Sunday, November 24, 2013

பீஜேயின் தன்னிலை விளக்கம்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம்.

இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை. பித்னாவுக்கு வழியும் இல்லை.

மேலும் ரியல் எஸ்டேட் அல்லது பிற சேவை நிறுவனங்கள் நடத்தினால் ஜமாஅத்தின் பெயர் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அதற்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் வியாபார நேர்மைக்காக மட்டுமே வாடிக்கையாளர்களாக உள்ளனர். தவ்ஹீத் சகோதார்களை விட மற்ற சகோதரர்களும், போரா ஜமாஅத்தினரும், முஸ்லிமல்லாத மக்களும் தான் அதிக அளவில் வாடிக்கையாளராக உள்ளனர். விலைகுறைவு, தரமான பொருட்கள் என்பதற்காகவே வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே ஜமாஅத் சகோதரர்களை தனது வியாபாரத்துக்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று யாரும் கூற முடியவில்லை.

மண்ணடி பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் குவியும் ஒரே நிறுவனமாக மூன் மார்ட் வளர்ந்துள்ளதால் எல்லா நேரமும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவைக் கவனத்தில் கொண்டு கடையை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சித்து வந்தோம்.

அந்த முயற்சியின் விளைவாக டிசம்பர் முதல் தேதியில் இருந்து பிராட்வே சாலையில் 2400 சதுர அடிபரப்பளவு கொண்ட வாடகைக் கட்டடத்துக்கு moon mart மூன் மார்டை மாற்றுகிறோம்.

அதுபோல் 3500 சதுர அடியில் அமைந்த மற்றொரு வாடகைக் கட்டடத்தில் இன்னொரு நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் துவக்கவுள்ளோம்.

இப்போது பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெரிய அளவில் தொழில் செய்வதற்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை என்பது பல சகோதரர்களுக்குத் தெரியும்.

நான் எனது அறிமுகத்தைப் பயன்படுத்தி ஜமாஅத் சகோதரர்களிடத்தில் கடன் வாங்கி இருப்பேனோ அல்லது பங்குதாரர்களைச் சேர்த்து தொழிலை விரிவாக்கி இருப்பேனோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

எனது தொழில் விரிவாக்கத்துக்காக நான் ஜமாஅத் சகோதார்களிடமோ மற்றவர்களிடமோ எந்தக் கடனும் வாங்கவில்லை. யாரையும் பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. கடன் வாங்குவதையும் பங்கு சேர்வதையும் நான் தவிர்ப்பதுடன் அதையே ஆலோசனையாக மற்றவர்களுக்கும் கூறிவருகிறேன். எனவே இந்த ஜமாஅத்தின் அறிமுகத்தை எனது தொழில் வளர்ச்சிக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை முறைகேடாக நான் பயன்படுத்தி இருக்கலாமோ? அல்லது ஜமாஅத் நிதியில் கடன் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வரலாம். ஜமாஅத்தின் நிர்வாக நடைமுறையை அறிந்தவர்கள் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைவர் அல்லது பொதுச் செலாளர் நிதியைக் கையாள முடியாது. நிர்வாகக் குழுவின் ஆலோசனைப் படி பொருளாளர் தான் கையாள முடியும்.

நிர்வாகச் செலவுகளுக்குக் கூட 5000 ரூபாய்தான் தலைவர், பொதுச் செயலாளர் செலவிட முடியும். 25 ஆயிரம் வரை செலவிடுவது என்றால் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆலோசித்துத் தான் செலவிட முடியும். அதற்கு மேல் செலவிடுவது என்றால் நிர்வாக குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்பே செலவிட முடியும்.

இப்படிப்பட்ட நிர்வாகம் உள்ள ஜமாஅத்தில் நானோ மற்ற எந்த நிர்வாகியோ கடனாகக் கூட பணத்தை எடுக்க முடியாது.

எனது தொழில் விரிவாக்கத்துக்கு எந்த தனிநபரின் உதவியையும் நான் நாடவில்லை. எந்தச் செலவந்தரிடமும் கடனும் பெறவில்லை. பார்ட்னராகவும் சேர்க்கவில்லை. ஜமாஅத்தில் இருந்து கடனாகவும் பெறவில்லை.

யாருக்கும் தெரியாமல் ஜமாஅத் பணத்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை. எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜமாஅத்தின் பணம் என் கட்டுப்பாட்டிலோ கைவசத்திலோ இல்லை. ஜமாஅத் பணத்தை அமானிதமாக சில நேரம் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றை எனது சொந்த ஊருக்கு அருகில் வாங்கிப் போட்டு இருந்தேன். தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை போடப்பட்டு சாலையில் அந்த இடம் வருவதால் அந்த இடத்தின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து அல்லாஹ் பரக்கத் செய்துள்ளான்..

இஸ்மாயீல் சலபி என்பவர் எனது சொத்து குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதற்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். அந்தப் பதிலில் அந்த இடத்தைப் பற்றி முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன். அந்த ஆக்கத்தை வாசிக்க http://onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/ என்ற இணைப்பைப் பார்க்கவும்.

எனது ஒரே சொத்தான அந்த நிலத்தை உடனடியாக விற்று கடையை விரிவாக்கம் செய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

15 நாட்களுக்கு முன்னர் அந்தச் சொத்தை தொண்டி தவ்ஹீத் சகோதரர்கள் வழியாக விற்றேன். தொண்டியில் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.

அந்தப் பணத்தையும் தற்போது நடத்திவரும் மூன் மார்ட் நிறுவனத்தின் சரக்குகளையும் சேர்த்துத் தான் தற்போது எனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இயக்கத்தை தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சந்தேகப்படும் வகையில் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன்.


 நன்றி: ஆன்லைன்பிஜே

1 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் உதவி செய்வானாக. மேலும் இறுதி வரை ஹராமான வியாபாரத்தில் இருந்து பாதுகாப்பானாக.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.