Sunday, October 19, 2014

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

அப்துர் ரஹ்மான், சையது அபுதாஹிர் மற்றும் பலர்...

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

உடனடியாக கருத்து சொன்னால், இரண்டில் ஒரு கருத்துடையவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து விடுவார்கள்.

அவரவர் தமக்கு சாதகமான கருத்தை மட்டும் எடுத்துக் காட்டி தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு என்று சிலரும், எதிர்ப்பு என்று சிலரும் திசைதிருப்பி விடுவார்கள்.

இப்போது அனைவரும் நிதானத் துக்கு வந்துள்ள நிலையில் நம் கருத்து உரிய முறையில் புரிந்து கொள்ளப்படலாம் என்று கருது கிறோம்.

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதில் எந்தப் பழிவாங்குதலும் இல்லை என்பதுதான் உண்மை.

1991களில் ஜெயலலிதா முதல் வராக இருந்தபோது மக்களால் வெறுக்கப்படும் வகையில் ஆட்சி நடத்தினார். இதன் காரணமாகவே அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு படுதோல்வியைப் பரிசளித்தனர்.

சுதாகரன் என்பவரை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டு, அவருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்ததும், அந்தத் திருமணத்தை அந்தக் கால மகாராஜாக்களை மிஞ்சும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் படு ஆடம்பரமாக நடத்தியதும், கடந்த திமுக ஆட்சியில் மற்றவர்களின் சொத்துக்களை எப்படி அபகரித்தார்களோ, அதுபோல் பல சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்தில் செய்த ஊழலுக்காகத்தான் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது மக்கள் அதிக வெறுப்பு கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் மக்கள் நிச்சயம் அதைக் கொண்டாடி இருப்பார்கள்.

ஒரு சம்பவம் நடக்கும்போது மக்களுக்கு இருந்த உணர்வு காலப்போக்கில் மாறிவிடும்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் அவர் கொல்லப்பட்டு ஓரிரு வருடங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு இருந்திருக்கும். அதைக் கண்டித்து யாரும் வாய் திறக்க முடியாத அளவுக்கு கொலையாளிகள் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆனால் தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அந்த நிலை மாறிவிட்டது.

நமது நாட்டில் குற்றம் நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு அளிக்கப்படுவது சாதாரணமாகி விட்டது. இதனால் அந்தத் தீர்ப்பு நீதியானது அல்ல என்று மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அந்த வகையில்தான் ஜெயலலி தாவுக்கு எதிரான தீர்ப்பும் மக்களால் பார்க்கப்படுகிறது. பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே இருக்கும்போது ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம் என்பதுதான் அதிகமான மக்களின் கருத்தாக மாறியுள்ளது. இதற்கு தீர்ப்பை தாமதப்படுத்தும் நீதிமன்ற நடைமுறைதான் காரணம்.

1991 களில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதம் ஒரு ரூபாய்தான் சம்பளமாக எடுத்துக் கொண்டார். அவர் முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 60 ரூபாய்கள்தான். ஆனால் அவர்மீது திமுக ஆட்சிக்கு வந்து தொடுத்த வழக்கில் அவருக்கு 66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதற்கான ஆதாரங்களைத் திரட்டி வழக்கை நடத்தியது.

66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கு ஜெயலலிதாவால் நீதி மன்றத்தில் தக்க பதில் சொல்ல முடியவில்லை. இதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கொலைஇ கொள்ளை போன்ற வழக்குகள் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படும். சாட்சிகள் விலை பேசப்பட்டால், அல்லது மிரட்டப் பட்டால் சாட்சிகள் பல்டி அடித்து விடுவார்கள். இதனால் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுவார்கள்.

ஆனால் சொத்து சேர்த்தல் வழக்குக்கு சாட்சிகளைவிட ஆவணங்கள்தான் முக்கியமானவை. சாட்சிகள் துணை ஆதாரங்களாகத் தான் நிறுத்தப்படுவார்கள்.

ஜெயலலிதா பெயரில் பல சொத்துக்கள் வாங்கிஇ சட்டப்படி அது பதிவும் செய்யப்பட்டு இருக்கும் போது அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும்.

