மக்கள் மத்தியில் குறிப்பாக ஏகத்துவாதிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு விவாத ஒப்பந்தம் தான் கடந்த 25.12.2013ம் திகதி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முஜாஹித் தரப்பினருக்கும் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தமாகும்.
பல மாதங்களாக கடித பரிமாற்றம் நடத்தப்பட்ட பிறகு ஒரு உடன்பாட்டிற்கு வந்து விவாத ஒப்பந்தத்திற்கு நேர காலம் ஒதுக்கப்பட்டது.
எனினும் விவாத ஒப்பந்தத்தில் கலந்துக் கொண்ட முஜாஹித் குழுவினர் ஏற்கனவே திட்டமிட்டபடி சில போலி காரணங்களை முன் வைத்து விவாத ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி ஓடி விட்டார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை இது போன்ற பல ஒப்பந்தங்களை கண்டவர்கள் என்பதாலும், எதிர் காலத்தில் இதே தலைப்புகளில் விவாதிக்க யார் முன் வந்தாலும் சவாலை பகிரங்கமாக ஏற்றுக் கொள்பவர்கள் என்பதினாலும் இது தவ்ஹீத் ஜமாஅத் இழந்த ஒரு சந்தர்ப்பமாக கருதப்படமாட்டாது. ஆனால், முஜாஹித் போன்றவர்கள் புகழை சம்பாதிப்பதற்கே தருணம் தேடுபவர்கள் என்பதினாலும், தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டால் இந்த தலைப்புகளில் யாரும் விவாதிக்க முன்வர மாட்டார்கள் என்பதனாலும் இச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டது அவர்களைப் பொறுத்த வரை பெரும் இழப்பாகும் என்பதில் எள்முனை அளவிலும் சந்தேகம் இல்லை. அப்படியிருந்தும் வேண்டும் என்றே உப்புச் சப்பு இல்லாத காரணங்களை கூறி தப்பினோம் பிழைத்தோம் என்று பெரு மூச்சு விட்டு முஜாஹித் தரப்பு ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி ஓடி விட்டது.
விவாத ஒப்பந்தங்களுக்கு என்று சில விதி முறைகள் இருக்கின்றன. இவை ஒன்றும் அறியாதவர்களை தனது தரப்பின் சார்பாக வரவழைத்து தானும் அவமானப்பட்டு, தன்னால் அழைக்கப்பட்டவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் இந்த முஜாஹித். குறிப்பாக அக்கரைப்பற்று அன்ஸார் மௌவ்லவியுடன் சிலாபத்திற்கு சென்று முஜாஹிதின் மன்மத லீலைகள் அடங்கிய சீடியை கெஞ்சிக் கேட்டு முஜாஹிதின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி, முஜாஹிதின் மானத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று பெரும் ஆவலுடன் இருக்கும் சித்தீக் போன்றவர்களை எல்லாம் ஒப்பந்தத்திற்கு அழைத்து வந்ததிலிருந்து தனது தரப்பின் நியாயத்தை உணர இது போன்ற நயவஞ்கர்களை தவிர வேறு யாரும் இல்லை என்று முஜாஹித் பறை சாற்றி விட்டார்.
தலைப்பில் முரண்பாடு கொண்டு பிறகு ஒப்புக் கொண்டமை:
விவாத தலைப்பாக எது அமைய வேண்டும் என்பதே முதல் சர்ச்சையாக இருந்தது. அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் முன் வைத்த நியாயங்கள் என்னவென்று மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
முஜாஹித் எதை தான் பேசிய வீடியோவில் விவாத அறை கூவலாக விட்டாரோ அதையே விவாத தலைப்பாக்க வேண்டும் என்பது ஏற்கனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 08.09.2013ம் திகதி முஜாஹிதுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஒப்புக் கொண்டு தான் முஜாஹித் விவாத ஒப்பந்தத்திற்கே வருகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார். ஆனால், ஆச்சரியமான விடயம் என்னவென்றால்; தான் எதை விவாத அறை கூவலாக குறிப்பிட்டிருந்தாரோ அதையே அவர் மறந்திருந்ததுதான். மறந்திருக்காவிட்டால் அவர் வேண்டும் என்றே மறந்தது போல் நடித்திருக்க வேண்டும். ஏனெனில், இவருக்கு நடிப்பது கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரியூம்.
