'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.
தொடர் - 5:
சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்:
சிறுவர்கள் பசியை பொறுக்கமாட்டார்கள். முதலில் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். எனவே உணவு பரிமாறும் போது முதலில் சிறியவர்களுக்கே கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்'து மற்றும் "ஸாஉ' ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக'' என்று பிரார்த்தித்து விட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2660)
குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்:
குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.
இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).
அல்குர்ஆன் (2 : 128)
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் (14 : 40)
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (25 : 74)
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் (2 : 124)
செலவு செய்வது கடமை:
கஞ்சத்தனம் செய்யாமல் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் மீது கடமை. சில பெற்றோர்கள் தேவையில்லாத செலவுகளை செய்கிறார்கள். வீண்விரயம் செய்வது கூடாது.
அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.
அல்குர்ஆன் (2 : 233)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1819)
ஒரு மனிதன் தன் குடும்பத்திற்காக செலவிடும் எந்தத் தொகையும் வீணாக போவதில்லை. அல்லாஹ்விடம் நன்மையை நாடி செலவு செய்தால் கண்டிப்பாக இறைவன் அதற்குக் கூலி தருகிறாôன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (55)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசு (தீனார்) அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)
நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அüத்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)
வீண்விரயம் செய்வது கூடாது:
செலவு என்ற பெயரில் வீண்விரயம் செய்வது கூடாது. வீண்விரயம் செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (17 : 27)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ (2512)
தனது வருமானத்திற்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கி தாரளமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
அல்குர்ஆன் (65 : 7)
தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது:
குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3936)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்'' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (1817)
சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்:
சிறுவர்கள் பெரியவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்றாலும் சலாம் கூறும் முறையை சிறுவர்களுக்கு கற்றுத்தருவதற்காக நபி (ஸல்) அவர்கள் முதலில் சிறுவர்களுக்கு சலாம் கூறினார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது குழந்தைகள் இதைப் பார்த்து மற்றவர்களை சந்திக்கும் போது முந்திக்கொண்டு சலாம் கூறுவார்கள்.
(ஒரு முறை) அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல் : புகாரி (6247)
விளையாட அனுமதிக்க வேண்டும்:
விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமானது. விளையாடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சியுறுகிறார்கள். சுறுசுறுப்புடனும் ஆரோக்யத்துடனும் திகழ்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒüந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (6130)
(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, "நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (5074)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்'' என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (4626)
இடஞ்சல் தரும் விளையாட்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது:
விளையாட்டு என்றப் பெயரில் மற்றவர்களுக்கு இடஞ்சல் தருவதை பெற்றோர்கள் சம்மதிக்கக்கூடாது. நமது குழந்தைகளால் யாரேனும் அவதியுற்றால் அப்போது அவர்களை கண்டிக்கத்தவறக்கூடாது. பிறருக்கு சிரமம் தருகின்ற அடிப்படையில் விளையாடுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், "சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது "சிறுகற்களை எறிவதை வெறுத்துவந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது ; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று சொன்னார்கள்'' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது "சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ர-)
நூல் : புகாரி (5479)
விளையாட்டுக் கருவிகளை வாங்கித்தர வேண்டும்:
சிறுவர்கள் விûளாயட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தரும் போது மகிழ்ச்சியடைவார்கள். இதனால் பெற்றோரின் மீதான பாசம் அவர்களுக்கு அதிகரிக்கும்.
கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை எங்கள் சிறுவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : புகாரி (1960)
அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்:
அந்தரங்க உறுப்புக்களை சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் (24 : 58)
தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்:
பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தினால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்காமல் இருந்துவிடக்கூடாது. பெரும்பாலான குழந்தைகள் கெட்டுச் சீரழிந்ததற்கு பெற்றோர்களின் அளவுகடந்த பாசம் தான் காரணம். பிள்ளைகளை கண்டிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைத் தான் செய்கிறோம் என்பதை பெற்றொர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.
அல்குர்ஆன் (66 : 6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (2409)
பெற்றோர்களின் அலட்சியப்போக்கினால் பிள்ளைகள் தவறானப் பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனைத் தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (33 : 67)
சிறுவர்கள் மார்க்கம் தடுத்தக் காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.
ஆரம்பித்திலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல் செயல்பாடு ஆகியவற்றில் கலந்துவிடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக்கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்.
தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.
மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு "முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?'' எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1485)
பிள்ளைகளை சபிக்கக்கூடாது:
பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது "நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, "பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். "நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்கüன் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (304)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5062)
அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் "ஷஃ' என அதை விரட்டிவிட்டு, "உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!'' என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?'' என்று கேட்டார்கள். "நான்தான், அல்லாஹ்வின் தூதரே!'' என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிலிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5736)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டி-ல் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் "ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) "அவருக்கு நான் பதிலüப்பதா? தொழுவதா?' என்று கூறிக் கொண்டார். (பதிலüக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், "இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!'' என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு "இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்கüடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, "குழந்தையே! உன் தந்தை யார்?'' என்று கேட்டார். அக்குழந்தை, "(இன்ன) இடையன்'' என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், "தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "இல்லை, கüமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (3436)
கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜ‚ரைஜ் என்வரின் தாய் "இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!'' என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். மிக கவனமாக வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.
