட்டினர்.
தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களில் உள்ள ஆலிம் பெருமக்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தத் தீமைக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். யா முஹம்மது என்று திக்ரு செய்வது இறை மறுப்பு, இணை வைப்பு என்றெல்லாம் தீர்ப்பு வழங்கினர்.
ஆக மொத்தம், கூத்தாநல்லூர் ஷரீஅத் மாநாட்டில் நூரி ஷாஹ் தரீக்காவைப் பொரிந்து தள்ளி விட்டனர். யா முஹம்மது என்ற திக்ரை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.
அதன் ஒரு கட்டமாக மவ்லவி நிஜாமுத்தீன் மன்பஈ, தமிழகத்தில் ஒவ்வொரு மத்ரஸாவாக ஏறி இதற்கு எதிரான ஃபத்வாவை, மார்க்கத் தீர்ப்பைப் பெற்றார். அத்தனை மத்ரஸாக்களின் மார்க்கத் தீர்ப்பையும் திரட்டி இர்ஃபானுல் ஹக் - உண்மை விளக்கம் என்று நூல் வடிவிலும் வெளியிட்டார். அப்போது இந்த நூல் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பையும் பெற்றது.
முஹம்மது திக்ரும், முஹ்யித்தீன் திக்ரும்:
யா முஹம்மது திக்ருக்கு எதிராகக் கிளம்பிய இந்த ஆலிம்களிடம் அப்போது தான் பி.ஜே. ஒரு கேள்வியை எழுப்பினார்.
யா முஹம்மது' என்று திக்ரு செய்வது கூடாது எனும் போது 'யா முஹய்யித்தீன்' என்று திக்ரு செய்வது எப்படிக் கூடும்?
யாகுத்பா என்ற மவ்லிதுப் பாடலில், ஆயிரம் தடவை என்னை அழைத்தால் நான் ஓடோடி வந்து பதிலளிக்கிறேன்' என அப்துல்காதிர் ஜீலானி கூறியதாக ஒரு கவிதை வரி வருகின்றதே! அதை வீடு வீடாகப் போய் பாடுகின்றீர்களே! இது எப்படி நியாயமாகும்? என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு அந்த ஆலிம்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
யாகுத்பாவை எதிர்த்து அப்போதே தனது யுத்தத்தை பி.ஜே. தொடங்கி விட்டிருந்தார். இந்த யுத்தத்தைத் தொடங்குவதற்கு சவூதிய அல்லது மதனியப் பின்னணி எதுவுமில்லை.
இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து பி.ஜே., பி.எஸ் போன்றோரை வெளியே தள்ளியதாகும். அதற்குப் பிறகும் மதனிகளின் பின்புலம் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் தான் இஸ்லாமிய எழுச்சி மையத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் பிறகு மதனிகள் தொடர்பு என அதன் வட்டம் விரிந்தது.
சத்தியப் பிரச்சாரமும் சவூதிய சம்பளமும்:
இந்தக் காலகட்டத்தில் கமாலுத்தீன் மதனி, தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனையில் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிய முடிந்தது. அவருடைய பிரச்சாரம் குமரி மாவட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டிருந்தது. தமிழகத்தில் திருச்சியில் மதனிகள் சேர்ந்து மண்டபங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அது தமிழகத்தில் எங்கும் எதிரொலிக்கவில்லை.
மதனிகளின் பிரச்சாரம் தமிழக முஸ்லிம்களைக் கவராததற்குக் காரணம், அவர்கள் மதீனாவில் பெற்ற ஊதியம் தான். பொதுவாக மக்களிடம், அவர்கள் கொண்ட கருத்துக்கு நேர் எதிரான கருத்தைப் பிரச்சாரம் செய்கின்ற போது அதற்கு உள்நோக்கம் கற்பிப்பார்கள். இதை நாம் இறைத்தூதர்களின் வாழ்க்கையிலேயே காணலாம்.
நூஹ் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்த போது இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தார்கள்.
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை' என்றனர்.
