Wednesday, October 22, 2014

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! - அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியின் நாடகம்!!


புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும் ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். ஹதீஸ்கள் பல அறிஞர்களால் தொகுக்கப்பபட்டு, அவை பல்வேறு கிரந்தங்களாக உள்ளது. புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ என பல்வேறு கிரந்தங்கள் உள்ளன. அவற்றில் பல தற்போது தமிழ் மொழியிலும் வந்துள்ளன.

ஒரு முஸ்லிம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஏற்று அதனை தமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தத்தை மட்டும் தூக்கிபிடிப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

நமது ஊர் ஜாவியா பள்ளிவாசலில் வருடா வருடம் புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் புகாரி ஹதீஸ் தொகுப்பில் உள்ள சில ஹதீஸ்களை மக்களுக்கு விளக்குகிறோம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத வகையில் விளக்குவார்கள். இவர்கள் நடத்தும் பயானில் எல்லா ஹதீஸ் கிரந்தங்களிலும் உள்ள முக்கியமான ஹதீஸ்களை விளக்கினால் இவர்களை சரி காணலாம். இவர்கள் அவ்வாறு செய்யாமல், புகாரி என்ற ஒரு கிரந்தத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறார்கள். சரி, அதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இருந்து எடுத்துவைக்கும் ஹதீஸ்களை பார்த்தால் புரியும்.

புகாரி ஹதீஸ் தொகுப்பில் புகாரி மஜ்லிசை நடத்துபவர்களுக்கு எதிராக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை இவர்கள் வேண்டுமென்றே மக்களுக்கு விளக்காமல் தவிர்க்கிறார்கள்.

மேலும், நமது ஊரில் புகாரி மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு காலாரா நோய் ஓடிவிட்டது என்ற ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி வருகிறார்கள்.

ஒருவருக்கு நோயை தருவதும் அல்லாஹ்,நோயை அகற்றுவதும் அல்லாஹ் என்று ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். நோய் நல்லவர்களுக்கும் வரும் தீயவர்களுக்கும் வரும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் காலரா நோய் நுழையாது என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். புகாரி ஹதீஸ் மஜ்லிஸ் நடத்தினால் காலரா வராது என்று எந்த ஹதீஸூம் இல்லை. இவர்களின் இந்த கப்சாவை நாம் நம்பினால், இன்று பெரும்பாலான ஊர்களில் காலரா நோய் வருவது இல்லை, எனவே அங்கு எல்லாம் புகாரி மஜ்லிஸ் நடத்தினார்களா? என்று கேட்க வேண்டிவரும்.

மேலும், நமது ஊரில் நடக்கும் புகாரி மஜ்லிஸில் தப்ரூக் என்று நார்சா வழங்கப்படுகிறது. இவற்றை மக்கள் தங்களது செலவில் கொடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் நேர்சையாக தான் தப்ரூக் வழங்குகிறார்கள். தங்களது நேர்ச்சைகளில் சேவல், கோழி போன்றவற்றையும் மக்கள் வழங்குகிறார்கள். அல்லாஹ் அல்லாதவர்களின் மீது நேர்ச்சை செய்வது இணை வைப்பாகும். நேர்ச்சையினால் தப்ரூக் என்ற நார்சா வழங்குபவர்களும் சேவல் கோழி போன்றவற்றை வழங்குபவர்களும் அல்லாஹ்விற்கு தான் நேர்ச்சை செய்து வழங்கிறார்களா? என்பது கேள்விக்குறியே!

கீழ்காணும் ஹதீஸ் நேர்ச்சை செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள்.

புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா எனக் கேட்டார்கள். இல்லை என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும் தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத்

குர்ஆன் ஹதீஸ்களுக்கு நேர் முரணாக புகாரி மஜ்லிசை நடத்துத்துபவர்கள் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்) போற்றி புகழும் அறிஞர்களின் கருத்துகள் இருந்தாலும், அவற்றை தூக்கிவிசி விட்டு, குர்ஆன் ஹதீஸின் கருத்துகளை இவர்கள் ஏற்பார்களா? என்றால் இல்லை என்பதை தான் இவர்களின் செயல் நிருபித்து வருகிறார்கள்.

