Saturday, October 25, 2014

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-7) - காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன்  வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலி ருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 3:123,124,125

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:11

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5:67

ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

திருக்குர்ஆன் 7:64

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். 

திருக்குர்ஆன் 8:9,10,11

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

திருக்குர்ஆன் 8:26

(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

திருக்குர்ஆன் 8:62

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

திருக்குர்ஆன் 10:103

நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 11:58

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

திருக்குர்ஆன் 11:66

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

திருக்குர்ஆன் 11:94

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

திருக்குர்ஆன் 21:68,69,70,71

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.


திருக்குர்ஆன் 26:63,64,65,66

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.