ஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.
உடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார். தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது. இதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து முடிக்கபப்ட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் உடலை அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர். பின்பு கடந்த 19/03/2012 அன்று மறைந்த அழகர்சாமி சடலத்தை இந்தியா அனுப்பி வைத்தனர்.
இந்த சடலத்தை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே இறந்தவரின் முதலாளியை சந்தி்தத தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவரோ தானே ஒரு ஆளை வைத்து லாரி வாடகைக்கு விடுவதால் பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது என்றார். இறுதியில் இறந்தவரின் 10 நாட்கள் சம்பளத்தை ஒரு மாத சம்பளமாகத் தருவதாகக் கூறி 1000 சவூதி ரியால் கொடுத்தார். அந்த தொகையும், அவரது பொருட்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கடையநல்லூர் முஜாஹிதீன் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.