கடிதத்தை எடுத்துக்காட்டி வீடியோ கிளிப்பையும் போட்டு காட்டிய பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் விவாத அறை கூவல் விட்டதை முஜாஹித் ஒப்புக் கொண்டார். அதை ஒப்புக் கொள்ளும் போதும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தான் ஒப்புக் கொண்டார்.
பிறகு சூனியம் குறித்து மாத்திரம் விவாதிப்போம் என்று சூனியமாக பேச ஆரம்பித்தார். எது விவாத தலைப்பாக அமைய வேணடும் என்பற்கு தவ்ஹீத் ஜமாஅத் நியாயமான காரணங்களை முன் வைத்தது.
27.08.2013ம் அன்று முஜாஹித் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிவைத்த கடிதத்தில் “அல் குர்ஆனிற்கு சிறந்த அறிவிப்பாளர் கொண்ட ஹதீஸ்கள் முரண்படுதல் பற்றியும், சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று நம்புவது ஷிர்க் என்பது பற்றியும் தான் விவாதம் அமைய வேண்டும்” என்று அவரே குறிப்பிட்டிருந்தார். மேலும் விவாத அறை கூவல் விட்ட வீடியோவிலும் “அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சம்பந்தமாக பேசினால் எல்லா பிரச்சனையும் முடிந்து விடும். சூனியம் இருக்குதா? இல்லையா? என்பது மேட்டரே இல்லை” என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து காட்டியவுடன் “ஒப்பந்தத்தில் எதையும் மாற்றிக் கொள்ளலாம்” என்று அந்தர் பல்டி அடித்து பொருத்தமில்லாத பதிலொன்றைச் சொன்னார்.
விவாத ஒப்பந்தம் என்பது விவாத தலைப்பு, நிலைப்பாடு, விவாத அடிப்படைகள், விவாதிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் விவாத ஒழுங்குகள் குறித்து பேசும் கலந்துரையாடல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், எந்த தலைப்பில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டதோ, எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டதோ அதை மாற்றுவதற்கு யாரும் விவாத ஒப்பந்தங்களை பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில், அது விவாதிப்பதிலிருந்து பின்வாங்குவதாக கருதப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையே.
மீண்டும் சூனியத்தை மாத்திரம் பேசுவோம் என்றவர்கள் “சூனியத்தை முதலில் பேசி பிறகு இரண்டாவதாக அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்து பேசுவோம்” என்றனர். அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்பு தான் முதல் தலைப்பாக அமைய வேண்டும் என்பதற்கு பல நியாயமான காரணங்கள் முன் வைத்தது. அது தான் விவாத அறை கூவல் என்பதனால் அது தான் விவாத தலைப்பாகவே ஆக வேண்டும் என்பதை முஜாஹித் தரப்பிற்கும் மறுக்க முடியவில்லை. முதலில் அடிப்படையான விடயங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் ஒப்புக் கொள்வார்கள். ஏனெனில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று வாதிப்பவர்கள், நாங்கள் அல் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளாக எதை முன் வைக்கிறோமோ அவ்வாறு கருதப்படும் செய்திகளை முன் வைக்கும் போது “இந்த செய்திகள் நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று ஒரே வார்த்தையில் சொன்னால் அவை நபிகள் நாயகம் அவர்கள் சொன்னவைகளா? இல்லையா என்ற சர்ச்சை கிழம்பி மீண்டும் அடிப்படையை தீர்மானிக்கும் வழி முறை என்ன வென்று தானாக தலைப்பு மாறி விடும். அதனால் முதல் தலைப்பாக அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்புத் தான் வர வேண்டும் என்ற நியாயத்தை தவ்ஹீத் ஜமாஅத் முஜாஹிதுக்கு புரிய வைத்தது. ஆனால், அதை மறுப்பதற்கு முஜாஹித் தரப்பினர் எடுத்து வைத்த வாதங்கள் சிறு பிள்ளைத்தனமாக இருந்தது. “நாங்கள் ஜும்ஆ செய்தால் எங்களுக்கு பின்னால் இருந்து தொழாமல் போறாங்க. எங்களை முஷ்ரீக்குகள் என்று சொல்றாங்க, எங்களுக்கு இதனால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சூனியம் குறித்து முதலில் பேசுவோம். நாங்கள் குர்ஆனை மாத்திரம் வைத்து சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்பதை பேசுவோம் என்று சென்டிமென்டாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேச ஆரம்பித்தனர்.
