இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.
மாமனிதர் நபிகள் நாயகம் - சுகபோகங்களில் திளைக்கவில்லை (தொடர் 5)
சுகபோகங்களில் திளைக்கவில்லை:
உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 5386, 5415
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 6456
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991
அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 730, 5862
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 4913
இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.
இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.
'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார்.
நூல் : புகாரி 183, 992, 1198, 4572
கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப்படுத்திருக்கிறார்.
அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.
வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?
நபிகள் நாயகத்தின் அரண்மனை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.
மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.
நூல் : புகாரி 3906
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.
தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.
தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.
பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.
உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.
தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
'நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.
நூல் : புகாரி 382, 513, 1209
ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5 x 5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!
பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.
மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?
இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லை.
அத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.
வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?
பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே
கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சிட்டிகளில் ஆவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?
ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.
நூல் : புகாரி 729
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.
செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.
நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.
ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.
அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.
வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?
எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?
இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.
உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.
'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.
மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள்.
நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461
நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.
பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.