அல்குர்ஆன் 23:24
மூஸா, ஹாரூன் ஆகிய இருவரின் தூய பிரச்சாரத்திற்கும் ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தனர்.
'இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர்' எனக் கூறினர்.
அல்குர்ஆன் 20:63
இவ்வாறு உள்நோக்கம் கற்பித்தல் என்பது ஏகத்துவப் பிரச்சாரப் பாதையில் கண்டிப்பாக நடந்தே தீரும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், பிரச்சாரம் செய்பவர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். இறைத் தூதர்கள் அப்படித் தான் இருந்தனர்.
குமரி மாவட்டத்தில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்யும் போது இந்தக் குற்றச்சாட்டு குறுக்கே வந்து நின்றது. கமாலுத்தீன் சொன்னது உண்மையான கருத்து எனினும் மக்கள் கற்பிக்கும் உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்குக் காரணம் அரபு நாட்டுச் சம்பளம்!
அரபு நாட்டில் சம்பளம் வாங்காமல் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி இன்றளவும் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கமாலுத்தீன் மதனியின் பிரச்சாரம் தமிழக அளவில் எட்டாமல் ஆனதற்கு இது முதல் காரணம்!
பொதுவாக சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது அதை எதிர்த்து வலுவான வாதங்கள் வைக்கப்படும். அந்த வாதங்களுக்கு முறையான பதிலை அளிக்க வேண்டும். அசத்தியவாதிகளின் அந்த வாதங்களுக்கு சாமர்த்தியமாகவும், எளிமையான நடையிலும் சொற்பொழிவு மேடைகளிலேயே பதில் சொல்ல வேண்டும். அல்லது அசத்தியவாதிகளை விவாதக் களங்களுக்கு அழைக்க வேண்டும்.
இந்த அணுகுமுறை நமது சொந்தக் கற்பனை அல்ல. திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
இந்த அணுகுமுறையைக் கமாலுத்தீன் மதனி கையாளவில்லை. அவரது பிரச்சாரம் தமிழக அளவில் சென்றடையாமல் போனதற்கு இது மற்றொரு காரணமாகும்.
பி.ஜே.வை நோக்கி, அரபு நாட்டுப் பணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது அதை அவர் மிக எளிதாக எதிர் கொண்டார். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்ததால் அவரது பிரச்சாரத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்ட போது அதை அவர் உளப்பூர்வமாக மறுப்பதற்கு இது உதவியாக அமைந்தது.
அடுத்து, பி.ஜே.யின் பேச்சில் எளிமை இருந்தது. எதிரிகள் வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அவற்றுக்கு அழகிய முறையில் அதே சமயம் ஆணித்தரமான பதில்களைச் சமர்ப்பித்தார். எதிரிகளை விவாதக் களத்திற்கு அழைத்து, அவர்களைக் களத்தில் சந்திப்பதற்கும் முழு வேகத்தில் தயாரானார்.
பி.ஜே. அழைப்புப் பணிக்கு வந்த பின்பு தான் கோட்டாறு விவாதத்தைச் சந்திக்க நேரிட்டது. இதில் கமாலுத்தீன் மதனியும் கலந்து கொண்டார். இந்த விவாதம் தொடர்பாக, பி.ஜே. மலை போல் நினைத்திருந்த ஒரு மதனியிடம் பேசிய போது, ஆடை மடிப்பு கலையாத அந்த மதனி, 'இவர்களிடம் எல்லாம் நாம் விவாதம் செய்வதா?' என்ற கருத்தில் பதிலளித்தார். இந்தப் பதிலால் அவர் மீதிருந்த மதிப்பு மரியாதை எல்லாம் நொறுங்கிப் போனது.
இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அழைப்புப் பணிக்கு அவசியமான, இன்றியமையாத இந்த அணுகுமுறையைக் கூட மதனி வட்டாரங்கள் கடைப்பிடிக்கத் தயாரில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.