அதுபோல் அவர் பெயரில் உள்ள 66 கோடி சொத்துக்களுக்கு வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டிய ஆதாரங்களை அவர் காட்ட வேண்டும். இதுபோல் தன் மீது வழக்கு தொடரப்படும் என்று அவர் நினைத்துப் பார்க்காததால் அதற்காக வரி கட்டவில்லை. எனவே அந்த ஆதாரங்களை அவரால் காட்ட முடியவில்லை.

இப்படி ஆவணங்கள் சான்றாக நிற்கும் வழக்குகளில் முடிவு இப்படித்தான் இருக்கும்.

நாட்டை ஆண்ட காங்கிரசுக்கு மிக நெருக்கமாக இருந்தும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார். சிறையில் அடைக் கப்பட்டார்.

மத்திய அரசையே ஆட்டிப்படைத்த திமுக தலைவரின் மகள் கனிமொழியும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு அளிக்காமல் விசாரணைக் கைதிகளாக அவர்கள் அடைக்கப்பட்டதை திமுகவால் தடுக்க முடியவில்லை. உடனடியாக ஜாமீனில் கூட கொண்டு வரமுடியவில்லை.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் காரணம் இவர் களுக்கு எதிராக ஆவணங்கள் இருந்தன என்பதுதான்.

இந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டப் படியானதுதான்.

ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்ப்பு அநியாயமானது.

ஜெயலலிதா ஊழல் செய்த போது அந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை சட்டத்தில் இருந்ததோ அதன்படிதான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் உடனடியாக எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளை இழப்பார்கள் என்பதும், அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்ட சட்டமாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்றத்துக்குத் தண்டனை விதிப்பது நீதிக்கு எதிரானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் முன்னர் நடந்த குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டப்படி யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று பிரகடனம் செய்தார்கள்.

இதுதான் சரியான நீதியாகும்.

ஆனால் நம்முடைய நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும், சட்டம் இயற்றுவோருக்கும் இந்த நியாயம் புரியவில்லை.

எதையும் முன் தேதியிட்டு நடை முறைப்படுத்தும் அநியாயத்தை சாதார ணமாகச் சட்டமாக்கி விடுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழலுக்கு அபராதம்தான் தண்டனையாக விதிக்கப்பட்டது. பதவி பறிப்போ தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தண்டனையோ அப்போது இருக்கவில்லை.

அப்படி ஒரு சட்டம் 1990களில் இருந்திருந்தால் ஜெயலலிதா இந்த அளவுக்கு வெளிப்படையாக, தக்க ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்திருக்க மாட்டார். அவர் மீது வழக்கும் வந்திருக்காது.

இந்தியாவில் திருடினால் தலையை வெட்டுவதாக இப்போது ஒரு சட்டம் இயற்றினால் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டுக்கு இத்தண்டனையை அளிப்பது சரியான நீதி இல்லை.

தலை வெட்டப்படும் என்ற சட்டம் அப்போதே இருந்திருந்தால் அவன் திருடாமலே இருந்திருப்பான். ஆறுமாதம் ஜெயிலில் சோறு போடுவார்கள் என்ற சட்டம் காரணமாகவே அவன் திருடினான்.

முன் தேதியிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அநியாயத்தை அநியாயம் என்று உணராத நாட்டில் இதுபோல்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளின்போது மட்டும் இவர்களுக்கு இந்த நியாயம் சரியாகப் புரிகின்றது.

உதாரணமாக தடா, பொடா சட்டங்கள் இந்த நாட்டில் இருந்த போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்தப் பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் பலர் மீது வழக்கு போடப்பட்டது.

பின்னர் இந்தக் கருப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டன. இந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும், மேற்கண்ட சட்டங்கள் அமுலில் இருந்தபோது இந்த வழக்குகள் போடப்பட்டதால் அவை தடா, பொடா சட்டங்களின்படியே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன.

சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்னர் நடந்தவை புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படாது என்று இதற்கு நியாயம் கற்பித்தனர். அதே பார்வை தான் எல்லா சட்டங்களுக்கும் இருக்க வேண்டும். அனேகமாக முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இவர்களே ஒப்புக் கொண்ட நியாயத்தை வழங்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு தாமதமாக தீர்ப்பு அளிக்கலாமா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டினால் இந்த வழக்கு தாமதமானதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சிலர் பதிலளிக்கின்றனர்.

யார்மீது வழக்கு போட்டாலும் தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக வரும் என்று தெரிந்தால் எப்படியாவது இழுத்தடித்து தீர்ப்பை தள்ளிப்போட முயற்சிப்பது இயல்பானதுதான். யாராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள்.

அவர் தள்ளிப்போடுவதற்காக சட்டப்படியான முயற்சிகளைத்தான் செய்தார். சட்டம் சரியில்லாததால் தான் அவரால் இழுத்தடிக்க முடிந்தது. அவர் இழுத்தடிக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என்று நீதிபதியால் உத்தரவிட முடியாத அளவுக்கு சட்டம் பலவீனமாக உள்ளது.

காலண்டரைப் பார்த்து விட்டு எந்த ஊரிலாவது கருப்பனசாமி கோவில் திருவிழா என்று போடப்பட்டு இருந்தால், அந்த விழாவிற்க்கு என் கட்சிக்காரர் செல்ல வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர்களால் வாய்தா வாங்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு எந்தக் காரணமும் சொல்லக் கூடாது என்று சட்டம் இயற்ற வக்கில்லாமல் இருக்கும்போது அதை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்தவே செய்வார்கள்.

தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க, அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி கருணாநிதி நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் முட்டாள்களாக ஆக்கவில்லையா? அதுபோல்தான் இதுவும்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்வோர் இலட்சக்கணக்கில் ஊழல் செய்த கருணாநிதி குடும்பத்தை வெளியில் விட்டு விட்டு ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? என்று கேட்கின்றனர்.

கருணாநிதி, ஜெயலலிதாவை விட பன்மடங்கு ஊழல் செய்தவர் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

எம்ஜிஆரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரமும் கருணாநிதி செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்று சர்க்காரியா கமிஷன் அமைக்க வைத்தனர்.

கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சர்க்காரியா அறிக்கை கொடுத்த பிறகு இந்திரா காந்தியின் காங்கிரசுக்கு அதிக சீட்களைக் கொடுத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறி காலில் விழுந்து, சட்ட நடவடிக்கையில் இருந்து கருணாநிதி தன்னைக் காத்துக் கொண்டார்.

மேலும் எந்த வழக்காக இருந்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொள்ள எல்லாவிதமான இழிநிலைக்கும் சென்று தன்னைக் காத்துக் கொள்வார்.

எனவே சட்டப்படி கருணாநிதி ஊழலுக்காகத் தண்டிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி தண்டிக்கப்பட்ட வழக்கை, தண்டிக்கப்படாத வழக்குடன் இணைத்துப் பேச முடியாது.

2ஜி வழக்கில்தான் கருணாநிதி குடும்பத்தில் பலர் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அது தீர்ப்பு வந்த பின்னர்தான் உறுதியாகத் தெரியும்.

இப்போது ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சரியான முறையில் கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்கு நடத்தி இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இது போன்ற தீர்ப்பை கருணாநிதிக்கும் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் அவர் யாருடைய யோசனையையும் கேட்பதில்லை.

அதிமுகவினர் இந்தத் தீர்ப் புக்கு எதிராக கடையடைப்பு வன் முறைகளில் இறங்குவதை ஏற்க முடியாது. பாபர் மஸ்ஜித் வழக்கில் மூன்று கிறுக்கன்கள் நீதிபதிகளாக அமர்ந்து நீதியைக் குழி தோண்டிப் புதைத்தது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு அளித்து இருந்தால் அவர்களின் கண்டனத்தில் நியாயம் இருக்கும். இப்போது இதைக் கண்டிப்பதில் நியாயம் இல்லை. அவர்கள் சட்டப்படி இதற்கு எதிராகப் போராடலாம்.

தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் ஜெயலலிதாமீது அனுதாபம் அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது. அதிமுகவினர் பொதுமக்களுக்கு அளிக் கும் இடையூறுகள் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்.

நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் அவரது தீர்ப்பில் சந்தேகம் கொள்ள சில அம்சங்கள் உள்ளதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும்.

சஹாரா குழுமத்தின் நிறுவனர், மக்களிடம் நிதி திரட்டி மோசடி செய்துள்ளார் என்ற வழக்கில்இ அவரைக் கைது செய்தனர். ஆனால் மக்களிடம் நிதியைத் திருப்பித் தர வசதியாக, அவரது லண்டன் சொத்துக்களை சிறையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விற்க நீதிமன்றம் அனுமதித்தது.

வீடியோ கான்பரன்ஸி வசதிகள் செய்யப்பட்டு புருனை சுல்தானுக்கு லண்டன் அரண்மனை, விலை பேசப்பட்டது. மக்களின் பணத்தைத் திருப்பித்தர இதை விட்டால் வழி இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜெயலலிதா அவர்கள் சாதாரண குடிமகள் அல்ல. அவர் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்ற மாநில முதல்வர் ஆவார். அவரது பதவியைப் பறித்தால் மிகப்பெரும் மாநில நிர்வாகத்தில் வெற்றிடம் ஏற்படும். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும். அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும்வரை யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற குழப்பம் வரும் என்ற பொது அறிவு நீதிபதி குன்ஹாவுக்கு இல்லை என்றுதான் தெரிகிறது.

பொது அறிவுள்ள நீதிபதி என்றால் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஜெயலலிதா அவர்கள் குற்றவாளி என்ற தீர்ப்பை மட்டும் அளித்து விட்டு அவர் மாற்று அரசுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் அளித்து பின்னர் தண்டனையை அறிவித்து இருக்கலாம்.

அல்லது உடனே சிறையில் அடைப்பது என்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் அமைச்சர்களுடன் உரையாட சிறையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருந்தால் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டு இருக்காது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் வந்திருக்காது.

சஹாரா குழுமத்தின் நிதிப் பிரச்சனையைவிட ஒரு மாநில நிர்வாகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் ஒரு நீதிபதிக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவும் எடுக்க மாட்டார்கள் எடுக்க முடியாது என்பது உலகத்துக்கே தெரியும். இந்த பொது அறிவு கூடவா ஒரு நீதிபதிக்கு இல்லாமல் போய்விட்டது?

முதல்வர் பதவி காலியானால் மாற்று ஏற்பாடு செய்யும்வரை கவர்னரின் நிர்வாகத்தில் மாநிலம் இயங்கும் என்றாவது அவர் சொல்லி இருக்கலாம்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்று வரும் போது நீதிமன்றங்கள் அடங்கிப் போயுள்ளன. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொல்லியும் அதற்குக் கட்டுப்பட மறுக்கும் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதுதான் காரணம்.

அந்தக் காராணம் தமிழக நிர்வாகத்துக்கு ஏன் பொருந்தவில்லை என்ற கேள்விக்கும் பதில் இல்லை

இன்னொரு முக்கியமான விஷயத் தையும் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பதை ஜெயலலிதா அவர்கள் முன்னரே அறிந்து கொள்ளவில்லை என்று ஊகிக்க முடிகின்றது. அதனால் தான் அவர் மாற்று ஏற்பாடு குறித்து முன்னரே முடிவு எடுக்கவில்லை.

ஜோசியக்காரன் சொன்னதை வைத்து தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தாரா?

வழக்கறிஞர்கள் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்களா?

உளவுத்துறை இதை உணரத் தவறிவிட்டதா?

எதுவாக இருந்தாலும் ஜெயலலிதா அவர்கள் தகுதியானவர்களிடம் யோசனை கேட்பதில்லை என்பது தான் அடிப்படைக் காரணம். இதை ஜெயலலிதா எதிர்காலத்திலாவது மாற்றிக் கொள்ள வேண்டும்
 
நன்றி : உணர்வு கேள்வி பதில்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.