இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.
மாமனிதர் நபிகள் நாயகம் - சொத்தும் சேர்க்கவில்லை, சொகுசாகவும் வாழவில்லை (தொடர் 3)
இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா?
இதை முதல் நாம் ஆராய்வோம்.
ஏனெனில் அரசியலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.
ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார்.
இவ்வாறு சொத்துக்கள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.
இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.
இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.
இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் 'நான் ஊழல் செய்யவில்லை' என்று அவர் மறுத்ததில்லை. 'நீ ஊழல் செய்யவில்லையா?' என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.
கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?
இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.
அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கேள்வி கேட்பாரற்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்!
தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர்,
- வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?
- பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா?
- ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?
- அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா?
- ஊரை வளைத்துப் போட்டாரா?
- தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா?
என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான் "அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை" என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொருத்தவரை 'இல்லை' என்று தான் வரலாறு விடை கூறுகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.