சூனியம் குறித்து பேசுவதற்கு பெரும் பகுதி திருக்குர்ஆனிலும் சிறு பகுதி ஒரு சில ஹதீஸ்களிலும் உண்டு என்று முஜாஹித் கூறியதற்கு நேர் மாற்றமாக குர்ஆனை வைத்து மாத்திரம் நாங்கள் நிரூபிப்போம் என்று முர்ஷித் கூறியது முஜாஹித் தரப்பினர் சூனிய தலைப்பிலும் ஒரு நிலைபாட்டில் இல்லையென்பது தெளிவாகியுள்ளது.
பிறகு குர்ஆனுக்கு முரண்படுதல் என்றால் என்ன? என்று தவ்ஹீத் ஜமாத்திடம் விளக்கம் கேட்க ஆரம்பித்தார் முஜாஹித். இவ்வளவு காலம் நமக்கு தொடர் மறுப்பு பேசியவர் முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்னவென்று ஒப்பந்தத்தின் போது நம்மிடமே கேட்கிறார். நமக்கு மறுப்பு பேசும் போதும் விவாத அறை கூவல் விட்ட போதும் அந்த வரைவிலக்கணம் தெரியாமல் தான் பேசியுள்ளாரா? அல்லது வஹீயில் முரண்பாடு இல்லை என்று அல்லாஹ் கூறுவதை நம்மிடம் விளக்கம் கேட்டுத் தான் விளங்கப் போகிறாரா என்று எங்களுக்கு புரியவில்லை.
4:82 வசனத்தில் அல்லாஹ் வஹீயில் முரண்பாடு வராது என்று எதை குறிப்பிடுகிறானோ அதைத்தான் நாங்களும் எங்கள் நிலைபாடு என்று கூறுகின்றோம். இப்போது நீங்களும் முரண்பாட்டிற்கு வரை விலக்கணம் கூறுங்கள் என்று கேட்டவுடன் முரண்பாட்டின் வரை விலக்கணம் எனும் கதை முடிந்து விட்டது.
பிறகு தலைப்பையும் நிலைப்பாட்டையும் எழுதிக் கொள்ள தயாராகும் போது இன்னும் சில சர்ச்சைகள் இருக்கிறது. அவற்றை பேசிய பிறகே எழுதிக் கொள்வோம் என்று முஜாஹித் கூறினார். இவர் பல்டி அடிக்கப் போகிறார் என்ற சந்தேகம் அப்போது எழ ஆரம்பித்தது.
விவாதிப்பவர்கள் யார்?
விவாதத்தில் கலந்துக் கொள்பவர்கள் யார் என்பதை சர்ச்சையாக்கியவர்கள்தான் பின் வாங்கியவர்கள் என்பதில் நடுநிலையாக சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். திறமைசாலி யார்? வீரன் யார்? என்பதை விட எது சத்தியம் எது அசத்தியம் என்பதை விவாதிப்பதுதான் சரியானது. இதை ஆரம்பத்தில் முஜாஹித் தரப்பும் ஒப்புக் கொண்டது.
முஜாஹித் தஃவா களத்திற்கு தகுதியற்றவர் என்று நாங்கள் கூறிய போது “அவர் எத்தகைய அயோக்கியனாக இருந்தால் உங்களுக்கு என்ன? நீங்கள் அவர் முன்வைக்கும் கொள்கை வழிகேடானது என்பதை விவாதிக்க வேண்டியது தானே” என்று முஜாஹித் கும்பல்களும் கேள்வி எழுப்பியதும் இங்கு நினைவூட்டப்பட வேண்டும். இது வரை தவ்ஹீத் போர்வையில் இருந்தவர்கள் கூட எதிர் தரப்பில் விவாதிப்பவர்கள் யார் என்பதில் சர்ச்சை கிழப்பியது கிடையாது.