மதனிகள் அனைவரும் சேர்ந்து, ஜம்யிய்யத் தஃவத்துல் இஸ்லாமிய்யா என்ற சங்கத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். இந்தச் சங்கத்திலுள்ள ஒரு மதனி, மதரஸாவுக்கு வரும் பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டு காலத்தைத் தள்ளிய வரலாறும் உண்டு.
சம்பளம் வழங்கும் சவூதிய தூதரகத்திற்கு மட்டும், அழைப்புப் பணி செய்வதாக இவர்களது சங்கத்திலிருந்து அறிக்கை அவ்வப்போது தாக்கலாகிக் கொண்டிருக்கும்.
இவர்களுடைய சம்பள அடிப்படையிலான சம்பிரதாயப் பணி எவ்வாறு தமிழக மக்களைத் தட்டியெழுப்பும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முபாஹலா:
குமரி முனையில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, காயல்பட்டிணத்தில் ஜலீல் முஹைதீன் என்பவர் ஒரு சவால் விட்டிருந்தார்.
குத்பியத் கூடும் என்பது அவரது வாதம். குத்பியத் என்றால் இரவில் விளக்கை அணைத்து விட்டு, யாமுஹ்யித்தீன், யாமுஹ்யித்தீன் என்று திக்ர் செய்வதாகும்.
இதைக் கூடாது என்பவர் என்னிடத்தில் வந்து முபாஹலா செய்யலாம் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.
இந்த அறைகூவலை தப்லீக் இயக்கம் கண்டுகொள்ளவில்லை.
எஸ்.ஐ.எம். இயக்கம் கண்டு கொள்ளவில்லை.
எஸ்.ஐ.எம். இயக்கத்தின் தாய் ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டு கொள்ளவில்லை.
ஜம்யிய்த்து தஃவத்துல் இஸ்லாம் என்ற சவூதிய சம்பள சங்கமும் கண்டு கொள்ளவில்லை.
ஓர் அசத்தியவாதி, அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யக்கூடிய ஒருவர், சத்தியத்திற்கு எதிராகச் சவால் விடுகிறார்.
இதைச் சந்திப்பதற்கு எந்தவொரு சத்தியவாதியும் முன்வரவில்லை.
அவருடைய சவாலுக்குப் பதில் அளிக்கப்படாமலேயே காலம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும்; முஹ்யித்தீனை அழைக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய கொள்கைவாதி எவன் வருகிறான் என்று பார்ப்போம் என ஜலீல் முஹைதீன் காத்திருக்கின்றார். யாரும் வரவில்லை என்றதும் அவருக்குத் திமிர் ஏறுகின்றது.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.
அல்குர்ஆன் 2:165
அவ்லியாக்களை நேசிப்பவர்களுக்கு முபாஹலா செய்யுமளவுக்கு அழுத்தம் இருக்கும் போது மேற்கண்ட வசனத்தின்படி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை விட அழுத்தமும் ஆழ்ந்த அன்பும் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இல்லை.
காயல்பட்டிணத்திற்கு பிஜே. ஒரு பொதுக்கூட்டத்திற்காக வருகிறார். அடிதடி வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு பாரூக் ஹாஜியார் வீட்டில் விருந்து கிடைத்தது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அன்று இரவு பி.ஜே. பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது துண்டுச் சீட்டு ஒன்று அவரது கைக்கு வருகிறது.
இவ்வளவு பேசுகிறீர்களே! என்னுடன் முபாஹலா செய்யத் தயாரா?' என்று ஜலீல் முஹைதீன் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த பி.ஜே. அங்கேயே மக்களைக் கண்டிக்கிறார்.
ஒரு அசத்தியவாதி ஆட்டம் போடுகிறார். முபாஹலாவுக்கு வா என்று அழைக்கிறார் அதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை என்றால் அது மிகப் பெரும் வெட்கக்கேடும், வேதனையும் ஆகும்' என்று மக்களைச் சாடுகிறார். அதற்குப் பின் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறார்.