இவர்கள் புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் உள்ள ஹதீஸ்களையாவது தங்களின் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்களா? என்றால் அதுவும் இல்லை என்பதை புகாரி ஹதீஸ் தொகுப்பில் இடம்பெறும் கீழ்காணும் ஹதீஸ்களை படித்தால் புரியும். நாம் யாரை குறிப்பிட்டு இந்த வாதத்தை வைக்கிறோம் என்றால்  பொதுமக்களை பார்த்து அல்ல. புகாரி மஜ்லிசை நடத்துபவர்களையும் அதில் சொற்பொழிவாற்றுபவர்களையும் நோக்கி தான் நமது கேள்விகள்!

குறிப்பு: இவர்களிடம் உள்ள வழிகேட்டை நிரூபிக்க குர்ஆனிலும் புகாரி உள்பட மற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் இங்கே அடுக்கவில்லை. காரணம், புகாரி ஹதீஸ் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழச்சி நடத்துவதால், புகாரியில் உள்ள ஹதீஸ்களையாவது செயல்படுத்துங்களேன் என்று கேட்பதற்காகவும், இவர்களுக்கு எதிராக புகாரியில் உள்ள ஹதீஸ்களை இவர்கள் மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவும் தான் இந்த ஆக்கம்.

இணைவைப்பு என்ற ஒரு கொடிய பாவம்:

இணைவைப்பு என்பது கொடிய பாவம். தர்ஹாவில் அவ்லியாக்களிடம் கேட்பது இணைவைப்பு என்று என்றைக்காவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா? அடக்கஸ்தலங்களை வணங்கும் இடமாக ஆக்க கூடாது என்றும், அடக்கஸதலங்களை வணக்க தளங்களாக மாற்றிய யூத நஸராக்களின் மீது சாபம் உண்டாவது போல், கப்ரை வணங்கபவர்கள் மீதும் உண்டாகும் என்று என்றாவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக்கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 1330

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், 'அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ' (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918

ஆயிரம் முறை அழைத்தால், அப்துல் காதர் ஜெய்லானி நேரில் வந்து ஆஜர் ஆவார் (சம்மன் இல்லாமல்) என்று மக்களை வழிகேடுப்பவர்களே? என்று நீங்கள் திருந்த போகிறீர்கள். 

நபி (ஸல்) அவர்களை கூட வரம்பு மீறி புகழக்கூடாது!

நபி (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறி புகழக்கூடாது என்று சொன்ன ஹதீஸ் புகாரி தொகுப்பில் இருந்தபோதும், நபி (ஸல்) அவர்களை பாவங்களை மன்னிக்க கூடியவரே என்றும், துன்பங்களை அகற்ற கூடியவரே என்றும் மௌலுது பாடல்களை பாடி, இந்த ஹதீசை புறம் தள்ளுவது சரியா?

'கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்' என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி
நூல்: புகாரி 3445, 6830

பித்அத் (நூதனம் - மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) நிராகரிக்கப்படும்:

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனைத்தும் வழிகேடு, அது நரகில் சேர்க்கும் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது.

இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை மறைத்து, கூட்டு துஆ, திருமணத்தில் அல்லிகு பயனகூகுமா என்ற துஆ, 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹா, புரியாம் பாத்திஹா, ஸலாத்துன் நாரியா, மிராஜ் நோன்பு, பராஆத் நோன்பு என ஆயிராக்கணக்கான பித்அத்தை புகாரி மஜ்லிசை நடத்துபவர்கள் தடுக்காமல், அதை செய்யபவர்களாகவே இருக்கிறார்களே? பொதி சுமக்கும் கழுதைகள் என்று குர்ஆன் கூறுவது இவர்களை தானே?

'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),
நூல்கள்: புகாரி 2697

தொழுகைக்கு நபி (ஸல்) அவர்களே முன்மாதிரி:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எவ்வாறு ஒவ்வோரு செயலையும் செய்தார்கள் என்று தெளிவாக ஹதீஸ்கள் இருக்க, ஷாபி சொன்னார், ஹனஃபி சொன்னார் என்று நபி (ஸல்) அவர்களின் ஹதீசை புறம்தள்ளி, ஷாபி, ஹனஃபி போன்ற மனிதர்களின் சொல்லை இறைவாக்காக நினைத்து, அதை தொழுகையில் செய்வது சரியா?

'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' எனக் கூறி அனுப்பினார்கள்.

நூல்: புகாரி 631, 6008, 7246

நேர்ச்சை யாருக்கு?

பல அரியாத மக்கள் அவ்லியாக்கள் எனப்படுவோரின் பெயரால் நேர்ச்சை செய்கிறார்கள். புகாரிலேயே அல்லாஹ்விற்கு மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் நேர்ச்சை செய்யக்கூடாது என்றும் ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கி சொல்லக் கேட்டுயிருக்கிறீர்களா? புகாரி மஜ்லிஸிற்கு வரும் கோழிகளில் பல அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்யப்பட்டது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவுசெய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ,அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

தராவீஹ் தொழுகை உண்டா?

தராவீஹ் என்ற ஒரு தொழுகை கிடையாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இதையும் நாம் மதிக்கும் ஆலிம்கள் (?) புகாரி மஜ்லிஸில் விளக்கவில்லை.

'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 1147, 2013, 3569

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கக்கூடாது!

பெண்கள் பள்ளக்கு வருவதை தடுக்கககூடாது என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை எழுதச்சொல்லும், மத்ஹபு குப்பைகளை தூக்கபிடிக்கும் ஹைதர் அலி ஆலிம்சா (?) அவர்கள் இந்த ஹதீசை என்றாவது படித்துயிருப்பாரா?

"பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 900, 873, 5238)

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: புகாரி 865, 899)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

(நூல்: புகாரி 578, 372, 867, 872)

பெற்றோரின் நேர்ச்சையை பிள்ளைகள் நிறைவேற்றுவது:

ஒருவர் மரணித்துவிட்டால், மரணம் அடைந்த வீட்டில் சோகம் குறைவதற்கு முன், எங்களுக்கு சோறு போடு என்று பிச்சை கேட்கும் ஆலிம்சாக்களே! நீங்கள் இஸ்லாத்தையா? பின்பற்றுகிறீர்கள்? நபி (ஸல்) மரணம் அடைந்தவரின் வீ ட்டிலுள்ளவர்கள், சோகத்தில் இருப்பார்கள். எனவே, அண்டைவீட்டார்கள் அவர்களுக்கு சமைத்து கொடுங்கள் என்று சொன்ன ஹதீசை கேள்விபட்டுயிருக்கிறீர்களா? நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றினால் தானே, எங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று  நீங்கள் (ஆலிம்சாக்கள்) நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரி தான், உங்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாது தான், இருந்தாலும் சில அப்பாவிகள், நீங்கள் தான் இஸ்லாத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்று நினைக்கிறார்களே!

சரி, இஸ்லாத்தில் இல்லாத 3ஆம் பாத்திஹா, 7ஆம் பாத்திஹா, 40 ஆம் பாத்திஹாவை செயல்படுத்தும், புகாரி மஜ்லிஸினர், பெற்றோர்கள் ஏதேனும் நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டால், அதை அவர்களின் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கீழ்காணும் ஹதீசை என்றாவது புகாரி மஜ்லிஸில் விளக்கியிருக்கிறார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953

இஸ்லாத்தில் துறவறம் இல்லை:

கீழ்காணும் ஹதீசை எடுத்துக்காட்டி, 4 மாதம், ஒரு வருடம் என குடும்பத்தை கவனிக்காமல், பெட்டியை தூக்கும் தப்லீக்வாதிகளுக்கு அது தவறு என்று விளக்கியது உண்டா?