வரலாற்றில் முதல் முதலாக ஒரு தவ்ஹீத் போர்வை இதைக் காரணம் காட்டி பின் வாங்கியது ஆச்சரியமாக உள்ளது.
முஜாஹித் என்பவர் தஃவா களத்திற்கு அறவே தகுதியற்றவர் எனபதே டீ.என்.டீ.ஜே மற்றும் எஸ்.எல்.டீ.ஜே. யின் நிலைப்பாடாகும். முதலில் அவருடைய விவாத அழைப்பை ஏற்று அவருடன் ஏனைய விடயங்கள் பேசுவதற்கு முன் இது குறித்து பேசுவதே மிகவும் சரியான வழிமுறை. உதாரணமாக ஒருவர் திருடி விட்டு கை வசமாக மாட்டிக் கொள்கிறார். இப்போது திருடன் அவரை பிடித்தவரை நோக்கி “நீ யோக்கியனா? நீ அன்று என்னிடம் இப்பகுதியில் உள்ள பெரும் பணக்காரன் இன்னார் தான் என்று கூறினாய். அது பொய்யாகி விட்டது. நான் திருட்டுக்கு வந்த வீடு சாதாரண தரத்தில் உள்ள ஒருவனின் வீடு. எனவே, இதில் நீ சொன்னது சரியா பிழையா என்று முதலில் விளக்கம் தா” என்று வாதிடுகிறார். இதைப் பார்த்தவர்கள் ‘ஆம் இதற்கு பதில் சொன்ன பிறகு திருடனை தண்டிப்பதா இல்லையா என்று முடிவு செய்வோம்’ என்றால் இது எப்படி அநியாயமாகுமோ, படு முட்டாள் தனமாகுமோ இது போல் தான் முஜாஹிதின் விவகாரமும், அதற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களின் நிலைப்பாடுமாகும்.
எனினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேசினால் விவாதிக்க வர மாட்டேன் என்று கூறிய காரணத்தால், முஜாஹித் தஃவா செய்ய தகுதியானவரா என்பதை விவாதிப்பது முக்கியமாக இருந்தும் சத்தியத்தை நிரூபிக்க வேண்டியுள்ளதால் அதை பேசாமலிருக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒப்புக் கொண்டது. இதையெல்லாம் கடந்து வந்தவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு “பீ.ஜே. வர வேண்டும். அல்லது எஸ்.எல்.டீ.ஜே. மாத்திரம் வர வேண்டும்” என்று நொண்டி காரணங்கள் கூறி நிபந்தனையிட்டார்.
அது “பீ.ஜே. வராவிட்டால் நான் விவாதிக்க வர மாட்டேன்” என்று கூறும் அளவிற்கு சென்றது. தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால் விவாதிக்க வர மாட்டேன் என்று கவனமாய்க் கடிதத்தில் குறிப்பிட்டவர் பீ.ஜே. வராவிட்டாலும் விவாதிக்க வர மாட்டேன் என்று கடிதத்தில் குறிப்பிடாமல் இருந்தது ஏன்? அது ஒப்பந்தத்தில் பேசப்பட வேண்டிய சாதாரண விடயமாக இருந்தால் அதை சாதாரண கோரிக்கையாக வைக்காமல் வலுவான நிபந்தனையாகவும் கட்டளையாகவும் போடும் அளவிற்கு சென்றது ஏன்? விவாத ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் கூட ‘பீ.ஜே கலந்து கொள்ள வேண்டும் என்பது எமது வேண்டுகோள் மட்டுமே!’ என்றவர் இறுதியில் அந்தர் பல்டியடித்து ‘பீ.ஜே கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்’ என்று கட்டளையிட்டமை இவரின் முன்னுக்குப்பின் முரண்பாட்டையும், விவாதத்திலிருந்து பின்வாங்கும் தொடை நடுங்கித்தனத்தையும் பளிச்சென்று படம்போட்டு காட்ட போதுமான சான்றாகும்.