முதலில் முஜாதலா:
இந்தச் சவாலை ஏற்பதற்கு முன், 'முபாஹலா என்பது கடைசி ஆயுதம்; அதற்கு முன்பு முஜாதலா உள்ளது. அதாவது விவாதக் களம் உள்ளது. அதை முதலில் முடிப்போம். அதில் முடிவு கிடைக்கவில்லை என்றால் முபாஹலாவுக்குச் செல்வோம்' என்று பி.ஜே. தன் உரையின் போது குறிப்பிடுகின்றார்.
கூட்டம் முடிந்ததும் அது போல் விவாதத்திற்குரிய முயற்சிகள் நடக்கின்றன. பொதுவாக எந்த விவாதக் களமாக இருந்தாலும், விவாதப் பொருள், ஆதாரங்கள், விவாத முறை, நாள், இடம், நேரம் இவையனைத்தும் குறித்து ஓர் ஒப்பந்தம் செய்யாமல் விவாதிக்க முடியாது. அது போன்று ஜலீல் முஹைதீனிடம் ஒப்பந்தம் தொடர்பாகப் பேசப்பட்டது.
இஜ்மாஃ, கியாஸ்:
இவ்வாறு பேசுகையில் ஆதார நூற்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், நான்கு இமாம்கள், இன்னபிற இமாம்கள் என்று ஜலீல் முஹைதீனின் ஆதாரப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. பி.ஜே. தரப்பில் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் விவாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு, ஜலீல் முஹைதீன் தப்பிவிடக் கூடாது என்பதற்காக பி.ஜே. சில நிபந்தனைகளைத் தளர்த்தியும் பார்த்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை.
முஜாதலாவுக்கு வாய்ப்பில்லாமல் முபாஹலாவே உறுதியானது; இறுதியானது.
26.09.1985 என்று முபாஹலாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.
முபாஹலா செய்வதற்கான இடம் காயல்பட்டிணம் அப்பா பள்ளி தெருவிலுள்ள ரெட் ஸ்டார் சங்கம் என்றும் முடிவானது.
முபாஹலா நடப்பதற்கு முன்பு, நிகழ்ச்சி நடப்பது உறுதி தான் என்பதைத் தெரிவிப்பதற்காக பி.ஜே.வுக்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றும், அந்தத் தந்தியின் வாசகங்கள் சங்கேத மொழியில் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டோம். அந்த சங்கேத வார்த்தை, புக் ரெடி' என்பதாகும்.
வேண்டாதவர்கள், விரோதிகள் சதியில் ஈடுபட்டு அதன் மூலம், பாருங்கள்! முபாஹலா செய்ய வரும் போது பி.ஜே.யின் குடும்பம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டது; அசம்பாவிதத்தில் சிக்கிக் கொண்டது. அவ்லியாக்களுக்கு எதிராகக் கிளம்பியவர்களின் கதி இது தான்' என்று பிரச்சாரம் செய்ய வழிவகுத்து விடக் கூடாது அல்லவா? அத்துடன் இது போன்ற சந்தர்ப்பத்தைத் தான் ஜலீல் முஹைதீன் வகையறாக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்த ஜலீல் முஹைதீனுக்கு இத்தகைய சந்தர்ப்பம் சாதகமாகி விடக் கூடாதல்லவா?
பாதையில் விபத்து ஏற்படுவதெல்லாம் இறைவனின் நாட்டப்படி உள்ளது. எனினும் மனித சக்திக்கு உட்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் அன்றைய காயல் சகோதரர்கள் இந்த ஏற்பாடுகளை நுணுக்கமாகச் செய்திருந்தனர்.
பேசிக் கொண்டபடி சங்கேத வார்த்தைகளைத் தாங்கி தந்தி வந்தது.
நான்கு நாள் கைக்குழந்தையுடன்:
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் 'வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:61
இந்த வசனத்தின் அடிப்படையில் குடும்பத்துடன் முபாஹலாவுக்குச் செல்ல வேண்டும். அப்படித் தான் ஒப்பந்தமும் அதற்குரிய ஏற்பாடும் ஆகியிருந்தது. தந்தி வந்த நேரத்தில் பி.ஜே.யின் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார்.