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்:

பெண்களின் சம்மதம் இல்லாமல் நமதூரில் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன. இதனால், திருமணம் நடந்த பின், சிறிது காலத்திலேயே எத்தனை விவாகரத்துகள் நடக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி, கன்னிப்பெண்ணாக இருந்தாலும், விதவை பெண்ணாக இருந்தாலும், தனக்கு தேர்வு செய்யப்படும் மணமகனை தனக்கு பிடித்துயிருக்கிறதா? என்ற சம்மத்தை பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்று புகாரி மஜ்லிஸினர் என்றாவது கூற கேட்டது உண்டா?

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969

திருமண விருந்தை (வலிமா) மணமகனே கொடுக்க வேண்டும்:

திருமணத்தில் மணமகளின் வீட்டினரிடம் வண்டி வண்டியாக சாப்பாடு வாங்கிறார்கள் நமதூரில். கீழ்காணும் ஹதீஸ் மணமகன் தான் வலிமா கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா? நமது கண்ணியமிக்க ஆலிம்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நல்ல காலம் கெட்ட காலம் இல்லை:

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கும் பழக்கம் இன்று தவ்ஹீத் எழுச்சியால் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இன்றும் சிலர் நல்ல காலம் கெட்ட காலம் பார்க்க தான் செய்கிறார்கள். வேதனை என்னவெனில், நல்ல காலம் கெட்ட காலத்தை பார்த்து கொடுப்பதே ஆலிம்கள் என்ற கல்ல பேர்வழிகள் தான். கீழ்காணும் ஹதீஸ்கள் என்றாவது விளக்கப்பட்டு இருக்குமா?

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

திருமணத்தில் ஒதப்பட வேண்டிய துஆ என்ன?

திருமணத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அல்லிகு பயனகுமா என்று ஆரம்பாமாகும் ஒரு துஆவை நமது கண்ணியமிக்க (?) ஆலிம்கள் ஒதிவருகிறார்கள். அந்த துஆவில் பல நபிமார்களுக்கு மனைவியாக குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படாதவர்களை இவர்களே மனைவியாக கற்பனை செய்து சொல்லுகிறார்கள் (உதாரணத்திற்கு, யூசுஃ நபியின் மனைவியாக சுலைஹா என்ற பெண்னை). பித்அத்தை சப்பை செய்த இவர்கள், திருமணத்தில் மணமக்களுக்காக ஒத வேண்டிய துஆவை என்றாவது விளக்கியிருக்கிறார்களா?

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

புகாரி 5155, 6386

சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லுவதை வழக்கமாக கொண்ட நபி (ஸல்) அவர்கள்:

நமது ஊரில் ஆலிம்கள் எனப்படுவோர் சிலர், நாம் ஸலாம் சொன்னால் கூட. சரியான முறையில் பதில் அளிப்பது இல்லை. காரணம், அகம்பாவம். ஆனால், நபி (ஸல்) சிறுவர்களுக்கு கூட ஸலாம் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஹதீஸ் விளக்கப்பட்டுள்ளதா?

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல் : புகாரி (6247)


ஸஹருக்காக பாங்கு:

கீழே உள்ள ஹதீசை படித்தால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆம், கீழ்காணும் ஹதீசை வைத்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுகிறது. இதை எதிர்க்காத ஆள் இல்லை. தப்லிக் ஜமாஅத்தினர், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர், உலக பிறை நேசர்கள். கள்ள தவ்ஹீத் இயக்கங்கள், தடம்புரண்ட ஜாக், அரசியிலில் போய் நாறிப்போனவர்கள், வரதட்சனை திருமணத்தில் மூக்குபிடிக்க திண்றுவிட்டு தவ்ஹீத் பேசும் உத்தம புத்திரர்கள், நாள்தோறும் இணைவைப்பு காரியங்களை அரங்கேற்றும் இயக்கத்தில் இருந்து கொண்டு அவர்களை தவ்ஹீத் என்று பொய் சாட்சியம் கூறும் பழைய தவ்ஹீத்வாதிகள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கீழ்காணும் ஹதீஸின் அடிப்படையில் ஸஹர் பாங்கு சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் எந்த அளவுக்கு குர்ஆன் ஹதீஸூக்கு முக்கியத்துவம் தருகிறது என்று விளங்கும்

இந்த ஹதீசை புகாரி மஜ்லிஸில் கண்டது உண்டா? கேட்டது உண்டா?

'(ரமலானில் விடிவதற்கு முன்) இரவிலே பிலால் பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள். பருகுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 617

சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு திறக்க வேண்டும்:

சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறங்கள் என்று தவ்ஹீத் பள்ளியில் பாங்கு சொன்னால், பள்ளியை கொளுத்துவோம் என்கிறார்கள். ஆனால், புகாரியிலேயே அவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது. இப்போ, யார் ஹதீசை பின்பற்றுகிறார்கள்? சுன்னத் வல் ஜமாஅத் என்போர் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று இது காட்டவில்லையா?

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957

இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1954


வலியுறுத்தப்பட்ட சுன்னத் தாடி!

தாடி வைப்பதின் முக்கியத்துவத்தை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு காட்டுகிறது. ஆனால், நமது குட்டி முல்லாக்கள் இந்த ஹதீஸ்களை மக்களுக்கு காட்டாமல், மார்க்கத்தில் இல்லாத தொப்பி அணியாமல் பள்ளிக்கு வந்தால், விட மாட்டேம் என்று அப்பாவிகளை எழுதி போட வைத்தது யார்? இந்த கண்ணியமிக்க உலமாக்கள் தானே?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்போருக்கு மாறு செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை கத்தரியுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில் ஒற்றை படையில் வரும்:

லைலத்துல் கத்ர் ரமலானில் கடைசி பத்தில், ஒற்றை படையில் தான் வரும் என்கிறது கீழ்காணும் ஹதீஸ் (புகாரியில் உள்ளது). ஆனால், நமதூரில் உள்ள ஆலிம்களுக்கு மட்டும் தனியாக வஹி வந்ததோ என்னவோ தெரியவில்லை. 27ஆம் இரவு மட்டும் லைலத்துல் கத்ர் வரும் என்ற நினைப்பில், தமாம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நீண்ட துஆ என்ற பெயரில் குர்ஆன் வசனங்களை ஒதி, பெரிய துஆ ஓதுகிறோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த ஹதீசை விளக்குவது எப்போது?

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017, 2020

27 ஆம் இரவு, 28 ஆம் இரவு, 29 ஆம் இரவுகளில் தமாம் என்ற பெயரில் மல்லிக்கை பூ தோரணம் கட்ட புகாரியில் எதேனும் ஹதீஸ் உள்ளதா? 

மாதவிடாய் பெண்கள் உள்பட அனைவரும் பெருநாள் தினத்தில் மைதானத்திற்கு வரவேண்டும்!

பெருநாள் தொழுகையை மைதானத்தில் தான் தொழ வேண்டும் என்று கீழ்காணும் ஹதீஸ் சொல்லுகிறது. இது புகாரியில் தான் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீசை என்றாவது விளக்கியிருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 971

மேலே சொல்லப்பட்ட ஹதீஸ்களை படித்தால், இரு உண்மைகள் புரியும். ஒன்று, சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களின் சுன்னத் பின்பற்றுவர்கள் அல்ல என்பது. இரண்டு, குழப்பவாதிகள் என்று அவப்பெயர் சூட்டப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளை எத்தகைய தடையையும் மீறி பின்பற்றுகிறார்கள் என்று.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ்களுக்கு, அதை இப்படி புரியக்கூடாது என்று அப்படி தான் புரிய வேண்டும் என்று கண்ணியமிக்க ஆலிம்களோ அல்லது அவர்களுக்கு கூஜா தூக்கபவர்களோ  கூறினால், தவ்ஹீத் ஜமாஅத்துடன் இது சம்பந்தமாக விவாதிக்க வரும்படி அழைக்கிறோம். விவாதத்தில் உங்கள் வண்டவாலங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும், இன்ஷா அல்லாஹ் (ஏற்கனவே, பல முறை தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்).

