Thursday, January 12, 2012

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ரூ.10 லட்சம் நிதியுதவி


சென்னை: தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் புதுவை பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் டிசம்பர் 31ம் தேதி முதல் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்தவர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர், பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர். இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

10 லட்சம் நிதியுதவி 

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவ்லவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர், துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர். 

பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ. 2,000த்தை முதல் கட்ட நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விபரங்களுக்கு: