Sunday, October 12, 2014

அரஃபா நோன்பு பிறை ஒன்பதிலா? அல்லது ஹாஜிகள் கூடும் நாளிலா?

மாதத்தின் ஆரம்பத்தையும் இறுதியையும் பிறை தென்படுவதை வைத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது. பிறை பார்த்து மாதத்தை முடிவெடுக்க வேண்டும் என்பதை பொதுவாக பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். ரமழான், ஷவ்வால், துல்கஃதா போன்ற எந்த மாதமாக இருந்தாலும் பிறை அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படுகின்றது.

ஆனால் துல்ஹஜ் மாதம் மாத்திரம் அரபா நோன்பை வைத்து அதாவது ஸவுதியில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் ஹாஜிகள் எப்போது அரபா திடலில் ஒன்று சேர்வார்களோ அத்தினத்தில் ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.

இந்தக் கருத்துடையோர் தங்களை சர்வதேசப் பிறைவாதிகளாக அடையாளம் காட்டிக் கொள்கின்றார்கள்.

உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் ரமழானை தீர்மானிக்கும் போது எந்த நாட்டில் பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லும் சர்வதேசப் பிறைவாதிகள் துல்ஹஜ் பிறை விஷயத்தில் சவுதிப் பிறையை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் இவர்கள் பின்பற்றுவது சர்வதேசப் பிறையல்ல சவுதிப் பிறை என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.

சுபுஹ் தொழுத பின் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.

இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?' என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு 'அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் '(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்' அல்லது 'அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், 'இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்க, 'இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், 'ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்' என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், 'ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்' என்று கூறினார்கள். பிறகு, 'மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் (2151)

தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் இருக்கும் போதுஇ அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.

சவூதியின் பிறைக் கணக்குப்படி 9 ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிறை 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்? எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம்.

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், ஆனால் சர்வதேசப் பிறைவாதிகளின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது.

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.

அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.

அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

மாதத்தை அடைதல்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோஇ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

(திருக்குர்ஆன் : 2:185)

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது.

திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது. தேவையில்லாத ஒரு எழுத்துக் கூட அதில் இடம் பெறாது என்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை.

ஃபமன் ஷஹித மின்கும் அல் ஷஹ்ர – உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

(திருக்குர்ஆன் : 2:184)

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது.

எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

இந்த நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் பொய் சொல்லாதவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும்.

இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய வேண்டும்.

அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று கூற முடியாது. ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவனைப் பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவனை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது.

உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள்.

நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத் தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா?

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள்.

அதாவது உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? அறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது

மக்காவிலும்இ மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.

தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபாவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?
ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?

உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.


மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.

ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் திகதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் திகதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள்.

ஆனால் ஜனவரி முதல் திகதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள்.

இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.

நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் – அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?

இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.

தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.

நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.

சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.

இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும். 
 நன்றி : rasminmisc

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.