'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.
குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்:
தொடரும், இன்ஷா அல்லாஹ்
முன்னுரை:
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.
பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிமாக இருந்தால் குழந்தைகளும் பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்டக் குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்லக் குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.
"ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)
எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.
குழந்தைகளை பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத்தான் செய்கின்றன. பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.
பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.
திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையை கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.
அல்குர்ஆன் (37 : 102)
பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (10202)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)
ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.
எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!'' என்று (ஸக்கரிய்யா) கூறினார்.
அல்குர்ஆன் (19 : 6)
ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
அல்குர்ஆன் (3 : 38)
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (25 : 74)
நம்பிக்கை இழந்து விடக்கூடாது:
குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.
குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் (42 : 49)
இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.
ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!
அல்குர்ஆன் (19 : 4)
பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது:
பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் (16 : 58)
பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
அல்குர்ஆன் (81 : 8)
பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (5127)
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “"இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (1418)
"யார் இந்தப் பெண் குழந்தைகüல் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்தி-ருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5995)
குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்:
பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.
அல்குர்ஆன் (6 : 137)
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
அல்குர்ஆன் (6 : 140)
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன் (6 : 151)
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
அல்குர்ஆன் (17 : 31)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (60 : 12)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல் : புகாரி (5975)
நபி (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (6857)
குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல்' (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (5209)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2606)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2610)
மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (2542)
தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிûடாயாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.
தற்காலிக குடும்பக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குழந்தை பிறப்பதை தவிர்த்துக்கொள்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.
அதிகமானக் குழந்தைகளை பெற்றெடுப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும். அதிகக் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களை திருமணம் செய்யுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)
நூல் : நஸயீ (3175)