பிரசவத்தைக் காரணம் காட்டி அவகாசம் கேட்டால், அதைச் சாக்காகக் கூறி ஜலீல் முஹைதீன் தப்பி விடக் கூடாது. அத்துடன், பி.ஜே. வர மறுத்து விட்டார் என்று விஷமப் பிரச்சாரமும் பரப்பப்பட்டு விடக் கூடாது. எனவே வேறு வழியில்லாமல், முஹம்மது என்ற 4 வயது மகனுடனும், யாஸிர் என்ற 4 நாள் கைக்குழந்தையுடனும் பிரசவமான பச்சை உடலுடன் தன் துணைவியாரை அழைத்துக் கொண்டு காயல்பட்டிணத்திற்கு பி.ஜே. வந்து சேர்கின்றார். ஜலீல் முஹைதீனும் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார்.
காயல்பட்டிணத்திலுள்ள ரெட் ஸ்டார் சங்கத்தில், அஸர் தொழுகைக்குப் பிறகு, வரலாற்றில் மிக முக்கியமான அந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
(முபாஹலா நடந்து முடிந்த பின் ரெட் ஸ்டார் சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரம் தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.)
இஸ்லாமிய வரலாற்றிலேயே நடந்த முபாஹலாக்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவை தான்.
அப்படி மிக முக்கியத்துவம் வாயந்த இந்த முபாஹலா, தமிழக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.
இன்று கடை வீதிகளில் சீரழியும் வீடியோக்கள் அன்று கையில் கிடைக்காத காலம் அது! அதனால் அந்த நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்ய முடியாமல் போனது. ஆடியோ கேஸட்டில் தான் பதிவானது. அந்த ஆடியோ கேஸட்டுகளும் அன்றைய தினம் ஒளி, ஒலி நாடாக்களைத் தங்கள் வசம் வைத்திருந்தவர்களிடம் தான் இருந்தன. அவர்கள் ஜமாஅத்தை விட்டுச் சென்றதும் இந்த முபாஹலா, இன்னும் இது போன்ற முக்கிய ஒளி, ஒலிப் பதிவுகள் அவர்களுடன் சென்று விட்டன.
எனவே இதற்கென்று இனி வரலாற்றில் இடம் பெறப் போவது எழுத்து ஆவணம் தான். அதனால் அதை இப்போது எழுத்தில் தந்திருக்கிறோம்.
அதுவும் எப்போது?
தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி என்ற பெயரில், ஜாக் அமைப்பு ஒரு நூல் வெளியிட்டுள்ளது. அந்த நூலில், தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சிக்கு கமாலுத்தீன் மதனியும், அவரது சங்கமும் தான் காரணம்' என்று குறிப்பிட்டு, இந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த பிறகு, இந்த முபாஹலாவை தமிழக முஸ்லிம்களின் பார்வைக்குத் தருகிறோம்.
முறையாக ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலை, முபாஹலா அழைப்பை, தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சியை நாங்கள் தான் ஏற்படுத்தினோம்' என இன்று மார் தட்டும் இவர்கள் ஏற்றிருக்க வேண்டும். ஏற்றார்களா? அதை ஏறெடுத்தும் பார்த்தார்களா? இல்லை.
சம்பளம் வாங்கும் இந்தச் சங்கத்தினருக்கு, 2:165 வசனம் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது அதிக நம்பிக்கை இருந்திருந்தால் ஜலீல் முஹைதீனின் சவாலைச் சந்தித்திருப்பார்கள்.
மதீனாவில் பி.ஏ. படித்தவர்கள், எம்.ஏ. படித்தவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இந்தப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலின் பரிமாணத்தை, அதன் பாதிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இங்குள்ள சாதாரண மதரஸாவில் படித்த பி.ஜே. அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அதைக் களத்தில் சந்திக்கவும் செய்தார்.
முபாஹலாவின் பலன் என்ன?