கல்வி கற்றுத்தர வேண்டும்:
குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்வது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம். மார்க்கக் கல்வி உலகக்கல்வி ஆகிய இரண்டையும் குழந்தைகள் பெறுவது அவசியம.
கல்வியற்றக் குழந்தைகள் நாகரீகம் தெரியாமலும் நல்லவற்றிலிருந்து தீயதை பிரித்தரியாமலும் வளர்கின்றன. இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு கல்வி உதவியாக இருக்கிறது.
கல்விக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் அடித்தாலாவது அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு காலை மாலை மத்ரஸாக்களுக்கு அனுப்பலாம். கல்வியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது. ஆனால் கல்வியைப் பெற்றவன் உயர்ந்தவன் என்றும் கல்வி அற்றவன் தாழ்ந்தவன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
அல்குர்ஆன் (39 : 9)
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (58 : 11)
உலகக்கல்வி மார்க்கல்வி என்று இஸ்லாம் தனித் தனியாகப் பிரிக்கவில்லை. மாறாக பலனுள்ளக் கல்வி பலனற்றக் கல்வி என்று இருவகையாகப் பிரிகிறது. உலகக்கல்வியை பலனுள்ள வகையில் பயன்படுத்தினால் அதன் மூலமும் இறைவனை நெருங்க முடியும்.
மனிதன் நேர்வழி பெறுவதற்கு உலக்கல்வி மட்டும் போதாது. இன்றைக்கு உலகக்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற எத்தனையோபேர் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான்.
எனவே உலகக்கல்வியுடன் மார்க்க அறிவை சேர்த்து கற்றுத்தரும் போது தான் பலனுள்ளக் கல்வி கிடைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)
உபதேசம் செய்ய வேண்டும்:
பிஞ்சு உள்ளத்தில் முதன் முதலில் விதைக்கின்ற கருத்துக்கள் பெரும் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை நம் குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய பாணியிலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.
முக்கியமாக இணைவைப்பு என்றால் என்ன? அது எவ்வளவு பெரிய பாவம்? இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு பெரியது? அவனது கருணை எவ்வளவு மகத்தானது? நாம் யாரிடத்தில் கையேந்த வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? நபி (ஸல்) அவர்களை எவ்வளவு உயர்வாக நேசிக்க வேண்டும்? என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு முதலில் விளக்கிச் சொல்ல வேண்டும்.
மனிதனிடத்தில் இருக்க வேண்டிய நற்குணங்களையும் இருக்கக்கூடாத தீய குணங்களையும் எடுத்துக்கூறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்.
நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.
"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
அல்குர்ஆன் (2 : 132)
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
அல்குர்ஆன் (2 : 133)
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (31 : 13)
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
அல்குர்ஆன் (31 : 16)
முத்தான உபதேசங்கள்:
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களை செய்துள்ளார்கள. இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.
சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத்தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப்பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவிதேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவிதேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (2440)
இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய அல்களாஉ வல்கத்ரு என்ற நூலில் இந்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக நடக்க வேண்டும் என்பதன் பொருள் அவனது கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.
சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை எளிதில் விளங்கிக்கொள்வதற்காக சுருக்கமாக கேள்வி பதில் கோணத்தில் புத்தகங்கள் உள்ளது. பெற்றோர்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.
பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்
பெற்றோர்களை மதித்து நடக்குமாறு கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
அல்குர்ஆன் (4 : 36)
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!
அல்குர்ஆன் (17 : 23)
நபி (ஸல்) அவர்கüடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (2653)
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (5973)
அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின்ஷ‚அபா (ரலி)
நூல் : புகாரி (5975)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5971)
நான் நபி (ஸல்) அவர்கüடம் "கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது'' என்றார்கள். "பிறகு எது?'' என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை செய்வது'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5970)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம், "நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (5972)
குகையில் மாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் பெற்றோர்களிடத்தில் நல்லவிதமாக நடந்துகொண்டதால் அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்று புகாரியில் 5974 வது ஹதீஸ் கூறுகிறது. இது போன்ற சம்பவங்களைக் கூறி உபதேசம் செய்யலாம்.
நபித்தோழர்களின் வாழ்க்கையில் நடந்த படிப்பினை தரும் சம்பவங்களை கதைகள் சொல்வது போல் கூற வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை குழந்தைகள் விரும்புகின்ற விதத்தில் சிறிது சிறிதாக எடுத்துரைக்க வேண்டும்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்