Monday, October 06, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-5) - இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை!

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பித்து விட்டனர். 'அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:30

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:78, 79

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:9

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:35

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.