இதன் மூலம் அசத்தியத்தின் உச்சிக் கொடுமுடியிலிருந்து கொக்கரித்துக் கொண்டிருந்த ஒரு குராபியின், குத்பியத் தலைவனின் கொக்கரிப்புக்குப் பதில் கொடுக்கப்பட்டது. அவரது ஆணவம், அகங்காரம் இதன் மூலம் அடக்கப்பட்டது. அதுவரை படமெடுத்து ஆடிய அந்த விஷப் பாம்பின் பல் பிடுங்கப்பட்டது.
சத்தியம் இது தான் என்று தெரிந்த பின்பும் என் போன்றவர்களுக்குக் களமிறங்குவதற்குத் தயக்கம் இருந்தது. அதைப் போக்கி, இந்த சத்தியக் களத்தில் இறக்கி விட்டவர் பேராசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான். அத்தகைய அறிஞரிடம் இந்த முபாஹலா பற்றிக் கேட்டதற்கு அவர் தெரிவித்த பதில் இது தான்.
உலக ரீதியிலான விபத்துக்கள், மரணங்கள் இதன் விளைவுகள் ஆகாது. இதன் விளைவு, சத்தியம் வளரும்.
இந்தப் பதிலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் பின்னர் அல்லாஹ் இந்தச் சத்தியத்திற்கு ஏறுமுகத்தைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சத்தியம் இதுவரை எழுச்சி கண்டு கொண்டிருக்கின்றது.
அதற்கு இந்த முபாஹலா ஓர் அடிக்கல்! ஆட்டம் காணாத அஸ்திவாரம்!
இந்த முபாஹலாவைச் சந்தித்ததன் மூலம் குராபிகளுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. அசத்தியவாதிகள் மார்க்கத்திற்கு உட்பட்ட எந்த அறைகூவலை விடுத்தாலும் அதைச் சந்திக்க ஒரு கூட்டம் தயாராகி விட்டது என்பது தான் அந்த விஷயமாகும். அது தான் வளர்ச்சிக்கு வித்திட்டது.
இந்த வரலாற்று உண்மையை தவ்ஹீது எழுச்சி என்ற நூலில் வசதியாகவே மறைத்து விட்டார்கள் என்பதால் இந்த நிகழ்வை உங்களுக்குப் பதிவு செய்து கொள்கிறோம்.
இந்தக் கட்டுரைக்கு, சந்ததியற்றுப் போன ஜலீல் முஹைதீன்கள்' என்று தலைப்பிட்டுள்ளேன். ஏகத்துவத்தை எதிர்த்தவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் நின்றதில்லை.
இதைத் திருக்குர்ஆனின் 108வது அத்தியாயமான இன்னா அஃதைனா கல்கவ்ஸர்... என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவரது எதிரிகள் நிற்கவில்லை.
முஹம்மது (ஸல்) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் தான் சந்ததியற்றுப் போனார்கள். அதற்கு இந்தச் சிறிய அத்தியாயமே சாட்சி!
இது போன்றே உலகத்தில் சத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் சந்ததியற்றுப் போய் விடுகிறார்கள். ஆனால் சத்தியத்திற்காக நின்றவர்கள் சத்திய சந்ததியுடன் தனியொரு சமுதாயமாக உருவாகி நிற்கின்றார்கள்.
அன்று ஜலீல் முஹைதீன் அசத்தியத்திற்கு ஆதாரமாக நின்றார். ஆனால் அவர் யாரென்றே தமிழகத்திற்குத் தெரியாமல் ஆகி விட்டார். அவரது பரேலவிஸக் கொள்கை பல முனைகளிலும் சாவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பி.ஜே. சத்தியத்திற்காக நின்றார்; இப்போதும் நிற்கின்றார். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாளை பி.ஜே. இறந்தாலும் சத்தியத்தை, ஏகத்துவத்தைப் பின்பற்றும் ஒரு சந்ததி, சமுதாயம், ஜமாஅத் இறைவனின் அருளால் என்றென்றும் நிலைத்து நிற்கும்.