அந்த கோரிக்கை நியாயமானதாக இருந்திருந்தால் நாங்களும் அதை கண்டிப்பாக ஏற்றிருப்போம். சகோதரர் பீ.ஜே. அவர்களுக்கு முஜாஹிதுடன் விவாதிப்பது என்பது பெரும் காரியம் அல்ல. அவர் இறைவனின் உதவியினால் பல விவாத மேடைகளை சந்தித்து பல அசத்தியவாதிகளின் முகத்திரையைக் கிழித்தவர். இது போன்ற ஒரு போலியை தோலுரிப்பது சத்தியத்தை சுமந்திருப்பவர்களுக்கு பெரும் காரியம் அல்ல. எஸ்.எல்.டீ.ஜே.க்கும் இவருடன் விவாதிப்பது என்பது பெரும் காரியம் கிடையாது. பத்தோடு பதினொன்று என்று நாங்களும் இதை ஏற்றிருப்போம். ஆனால், முஜாஹித் விவாத அறை கூவல் விட்டு ஒப்பந்தத்திற்கான கடித பரிமாற்றம் செய்து கொண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்துடன் தான்.
தலைமையகத்திற்கு கடிதம் கொடுத்து அதன் மண்டலத்துடன் தான் விவாதிப்பேன் என்று அங்கு சென்று சொல்வது நோக்கத்தை அடைய முடியாமல் போனதால் காரியத்தை சாதிக்க விடாமல் திசை திருப்புவதற்குத் தான். இலங்கையில் இருக்கும் போது தமிழ்நாடு உலமாக்களுடன் பேசுவோம் என்பதும், தமிழ்நாட்டுக்கு சென்று இலங்கை உலமாக்களுடன் பேசுவோம் என்பதும் போலிகளின் பல வேசத்தைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டி விட்டது.
மேலும் முஜாஹித் சகோதரர் பீ.ஜே.யை விவாதிக்க அழைத்ததற்கு முதலில் முன் வைத்த காரணம் “பீ.ஜே யுடன் விவாதித்தால் அறிவு மற்றும் ஆய்வுகள் அலசப்பட்டு மக்களுக்கு பலன் கிடைக்கும்” என்பதே. ஏனெனில் “அறிவுக்கு நான் பயப்படுவதாக இருந்தால் அவருக்குத் தான் பயப்பட்டிருப்பேன்” என்று ஒப்பந்தத்தில் முஜாஹித் பகிரங்கமாகக் கூறினார். பிறகு பீ.ஜே யை அழைக்கக் காரணம் தக்லீதை உடைப்பது தான் என்றார். ஏனெனில் பீ.ஜே. இல்லாமல் விவாதித்தால் ‘பீ.ஜே. இருந்திருந்தால் நன்கு பதில் கொடுத்திருப்பார்” என்று மக்கள் கூறுவார்களாம். இதன் மூலம் தக்லீத் நிலைத்திருக்குமாம்.
இவரது இந்த வாதம் நியாயமற்றது. ஏனெனில் சகோதரர் பீ.ஜே. இருந்தால், அவரது வாதத்திறமையால் விவாதத்திலிருந்து வென்றார் என்று கூறி மீண்டும் முஜாஹித் போன்றவர்களும் தப்பிக்க வழி தேடுபவர்களும் அதே தக்லீதை காரணம் காட்டுவார்கள். இதுவே அசத்தியவாதிகளின் கேடயம் என்பது நாங்கள் அனுபவத்தில் பார்த்திருக்குறோம். பீ.ஜே. இல்லாமல் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி விவாதத்தின் மற்றும் அழைப்பு பணியின் விளைவுகளுக்கு சொந்தம் கொண்டாடி அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்த முஜாஹித் கும்பல், பிறகு “பீ.ஜே பேச தேவையில்லை. மேடையில் இருந்தால் போதும்” என்று கூறி தனது உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் முஜாஹிதின் சட்டைக்குள் இருந்த பூனை வெளியே பாயந்தது. இப்போது அறிவு மற்றும் ஆய்வுக்கு என்ன நேர்ந்தது? பீ.ஜே. பேச தேவையில்லை மேடையில் இருந்தால் போதும் என்றால் என்ன ஆய்வு நடக்கும்? என்ன அறிவு அலசப்படும்? நோக்கம் என்னவென்று இப்போது அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.
