தேர்தலில்
யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து
பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில்
யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு
வென்றெடுக்க முடியும்?
மசூது, கடையநல்லூர்.
எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள்
தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு
உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம்
எடுத்து வந்தோம்.
ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல
முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம்
என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு உரியது என்று முடிவு எடுக்கப்பட்டது.
உயர்நிலைக் குழுவில் வைக்கப்பட்ட காரணங்களைக் கீழே தருகிறோம்.
முதல் காரணம்
தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் அபிமானிகளாகவும், விசுவாசிகளாகவும் உள்ளனர். நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் இதில் ஓரளவு நாம் வெற்றி பெற்றாலும் முழு வெற்றி பெறவில்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தகையோர் அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
திமுக அல்லது அதிமுக அல்லது ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டுதான் முஸ்லிம்களாக உள்ளனர். நாங்கள் திமுக குடும்பம்; நாங்கள் அதிமுக குடும்பம் என்ற கொள்கை உள்ளவர்களும் உள்ளனர்.
திமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அதிமுக அபிமானிகளாக உள்ளவர்கள் அந்த நன்மையைக் கருத்தில் கொண்டு திமுகவுக்கு வாக்களிப்பதில்லை.
அதிமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அந்த நன்மைக்கு நன்றி செலுத்துவதைவிட திமுக அபிமானிகளுக்கு திமுகவே பெரிதாக தெரிகின்றது. அதிமுகவுக்கு வாக்களிக்க அவர்களின் மனம் இடம் கொடுப்பதில்லை.
நியாயமான கோரிக்கைக்காக நாம் எடுக்கும் முடிவைக் கூட அனைவரும் ஏற்கும் நிலை எப்போதும் இருந்ததில்லை.
கோவை குண்டுவெடிப்புக்குப் பின் நடந்த தேர்தலில் எந்த முஸ்லிமும் திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றபோதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
மேலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததற்காக அறவே திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றாலும் அப்போதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் பார்க்க முடிந்தது.
மார்க்க சம்மந்தமான விஷயங்களை நாம் சொல்லும்போது குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் உள்ளதால் அதை ஏற்கும் அளவுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மக்கள் ஏற்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.
அனைவரும் இல்லாவிட்டாலும் 80 சதவிகிதமாவது ஏற்று வாக்களித்தால்தான் அதை வைத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். அந்த நிலை இல்லை எனும்போது நாம் எதற்காக கருத்து சொல்ல வேண்டும்?
இந்தக் காரணம் உயர்நிலைக் குழு உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டது.
இரண்டாவது காரணம்
நமது முடிவை நாமே எடுக்கும்போது உறுதியான ஒருமுடிவை எடுக்க முடியும். ஆனால் பெரிய கட்சிகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்த்து முடிவு எடுக்கும்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தார்கள் என்பதற்காக நாம் அதிமுக ஆதரவு நிலை எடுத்தோம். அதில் உறுதியாக நிற்க முடியாத அளவுக்கு அதிமுகவின் செயல்பாடு அமைந்து விட்டது.
அதிமுக, பாஜகவை விமர்சிக்க வில்லை என்ற நிலையிலும் நாம் ஆதரவு நிலையைத் தொடர்ந்தால் பெட்டி வாங்கிவிட்டார்கள் என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படும். அதை மக்கள் நம்பக் கூடிய நிலையும் ஏற்படும்.
அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உறுதியான முடிவை எடுக்க தவ்ஹீத் ஜமாஅத்துக்கு திராணி இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
பாஜகவுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று சொன்னதற்காக திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். அதன் பின்னர் சன் டிவியில் மோடிக்கு வாக்களிக்குச்சொல்லி விளம்பரம் வருகிறது. நம் மக்கள் திமுகவுக்கு வேலை பார்க்க மாட்டோம் என்று சொன்னபோது உடன்பாடு இல்லாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லும் நிலை ஏற்பட்டது.
இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதைக் கவனித்து முடிவை மாற்ற வேண்டும். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மாற்றாவிட்டாலும் வேறு விமர்சனத்துக்கு உள்ளாக நேர்கின்றது.
நாளுக்கு ஒரு நிலைப்பாடும் கொள்கையும் உள்ளவர்களை ஆதரிக்கப் புகுந்தால் நாமும் நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலைதான் ஏற்படும்.
இந்தக் காரணமும் முன் வைக்கப்பட்டது.
மூன்றாவ்து காரணம்
மார்க்க விஷயத்தில் நாம் அடித்துப் பேசுவதுபோல் இந்த விஷயத்தில் உறுதியான வாதங்களை வைக்க முடியவில்லை.
குறிப்பிட்ட காரணத்துக்காக நாம் திமுக அல்லது அதிமுக ஆதரவு நிலை எடுத்தால் அதை நூறு சதவிகிதம் நியாயப்படுத்தும் நிலை இருக்காது.
நாம் திமுகவை ஆதரிக்கும்போது திமுகவின் துரோகங்களைப் பட்டியல் போட்டு நாம் தவறான முடிவு எடுத்து விட்டது போல் காட்ட பல இயக்கங்கள் உள்ளன.
அதிமுகவை ஆதரிக்கும் போதும் இதே நிலை தான் ஏற்படுகிறது.
எந்த முடிவை எடுத்தாலும் அதுதான் சரியானது என்று உறுதியாக நிலைநாட்ட மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.
இதுவும் கவனத்தில் கொள்ளப் பட்டது.
நான்காவது காரணம்
யாருக்கு ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஜமாஅத் தனக்காகவோ, ஜமாஅத்தின் தலைவர்களுக்காகவோ எந்த ஆதாயத்தையும் அடைந்ததில்லை. பணமோ, பதவிகளோ, இன்னபிற சலுகைகளோ நாம் அடைந்தது இல்லை. வெளிப்படையாக நமது செயல்பாடுகள் இருந்தாலும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியே வருகின்றது.
அனைவரும் பணம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவதால் தவ்ஹீத் ஜமாஅத்தும் அப்படித்தான் நடக்கும் என்ற பொதுவான கருத்துக்குள் நம்மையும் அடக்கி விடுகிறார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்துடன் அதிகத் தொடர்பு இல்லாத தவ்ஹீத் ஆதரவாளர்கள்கூட ”இருந்தாலும் இருக்கும்” என்று கூறி தலையாட்டுவதை நாம் அறியாமல் இல்லை.
நாம் எவரிடமும் எவ்வித ஆதாயமும் அடையாமல் இருந்தும், அதுபோல் ஒரு விமர்சனத்துக்கு, நாம் ஏன் ஆளாக வேண்டும்?
இந்தக் கருத்தும் முன்வைக்கப் பட்டது.
ஐந்தாவது காரணம்
ஒரு கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து நாம் பிரச்சாரம் செய்வது நம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மன மாற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஏன் நாமே போட்டியிடக் கூடாது என்ற அளவுக்கு கீழ்மட்டத்தில் பேசப்படுவதையும் நாம் அறிகிறோம்.
இஸ்லாமிய ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நாம் நேரில் களத்தில் குதிக்க வேண்டும் என்று உளறுவோரும் உருவாகின்றனர். இந்தத் தேர்தல் முறையில் நாம் போட்டியிட்டு இஸ்லாம் கூறும் அரசியலை நடத்த முடியாது என்ற சிந்தனைகூட இல்லாமல் போய் விடுகின்றது.
ஆதரவு நிலையே இல்லை எனும்போது இதுபோன்ற பேச்சுக்கு அறவே இடமில்லாமல் போய் விடும்.
ஆறாவது காரணம்
தேர்தல் பணி செய்யும்போது நம் காசில் வேலை செய்ய முடியாது. அரசியல் கட்சிகளின் செலவில்தான் நாம் வேலை செய்ய முடியும். இதற்காக அரசியல்வாதிகளை அணுகும்போது மிகுந்த சுய மரியாதையுடனும் கண்ணியத்தைக் காத்துக் கொள்ளும் வகையிலும் அதிகமான மாவட்ட கிளை நிர்வாகிகள் நடந்து கொண்டாலும் சிலர் அவ்வாறு நடப்பதில்லை.
வேட்பாளரிடம் பணம் வாங்குவதற்கு முன் அதுகுறித்த பட்ஜெட்டை தலைமைக்கு அனுப்ப வேண்டும். தலைமை அங்கீகரித்த பட்ஜெட்டைத் தான் வேட்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினோம்.
உதாரணமாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஒரு லட்சம் ஆகும் என்றால் மூன்று லட்சம் என்று வேட்பாளரிடம் பட்ஜெட்டைக் கொடுத்தால் நம் ஜமாஅத்தின் நற்பெயர் பாதிக்கும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்ட்து.
ஆனால் இதை அனைவரும் கடைப்பிடிக்கவில்லை. பணம் வாங்கினால் எவ்வளவு வாங்கப்பட்டது என்பது தலைமைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதையும் சிலர் கடைப்பிடிக்கவில்லை.
வேட்பாளர்தான் நமது அலுவலகம் வந்து ஆதரவு கேட்க வேண்டும். நாம் அவர்களைத் தேடிச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும், அதுவும் சிலரால் மீறப்பட்டது.
தியாகம், அர்ப்பணிப்பு என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைச் சகோதரர்கள் அந்த உயர் பண்பை இழப்பதற்கு இது காரணமாக ஆகிவிடுகின்றது.
ஏழாவது காரணம்
நம்முடைய மர்கஸ்களில் தொழவரும்
சகோதர்ர்களில் திமுகவாக இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் அதிமுகவாக
இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். அதிமுக ஆதரவு நிலை
எடுத்தால் அன்று முதல் திமுக ஆதரவு முஸ்லிம்கள் பள்ளிக்கு வருவதில்லை.
திமுக ஆதரவு நிலை எடுத்தாலும் இதே நிலை தான்.
தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமுதாய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜும்மாவுக்கு நமது பள்ளிக்கு வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதில்லை என்ற முடிவை நாம் எடுக்கும்போது அவர்கள் தவ்ஹீதைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது.
எட்டாவது காரணம்
ஏகத்துவக் கொள்கைக்காக நாம் பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டோம். இதற்கு அல்லாஹ்விடம் கூலி உள்ளது என்பதால் அதை நாம் பொருட் படுத்தவில்லை. அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு கலங்காமல் பணியாற்றி வருகிறோம்.
கொள்கைக்காக மோதிக் கொள்வதில், மார்க்கதிற்கு முரணான வைகளைக் கண்டிப்பதற்காக நமக்குள் சண்டை ஏற்பட்டாலும் ஒற்றுமை குலைகிறது என்று பலர் கூப்பாடு போட்டாலும் அதனால் நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதற்காக நாம் போட்டுக் கொள்ளும் சண்டை நிச்சயமாக நமக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.
மார்க்கத்திற்காக தவிர வேறு எந்தச் சண்டையும் வேண்டாம் என்றால் இந்த அரசியல் முஸீபத்தில் இருந்து முற்றாக விலக வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.
ஒன்பதாவது காரணம்
தேர்தல் களத்தில் இறங்கி விட்டால் சுமார் 40 நாட்கள் நமது தாவா (பிரச்சாரப்) பணிகள் நிறுத்தப்படுகிறது. இதுவே முழு நேர வேலையாக ஆகின்றது.
பத்தாவது காரணம்
அமைச்சர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் ஏற்பட்ட தொடர் பையும், நட்பையும் தமது சுய நலனுக்குப் பயன்படுத்தும் எண்ணம் சிலருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும் உள்ளது.
இதுபோல் பல காரணங்கள் விபரமாக எடுத்து வைக்கப்பட்டன. இன்ஷா அல்லாஹ் இந்தக் காரணங்கள் விரிவாக நமது பொதுக்குழுவில் வைக்கப்படும்போது உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
அப்படியானால் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன செய்வது என்ற கேள்வியும் பரிசீலிக்கப்பட்டது.
நம்முடைய கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி நாம் போராட்டம் நடத்தலாம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு நீங்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கலாம். கோரிக்கை நிறைவேறாவிட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று பொதுவான எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளலாம்.
எங்கள் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லாமல் நீங்கள் நல்லது செய்து எங்கள் மக்களை வென்றெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். இதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்கலாம்.
மக்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசியல்வாதிகள் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்வார்கள்.
போராட்டத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் அறிவிப்பு செய்யப்படாது; தேர்தல் நெருக்கத்திலும் செய்யப்படாது எனும்போது இப்போது கூடுவதை விட அதிக அளவில் மக்கள் திரள்வார்கள். நம் கோரிக்கை இறைவன் அருளால் சரியான முறையில் சென்று சேரும் என்று கருதுகிறோம்.
நன்றி: உணர்வு கேள்வி பதில்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.