நாம் குறிப்பிட்டுள்ள போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரை ஆதரிக்கும் அக்மார்க்(?) தவ்ஹீத்வாதிகளும் சிந்திக்க வேண்டும்.

இறுதியாக, புகாரி மஜ்லிசை முன்னின்று நடத்தும் கேரளத்து ஆலிம்சா எந்த அளவுக்கு நபி வழியை பின்பற்றுகிறார் என்பதையும் சேர்த்து விளக்க வேண்டியுள்ளது.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து கூட நிற்க கூடாது என்றார்கள். பல நேரங்களில், நபி (ஸல்) அவர்களை முதல் முறையாக பார்க்க வந்த பலர், யார் முஹம்மது என்று கேட்கும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். ஆனால், கேரளத்துகாரர் தான் ஜூம்ஆ தொழ செல்லும் போது, மார்க்கம் தெரியாத அப்பாவி மாணவர்களை தனக்காக குடைபிடித்து வர செய்கிறார். இரண்டு மூன்று மாணவர்கள் கேரளத்துகாரரை குடைக்குள் வாரம் வாரம் ஜூம்ஆ தொழ அழைத்து வருகிறார்கள் . எதற்கு குடை பிடிக்கணும், வார வாரம் நமது ஊரில் மழை பெய்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். அந்த குடை மழைக்காக அல்ல, வெயில்பட்டால் கறுத்து போய்விடுவார் அல்லவா? அதற்காகத்தான் குடை. மேலும், கேளரத்துகாரர், தொழும் பள்ளிக்கு சென்று, அவர் செருப்பை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தொழுக சொல்லும் போது செருப்பு மேற்கு திசையை நோக்கி கழட்டப்பட்டு இருக்கும், தொழுது முடித்த பிறகு அதே செருப்பு கிழக்கு திசையை நோக்கி திரும்பி இருக்கும். எப்படிங்க இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று நீங்கள் கேட்கலாம். இது அதிசயமும் இல்லை அற்புதமும் இல்லை. அந்த கேரளத்து மார்க்க அறிஞருக்காக (?) அவரின் மாணவர்கள் செய்யும் சேவை. எந்த அளவுக்கு நபிவழியை பின்பற்றுகிறார் பார்த்தீர்களா?

முதலில் வருபவருக்கு தான் பள்ளியில் முதல் வரிசையில் இடம். ஆனால், கேளரத்துகாரர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து முதல் சஃபில் (வரிசையில்) இடம் பிடித்துவிடுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அமர்ந்து இருப்பவரை எழுப்பி விட்டு, அந்த இடத்தில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 626

எந்த ஒரு சபையிலும் ஒருவரை எழுப்பிவிட்டு அமர கூடாது என்கிறது மேல் உள்ள புகாரி ஹதீஸ். கேரளத்துக்காரர் குர்ஆன் ஹதீசை பின்பற்றவில்லை என்று புரிகிறதா? இன்னும் இல்லை என்றால் உங்களுக்கு ஏதே பிரச்சினை இருக்கிறது.

இந்த புகாரி மஜ்லிஸில் நடைபெறும் பள்ளியில் அஹ், அஹ் என்று திக்ரு செய்வதற்கு எதோனும் ஹதீஸ்கள் புகாரி உண்டா? சத்தம் போட்டு திக்ரு செய்வதற்கும், ஆடி கொண்டு திக்ரு செய்வதற்கும் ஏதோனும் ஹதீஸ்கள் புகாரியில் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்.

பக்கசார்பு இல்லாமல் நாம் எடுத்து வைத்துள்ள வாதங்களை பார்த்தால், தவ்ஹீத் ஜமாஅத் தான் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் என்பதும். சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள் சுன்னாவை பின்பற்றுபவர்கள் அல்ல என்பதும் தெளிவாகும்.

