பெருந்தன்மையோடு நடக்க வேண்டும் என்று கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் போது கூட பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். என்று கீழ் வரும் செய்தியில் தெளிவாக இரத்தினச் சுருக்கமாக சொல்க் காட்டுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்!
அறிவிப்பவர் அஸ்மா (ர) அவர்கள் ஆதாரம் புகாரி (1434)
அல்லாஹ்வுக்காக கொடுக்கின்ற விசயத்தில் கஞ்சத்தனமுடையவர்களாக இருக்கக்கூடாது. அப்படி நாம் கஞ்சத்தனம் செய்தோம் என்றால் செல்வத்தை யார் நமக்கு தந்தவனோ அந்த அல்லாஹ் அவனின் அருட்கொடையில் இருந்து வழங்குவதை தடுத்து விடுவான். நமது சக்திக்குட்பட்ட வகையில் தர்மம் செய்ய வேண்டும் என்று இந்த செய்தியில் அஸ்மா ரலி அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
இறைத்தூதர்களின் பெருந்தன்மை
ஈஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை
ஈஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதற்கு எண்ணினார்கள் அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு பல கொடுமைகளையும் செய்து அவர்களை அல்லாஹ்வின் இடத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது இட்டுக்கட்டி அவருடைய தாயாரை விபச்சாரி என்று பட்டம் சூட்டியும் கூட அவர்கள் அந்த மக்கள் மீது எந்த அளவுக்கு அன்பாகவும் அவர்களை மன்னித்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் என்பதற்கு அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான்.
''நீ எனக்குக் கட்டளையிட்ட படி 'எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)
(அல்குர்ஆன்; 5:117,118)
மூஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை
மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததைப் போன்று உலகில் யாரும் மாறு செய்யவில்லை அதே போன்று அதிகமாக கருத்து முரண்பாடு கொண்டதும் இந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். மூஸா (அலை) அவர்களுக்கு சொல்லனா துன்பத்தைக் அவர்கள் கொடுத்தும் கூட அவர்கள் அந்த மக்களை பெருந்தன்மையுடன் மன்னித்து அல்லாஹ்விடம் பிராத்தனையும் செய்தார்கள்
நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கிய போது ''என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழி கேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழி காட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார்.
அல்குர்ஆன். 7:155
இறைத்தூதர் ஒருவரின் பெருந்தன்மை
இது போன்று இன்னொரு இறைத்தூதர் அவருடைய சமுதாய மக்களால் தாக்கப்பட்டு இரத்தம் முகத்தில் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களாகி நாம் இருப்போமானால் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு பழிவாங்கத் துடித்துக் கொண்டிடருப்போம். ஆனால் அந்த இறைத்தூதர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் என்னுடைய சமுதாயத்தை மன்னித்துவிடு அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். என்று அவர்களை அவரும் மன்னித்து அல்லாஹ்விடமும் மன்னிப்பை கேட்டார்கள். இந்த அளவுக்கு இறைத்தூதர்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் கூட அவர்கள் அல்லாஹ்வுக்காக பெருந்தன்மையோடு நடந்துள்ளார்கள். இதோ அந்த செய்தி உங்கள் உள்ளங்கள் விழித்து கண்ணீரைக் காணிக்கையாக்குவதற்கு.
(முற்கால) இறைத்தூதர்கள் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ''அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் புகாரி (3477)
இன்று நிலத்துக்காக சண்டையிடக்கூடிய பல பேர்களைப் பார்க்கிறோம். ஆனால் இந்த இரண்டு மனிதர்களின் பெருந்தன்மையைப் பார்க்கும் போது இப்படியும் அந்தக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களா? என்று மூக்கின் மீது கையை வைத்து சிந்தனை செய்ய வேண்டியுள்ளது. நிலத்தை வாங்கியவர் நான் நிலத்தைத்தான் வாங்கினேன் அதில் உள்ள இந்த தங்கம் நிரம்பிய ஜாடியை வாங்கவில்லை என்கிறார். நிலத்தை விற்றவரோ நிலத்துடன் சேர்த்து அதில் உள்ளவைகள் அனைத்தையும் தான் விற்றேன். என்கிறார். இப்படி இன்று பார்க்க முடிகிறதா? இதுதான் கிடைத்த சந்தர்ப்பம் என்றெண்ணி எல்லாவற்றையும் வாங்கியது மாத்திரமல்லாம் இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து அந்த மனிதனையே கொலைசெய்துவிடும் நிலையை இன்று நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தினம்தினம் கண்டு வருகிறோம் இதோ அந்த நல்ல மனிதர்களின் சம்பவம் படிப்பினைக்கு மாத்திரமல்லாமல் மனிதநேயத்தையும் நமக்கு இந்த சத்திய மார்க்கம் கற்றுத் தருகிறது.
பனூஇஸ்ரவேலர்களில் இருவரின் பெருந்தன்மை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூஇஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ''நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ''அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பüத்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (3472)