பிறகு தக்லீதை உடைப்பதற்கு எஸ்.எல்.டீ.ஜே மட்டும் வரட்டும் என்றால் அதன் நோக்கம் என்ன? இப்போது பீ.ஜே விவாதத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு முன் வைத்த நியாயங்கள் எங்கே போனது? மீண்டும் தக்லீத் நிலைத்திருக்க போகிறதே. பீ.ஜே. இருந்தால் நன்கு விவாதித்திருப்பார். பதில் கொடுத்திருப்பார் என்று மக்கள் கூறுவார்களே. தக்லீத் உடைபடாதே என்ன செய்வது? சுருங்கச் சொல்வதென்றால் ஒட்டு மொத்தமாக விவாதிப்பதிலிருந்து பின் வாங்குவதற்கு என்ன காரணங்களை முன் வைக்கலாம் என்று மூன்று மாதங்கள் சவூதியில் இருந்து யோசித்து விட்டு விடுமுறை கழிப்பதற்கு இந்தியா போய் வந்துள்ளார் இந்த அசத்தியவாதி முஜாஹித். முஜாஹிதின் இக்கூழ்முட்டைத் தனத்துக்கு கூஜா பிடித்து இந்தியாவரைக்கும் சென்று வந்துள்ளனர் அவரது பரிவாரங்கள்.
சத்தியத்தை நிலைநிறுத்த அல்லாஹ் வழங்கிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின் வாங்கியதாக கூறுவது, மறுமையில் அல்லாஹ்வூக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் பின் வாங்கிய அசத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் முஜாஹித் போன்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் முஜாஹித் தரப்பில் கலந்துக் கொண்ட முர்ஷித் என்பவர் கூறும் போது ‘நாங்கள் சத்தியத்தை நிலை நாட்ட வந்தவர்கள். விவாதத்தின் மூலம் இரண்டில் ஒரு தரப்பிற்கு தெளிவு கிடைக்கும்’ என்று கூறிய முர்ஷித், ‘எஸ்.எல்.டீ.ஜே. ஆய்வாளர்களுடன் தான் நாங்கள் விவாதம் செய்வோம்’ என்று அடுத்த சில வினாடிகளில் நா பிரண்டுப்பேசி தனக்குத் தானே முரண்பட்டுக் கொண்டார். சத்தியத்தை விளங்குவது உங்கள் நோக்கமாக இருந்தால் டீ.என்.டீ.ஜே. ஆய்வாளர்களுடன் விவாதிக்க முர்ஷிதும் அவர் தரப்பும் மறுத்தது ஏன்? முஜாஹிதுக்கு வக்காலத்து வாங்க வந்ததினால் முர்ஷிதுக்கு தனது கொள்கையும் நியாயமும் மறந்து போனது போலும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கடிதம் அனுப்பி பீ.ஜே யுடன் விவாதிப்போம் அல்லது எஸ்.எல்.டீ.ஜே யுடன் மட்டும் விவாதிப்போம் என்று கூறி, இல்லாவிட்டால் விவாதிக்க முடியாது என்று பின் வாங்கிய முஜாஹிதும் அவரது பக்தர்களும் அசத்தியவாதிகள் எனபதிலும் வழிகேடர்கள் என்பதிலும் இதன் பிறகும் யாருக்கும் எள்முனையளவேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் உண்மையான கொள்கைவாதிகளாக இருக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.
குறிப்பு :
ஒப்பந்தத்திலிருந்து தப்பியோடியவர்கள் இன்னும் 03 நாட்கள் மண்ணடியில் இருப்போம், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து ஒப்புக் கொண்டால் மீண்டும் ஒப்பந்தம் செய்யலாம் என்று கூவினார்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வார்கள். இந்த மாடுகளுக்கு எத்தனை சூடு வைத்தாலும் போதாது போல் தெரிகிறது.
எனினும் நாங்களும் எங்கள் நியாயமான நிலைப்பாட்டின் படி தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் விவாதிப்பவர்கள் யார் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம். அதை எதிர் தரப்பு தீர்மானிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் முஜாஹித் தரப்பு மீண்டும் ஒப்பந்தம் செய்ய முன் வந்தால் எதிர்வரும்; 26.01.2014ம் திகதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையத்திற்கு எழுத்தில் தெரிவிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.