எனவே, முன்னோர்கள் சொன்னார்கள், மூதாட்டிகள் சொன்னார்கள் என்ற மாயையை விட்டுவிட்டு, குர்ஆன் ஹதீசை மட்டும் பின்பற்றி, மறுமையில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவர்கள் நடத்தும் புகாரி மஜ்லிஸ் என்பது வயிறு நிரப்ப தான் என்பதை மேலே உள்ள ஹதீஸ்களை படித்தால் விளங்கும்.

"அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

                                                                                      அல்குர்ஆன் 2:170

7 கருத்துரைகள் :

என்னதான் இப்பொழுதும் அவர்கள் புஹாரி மஜ்லிசை நடத்தினாலும் அல்லாஹ்வின் பேரருளாலும் தவ்ஹீத் எழுச்சியாலும் அங்கே கூட்டம் மிகவும் குறைந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்னைக்கு ஒரு ஆளூக்கு இரண்டு நாற்சா.

நல்ல ஆக்கம். இந்த ஆலிம்சாக்களை நம்புபவர்கள் சிந்திக்க வேண்டும்.

புகாரி ஷரீப் ஆரம்பித்த பின்பு கலாரா நோய் ஓடிவிட்டதாக சொல்லுகிறார்கள். அப்படியானால், நமது ஊரில் இப்பேது டேங்கு காய்ச்சல் மக்களை வதைத்து எடுக்கிறது. மருத்துவமனைகளில் எந்நோரமும் மக்கள் கூட்டம். புகாரி மஜ்லிலிஸின் சிறப்பால் டேங்கு காய்ச்சால் போகாதா? கதை விடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

இப்படி மஜ்லிஸிஸ் நடத்தி மக்களை ஏமாற்றாமல், சகோதரர்கள் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ்களை பயான் செய்யும் ஆலிம்சாக்கள் முதலில் கடைபிடிக்க முன்வர வேண்டும்.

புகாரி மஜ்லிஸிற்கு இப்போது கூட்டம் பெரும்மாளவில் குறைந்துவிட்டது உண்மையே. பெட்டலைத்தை நிறுத்தினால், பயான் செய்பவர் கூட வருவாரா என்பது சந்தேகமே.

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். மிக தெளிவான கட்டுரை. புஹாரி மஜ்லிஸ் என்பதெல்லாம் எனக்கு புதிதாக தெரிகின்றது. இவர்களுக்கு இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

சாப்பாடு போட்டலம் இல்லை என்றால் யார் செல்லுவார்கள், சாப்பாடு இல்லாமல் 10 நாள்களுக்கு நடத்திப்பார்க்கட்டும் பிறகு தெரியும்
நபி (ஸல்) அவர்கள் ஒரு சபைக்கு வந்தால் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அனுமதிக்கமாட்டார்கள் இவர்கள் நடத்தும் புகாரி சரீப்பை பாத்தியா ஓதி முடித்து வைப்பவர் என்றைக்காவது அவரின் சாப்பாட்டு பையை எடுத்துச்சென்று இருக்கிறாரா? அல்லது அவரின் செறுப்பை எடுத்துப்பாதுகாப்பவரையும், அவருக்கு குடை பிடிப்பவரையும் என்றைக்காவது தடுத்து இருக்கிறாரா சிந்தியுங்கள் மக்களே

இனை வைப்பு போன்ற பெரு பாவங்களை செய்பவர்கள் மற்றும் நியாயப்படுத்துபவர்கள் ஒன்று மார்க்கத்தில் இல்லாததை எல்லாம் மார்க்கம் என்று பணம் சம்பதிப்பவர்கள் இல்லை என்றால் அல்லாஹ் பெரு பாவம் என்று எதை எல்லாம் தடுத்து இருக்கிறானே அதை எல்லாம் உதாரணத்தில் (L I C ஏஜென்டாக) தொழில் செய்பவர்களாக தான் இருக்கிறார்கள் இவர்களை தவிர்த்து 80 சதவிதத்திற்கும் அதிகமானவர்கள் இனைவைப்பை பெரும் பாவமாக கருதுகிறார்கள்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.