குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-2) - ஒரே இறைவன் தான் இருக்கிறான்
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:163
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 4:171
'மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
திருக்குர்ஆன் 5:73
'அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்' என்று நீர் கூறுவீராக! 'வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:19
'வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?' என்று கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 13:16
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும்,வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)
திருக்குர்ஆன் 14:52
உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.
திருக்குர்ஆன் 16:22
'இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!' என்று அல்லாஹ் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 16:51
'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:110
'உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 21:108
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.
திருக்குர்ஆன் 37:4,5
'நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். மிகைத்தவன்; அதிகம் மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 38:65,66
'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 41:6
'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:1-4
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.