Friday, February 24, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஹதீஸ்களின் வகைகள்


திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல்.

அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.

நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.

சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும்:

ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன? லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஹதீஸ் கலை:
  1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்
  2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்
  3. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்
ஆகிய மூன்றையும் ஹதீஸ் என்பர்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் (صحيح) - ஆதாரப்பூர்வமானவை

2. மவ்ளூவு (موضوع) - இட்டுக்கட்டப்பட்டது

3. மத்ரூக் (متروك) - விடப்பட்டவை

4. ளயீஃப் (ضعيف) - பலவீனமானவை

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.

இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. 

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

குறிப்பு:

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.