இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!
குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான்.
முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை கொடுத்து இந்துக்கள் பகுதியில் சொத்து வாங்குவார்கள். பிறகு பாதி விலையில் வாங்குவார்கள். முஸ்லிம்களின் இந்த சதித்திட்டத்தை இரு வகைகளில் முறியடிக்க வேண்டும்.
1. அரசாங்கம் கலவரப் பகுதி சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அசையா சொத்துக்களை அந்தப் பகுதி மக்கள் விற்க முடியாது.
2. முஸ்லிம்கள் வாங்கிய அந்த வீட்டில் பஜ்ரங்தளம் என்று அறிவிப்புப் பலகை வைத்து, பலவந்தமாக அந்த வீட்டைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் சட்டரீதியிலான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவி வெறியன் தொகாடியா பேசிய பேச்சாகும்.
"48 மணி நேரத்திற்குள் அந்த முஸ்லிம் வியாபாரி வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் வீட்டைச் சூறையாடுவோம்; கொளுத்துவோம். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கே இந்த நாட்டில் தூக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. அதனால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை'' என்று தொகாடியா தனது கொடிய விஷத்தைக் கக்கியுள்ளான். இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் அவன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பாவ்நகர் காவல் நிலையத்தில் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
19.04.2014 சனிக்கிழமை அன்று பாவ்நகரில் தொகாடியா தனது வெறிப்பேச்சைக் கொட்டினான். அதற்கு முந்தைய நாள் 18.04.2014 அன்று பீகார் மாநில பாஜக தலைவரும், நவாடா தொகுதி வேட்பாளருமான கிரிராஜ் சிங் என்பவன் ஜார்கண்ட் மாநிலம், பொகாரேயில் உரையாற்றும் போது, "மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் பாகிஸ்தான் சென்றுவிடலாம்'' என்று விஷம் கக்கியிருக்கின்றான். இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை, கல்யாணில் நடந்த பேரணியில் நரேந்திர மோடி முன்னிலையில் சிவசேனாவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ராமதாஸ் கடம் என்பவன் பேசும் போது, "மோடி பதவியேற்ற ஆறு மாதத்தில் பாகிஸ்தானை அழித்துவிடுவார்'' என்று உறுதி கூறினான்.
அஸ்ஸாம், மியான்மர் படுகொலைகளைக் கண்டித்து ஆகஸ்ட், 12, 2012ல் மும்பை ஆசாத் மைதானத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. இதன் எதிரொலியாக காவல்துறை வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பெண் காவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய ராமதாஸ் கடம், "ஆட்சிக்கு வந்ததும் மோடி இதற்குப் பழிக்குப் பழி வாங்குவார்'' என்று மோடியை வைத்துக் கொண்டே பேசினான். மோடியும் அதைக் கண்டிக்கவில்லை. இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியாகி, வேறு வழியில்லாத நிலையில் தான் தேர்தல் ஆணையம் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற வெறிப்பேச்சுக்களை சங்பரிவார்கள் விஷமாகக் கக்கியிருக்கின்றார்கள். அவற்றுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவை அனைத்தும் நமக்குத் தெரிவிப்பது என்ன? முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது; அவர்களைத் துரத்திவிட வேண்டும்; அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் சங்பரிவார்கள் வெறியாய் இருப்பதைத் தான் காட்டுகின்றது.
வரலாற்றுரீதியாக இந்த வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு அந்நிய வார்த்தைகள் அல்ல. புதிய வார்த்தைகள் அல்ல. இவை இறைத்தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இதைத் திருக்குர்ஆனில் நாம் பார்க்கலாம்.
"உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். "அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
(அல்குர்ஆன் 14:13,14)
இறைத்தூதர்களுக்கு எதிரிகள் வைத்த அந்த நிபந்தனைகளைத் தான் இன்று இந்துத்துவா சக்திகள் இந்திய முஸ்லிம்களை நோக்கி வைக்கின்றனர். எங்களுடன் இரண்டறக் கலந்து விடு அல்லது அழிந்து விடு என்ற இரண்டு நிபந்தனைகளைத் தான் வைக்கின்றார்கள். இந்து மதத்தில் ஐக்கியமாகிவிட்டால் அவர்கள் நம்மை விட்டுவிடுவார்கள்.
அந்த அடிப்படையில் தான் பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியிருக்கின்றார்கள். இதற்கு நாம் கட்டுப்படாவிட்டால் நம்மை நாட்டை விட்டு விரட்டுவோம் அல்லது குஜராத்தில் கொன்று, கொளுத்தியது போன்று கொளுத்துவோம் என்கிறார்கள்.
நாம் தூய இஸ்லாமியக் கொள்கையில் வாழ்ந்தால் இவர்களால் ஒருபோதும் நம்மை நாட்டை விட்டு விரட்டமுடியாது. மாறாக அவர்களே அழிந்துபோவார்கள் என்பதைத் திருக்குர்ஆனின் இந்த வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
இங்கே ஒரு கேள்வி எழலாம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் போன்று ஏகத்துவவாதிகள் இல்லையே! பரேலவிகள், கப்ரு வணங்கிகள், சூபிகள் என இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தானே இருக்கிறார்கள்? இவர்கள் எப்படி முஸ்லிம்கள் என்ற கணக்கில் வருவார்கள் என்பது தான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வி சரியானது தான். ஆனால் எதிரிகள் பார்ப்பது கப்ரு வணங்கிகளான முஸ்லிம்களை அல்ல. குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவத்தையும், இஸ்லாத்தையும் தான் பார்க்கிறார்கள். அந்தக் குர்ஆனை ஏற்றவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் சரி! கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்தாலும் சரி! அவர்கள் இந்தப் பூமியை விட்டு, நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் எதிரிகளின் பார்வையில் உள்ளது.
இங்கு வாழும் முஸ்லிம்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில், தூய இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்தால் இந்தப் பூமி நிச்சயமாக ஏகத்துவவாதிகளுக்குச் சொந்தமாகிவிடும். ஆனால் அது சாதாரணமாகக் கிடைத்துவிடாது. அதற்கென்று சில விலைகளைக் கொடுத்தாக வேண்டும். அல்லாஹ் வைக்கின்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டும். அதில் பொறுமை காக்க வேண்டும்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
(அல்குர்ஆன் 2:214)
நபித்தோழர்கள் அப்படித் தான் பொறுமை காத்தார்கள். இந்தச் சோதனையின்போது அதற்குத் தலைமை தாங்குகின்ற இறைத்தூதர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
(அல்குர்ஆன் 2:144)
இறைத்தூதர்கள் கொல்லப்பட்டாலும் கொள்கை நீடிக்கும். அதற்கான இறை உதவியும் நீடிக்கும்.
(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 40:77)
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தான் இறுதி வெற்றி கிடைக்கும். அதாவது, அல்லாஹ்வின் வேதத்திற்கும் அவனது தூதர்களின் போதனைக்கும் தான் இறுதி வெற்றி! இந்தக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான்.
நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள்.
(அல்குர்ஆன் 37:171-173)
"நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்'' என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 58:21)
இதற்கு ஒரே நிபந்தனை, இந்தச் சோதனையில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயம் ஃபிர்அவ்னை விட ஒரு கொடியவனைச் சந்தித்திருக்க முடியாது. இறை நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரவேல் சந்ததியினரை ஃபிர்அவன் வெட்டிக் கருவறுத்தான். அப்போது மூஸா (அலை) அவர்கள் சொன்ன அறிவுரையும் ஆறுதலும் இது தான்.
"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் 7:128, 129)
மூஸா நபியின் சமுதாயத்தினர் பொறுமை காத்தனர். அதற்குரிய பலனை அடைந்தனர்.
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.
(அல்குர்ஆன் 7:137)
மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் ஃபிர்அவ்ன் வெறியேற்ற நினைத்தான். ஆனால் வல்ல அல்லாஹ் அவனை அழித்தான்.
அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!
(அல்குர்ஆன் 7:103)
நாளை ஆட்சியைப் பிடிக்கப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் மோடியைப் பற்றி ஓர் அச்சம் இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உள்ளது. ஃபிர்அவ்னை விட இந்த மோடி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மோடி என்ன ஆட்டம் போட்டாலும் அது இஸ்லாமிய சமுதாயத்தைப் பாதிக்காது. மாறாக அவர்களைக் கொள்கை ரீதியாக அது ஒன்றுபடுத்தும், உறுதிப்படுத்தும்.
ஈமானிய அடிப்படையில் மோடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற போது இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத் தான். அப்போது இந்தப் பூமி அநியாயக்காரர்களுக்கு அல்ல, ஏகத்துவவாதிகளுக்குத் தான் என்பது உறுதியாகிவிடும். அந்த வெற்றி நாளைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
(அல்குர்ஆன் 3:139)
இங்கே பரேலவிகளுக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேம். இந்துத்வா நம்மை அழிக்க வரும்போது ஏகத்துவவாதிகளை மட்டும் குறிவைத்து அழிக்கப்போவதில்லை. முஸ்லிம் என்று பெயரளவில் இருந்தால் போதும். இஸ்லாத்தின் அடையாளங்களான தாடி, கத்னா, புர்கா போன்றவை இருந்தால் போதும். அவை அவர்கள் அழிப்பதற்குரிய ஆதாயத் தடயங்கள் ஆகும்.
கொள்கையில் பரேலவிகள் என்பதால் அவன் விட்டுவைக்கப் போவதில்லை. அவனுக்குத் தேவை நீங்கள் குர்ஆனை நம்புவதாகக் கூறினால் போதும். உங்களைக் கொளுத்திப் போட்டுவிடுவான். எனவே நீங்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின்பால் திரும்பிவிடுங்கள் என்ற அழைப்பையும் எச்சரிக்கையையும் விடுத்துக் கொள்கிறோம்.
நன்றி: ஏகத்துவம்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.