Wednesday, December 19, 2012

போப் ஆண்டவர் வாக்கு மூலம்!


டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!!

கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  

 போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :

 16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் ('Jesus of Nazareth: The Infancy Narratives') என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.

 டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

 இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

 தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.

 நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.

 இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்த அதிர்ச்சித் தகவல் :

 உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.

 இது மட்டுமல்லாமல், கிறித்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து பாடல் பாடியதாக வரக்கூடிய சம்பவங்களும் பொய் என்றும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்றும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.

மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதும் பொய்யாம்:

 அதுமட்டுமல்லாமல் ஏசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாகக் கூறி மாட்டுத்தொழுவம் போன்று கொழு பொம்மைகளை அமைத்து கிறித்தவர்கள் பில்டப் கொடுப்பார்கள். போப் ஆண்டவர் அவர்கள் அது குறித்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார். மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன.

 இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.

 இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தேயுவுக்கும், லூக்காவுக்கும் முரண்பாடு:

 ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மத்தேயு, ஏரோது என்ற மன்னன் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் ஏசுவின் தாயார் மரியாளும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பும், குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

 இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.  

 மேற்கண்ட முரண்பாடுகளும் இது குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கட்டுக்கதைகள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது "இதுதான் பைபிள்" என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே உள்ள செய்தியில் காண்க!

சூழ்நிலைத் தடுமாற்றம்:

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

(மத்தேயு 2:13,14)

 இயேசு பிறந்தபோது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும் அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார். ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

 அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம்தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 2:15-52)

 ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

 பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

 லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

 மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

 ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

 அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

 ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

உண்மையை ஒப்புக்கொண்ட போப்:

 போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.  

 போப் ஆண்டவர் கூறுவது உண்மையாக இருக்குமேயானால், முரண்பட்ட செய்திகளை அவர்கள் கூறியிருக்கக் கூடாது. அவ்வாறு இருவரும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதே அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒளியை இருளச் செய்துவிடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எதற்குமே ஆதரமில்லை:

 கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

 கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

 இதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி! ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா? ஈஸ்டர் மண்டேவா? என்ற தனிக்கட்டுரையில் காண்க!

நன்றி    
http://onlinepj.com/katturaikal/dec25-il-easu-printhar-enpathu-thavaru/

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.