கேள்வி:
நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவை
நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவை
ஹசன்
மேலப்பாளையம்
பதில்:
இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது இணையதளத்தில் அளித்த பதிலையே உங்களுக்கும் பதிலாகத் தருகிறேன்.
கேள்வி : குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா?
பதில்:
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கோவையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல்துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனா். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.
இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.
தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.
குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும் ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.
மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செயதவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.
மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்துவி்ட்டால் அதற்குமுன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப் படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.
இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
எனவெ எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.
அப்போது காவல் துறை டி ஜி பியாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தி்த்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.
இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்படவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.
கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன்படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.
அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவி்ல்லை தடுக்க அவர்கள் விரும்பவில்லை.
19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்படடதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்த அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.
இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
குண்டு வெடிப்பைத் தடுப்பதற்காக நாம் செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப்போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.
இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
ஒட்டு மொத்த சமூதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இது பொதுவாக நான் சொல்லும் பதிலாகும்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி ஒவ்வொருவராக பிடிபட்டனர். ஒவ்வொருவர் பிடிபடும் போதும் அவர்களைக் காட்டிக் கொடுத்தது பீ ஜே தான் என்றோ தமுமுக என்றோ தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். அவை அனைத்துக்கும் நான் இனைய தளத்தில் பதில் அளித்துள்ளேன்.
ஆனாலும் பல பக்கங்கள் கொண்ட அந்த ஆக்கத்தில் உங்கள் கேள்விக்கான பதிலாக அமைந்த சிறு பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.
ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதி...
“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்புர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.
ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்புர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இதுகுறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப்போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீதுதான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக்கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.
அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளி்ல் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய், வரலாற்றில் உண்மையாகிவிடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.
பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்புர்வமான வாக்கு மூலத்தி்ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.
இப்படி பீஜேயைச் சம்பந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செயது வந்தனர்.
நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.
அப்துன்னாஸா் மதானி எங்களுக்கு உதவினார் அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.
இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.
பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.
ஆனால் தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் இருந்த பகை பற்றியும், அல்உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.
ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.
அதன்படி பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.
திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.
எனது வீட்டில் அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.
அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்துவிடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.
ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.
நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.
குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.
பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் “நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்” என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வா் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார் உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைக் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சென்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.
மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வைடிப்புக்காக பீஜே கொடுத்த பணம் அல்ல என்று புகாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.
என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரணை செய்தது. அவா்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.
ஆனால் காவல் துறையினர் இதை முழுவையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் செய்வது முழு உண்மை என்று போலீசார் கண்டு கொண்டனர்.
அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்பட்டிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜூபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணா்வு அலுவலகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்
இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.
உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினா் எதிர்பார்த்தனர்.
இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜூபைர் கொடுத்த வாக்குமூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன் அவர்கள் நகலைத் தந்தனர்.
அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.
ஜூபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)
அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும் அற்பதம் நிகழ்ந்தது எனலாம்.
புரசைவாக்கம் தாக்கா் தெருவில்தான் உணர்வு அலுவலகம் இருந்தது.
பின்னர் இப்ராஹிம்ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அலுவலகம் மாற்றப்பட்டு வி்ட்டாலும் நீதிமன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்ததோம். இதைப் பார்த்துவிட்டுத் தான் ஜூபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ரா ஹிம் ஷா தெருவுக்கு மாறி வி்ட்டோம்.
அதாவது எந்த மாதத்தில் என்னை தாக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவலகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.
எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்த உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.
மறுநாள் நீங்கள் கூறியது உண்மை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்துவிட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.
அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பலகாலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன்நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்குமூலமே காரணம்.
ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.
என் மீது இவர்கள் பழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலி்ல காவல்துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகைதான் இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப புகார் தான் காரணம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.
குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகைதான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிகக வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையி்ல் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவா்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.
என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு எனனை அலைய வைத்துவிட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.
இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.
மீண்டும் நான் உறுதிபடக்கூறிகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்படமாட்டான்............
இன்னும் முழுமையான விபரங்கள் அறிய நீங்கள் கட்டாயம் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள அந்த முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்.
நன்றி
உணர்வு